Published : 27 Nov 2019 09:33 AM
Last Updated : 27 Nov 2019 09:33 AM

இந்தப் பாடம் இனிக்கும் 21: அறிவை விரிவு செய்யும் நூல்கள்

ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலில் 'அறிவை விரிவு செய்' பகுதியில் பல நூல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நூல்களைப் பள்ளி சார்பிலோ ஆசிரியர்களோ வாங்கி வாசித்து, மாணவர் களின் அறிவை விரிவுபடுத்தலாம். மாணவர்களிடம் இந்த நூல்களைக் கொடுத்து வாசிக்க வைத்து, கருத்துச் சொல்லவோ எழுதவோ வைக்கலாம். அவற்றில் குறிப்பிடத்தக்க சில நூல்கள் குறித்த விவரம்:

முதல் ஆசிரியர், சிங்கிஸ் ஐத்மாத்தவ், பாரதி புத்தகாலயம்.

பழைய ரஷ்யாவின் கிர்கிஸ்தானில் பழமைவாதம் நிறைந்த ஒரு பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்க வருகிறார், செஞ்சேனையின் முன்னாள் ராணுவ வீரர். அங்கு அவர் சந்திக்கும் சவால்கள், எப்படி அவற்றில் வெற்றியடைகிறார் என்பதைக் குறித்த புகழ்பெற்ற கதை.

அப்பா சிறுவனாக இருந்தபோது, அலெக்சாந்தர் ரஸ்கின், என்.சி.பி.எச்.

நாம் எல்லோருமே குழந்தைகளாக இருந்தபோது அடம் பிடிக்கக்கூடியவர்களாக, சேட்டை செய்யக்கூடிய வர்களாக, குழந்தைத்தனமாகப் பல செயல்களைச் செய்திருப்போம். அவற்றை எல்லாம் நகைச்சுவையாகவும் சுவாரசியமாகவும் சொல்லும் கதைகள்.

இருட்டு எனக்குப் பிடிக்கும், ச. தமிழ்ச்செல்வன், வாசல்.

அறிவியல், வரலாறு, சமூகம் எனப் பல துறைகள் சார்ந்து நம்மிடையே மூடநம்பிக்கைகள், புறக்கணிப்புகள் நிலவுகின்றன. அவற்றைக் குறித்து சிறார் இடையே திறந்த மனத்துடன் உரையாடும் கட்டுரைகளைக் கொண்ட குறிப்பிடத்தக்க நூல்.

அஞ்சல்தலைகளின் கதை, எஸ்.பி. சட்டர்ஜி, நேஷனல் புக் டிரஸ்ட்.

வாட்ஸ்அப், மின்னஞ்சல் ஆதிக்கம் செலுத்தும் இந்தக் காலத்தில் கையால் எழுதப்பட்ட கடிதங்கள், அந்தக் கடிதங்கள் சுமந்து வரும் விதம்விதமான அஞ்சல்தலைகளைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரியாது. குழந்தைகளின் சேகரிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும் அறிவை மேம்படுத்தவும் பயன்பட்ட அஞ்சல்தலைகள் குறித்து இந்த நூல் பேசுகிறது.

ஏன்? எதற்கு? எப்படி? சுஜாதா, விகடன்.

1990-களில் அறிவியல், பொது அறிவு குறித்த ஆர்வம் தமிழகத்தில் பரவலாக இல்லை. அந்தக் காலத்தில் இது சார்ந்த தகவல்களைச் சுவாரசியமான மொழிநடையில் அறிமுகப்படுத்தியது இந்த நூல்.

அழகின் சிரிப்பு, பாரதிதாசன்.

இயற்கையைக் கொண்டாடிய தமிழ்ப் பண்பாட்டின் பின்னணியில், இயற்கையின் அழகை ரசித்து அனுபவித்தும், விதந்தும் பாடுவது தமிழ் புலவர் மரபு. கடந்த நூற்றாண்டில் இயற்கையின் அழகு எப்படிக் கொண்டாடப்பட்டது என்பதற்கு அடையாளமாகத் திகழ்கிறது பாரதிதாசனின் இந்த நூல்.

இலவச மின்னூல்: https://bit.ly/2qHIY11

மழைக்காலமும் குயிலோசையும், மா. கிருஷ்ணன், காலச்சுவடு.

1940-50களிலேயே அறிவியல் நோக்கில் இயற்கையைப் பற்றித் தமிழில் எழுதத் தொடங்கினார், நாடறிந்த இயற்கை ஆராய்ச்சியாளர் மா. கிருஷ்ணன். இயற்கை, சுற்றுச்சூழல் குறித்த நவீன இயக்கங்கள் பேசுவதற்கு முன்பே, அதற்கு அடித்தளம் இட்ட அவருடைய எழுத்தின் தொகுப்பே இந்த நூல்.

தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள், க. ரத்னம், தமிழினி.

'தமிழகப் பறவைகள்', 'தென்னிந்தியப் பறவைகள்' எனப் பறவைகளை இயற்கை அறிவியல் நோக்கில் அறிமுகப்படுத்திய நூல்களை எழுதியவர், பல பறவைகளுக்குத் தமிழ்ப் பெயரும் கொடுத்தவர் புலவர் க. ரத்னம். அவர் எழுதிய நூல் இது.

தண்ணீர் தண்ணீர், கோமல் சுவாமிநாதன், வானதி.

1980-களிலேயே தண்ணீர் பற்றாக்குறை எப்படித் தமிழக கிராமம் ஒன்றைப் புரட்டிப் போடுகிறது என்பதைப் பற்றிய இந்த நாடகம் புகழ்பெற்றது. பல முறை மேடை கண்டுள்ள இந்த நாடகம், வெற்றிகரமான திரைப்படமாகவும் ஆக்கப்பட்டுள்ளது.

கையா, உலகே ஒரு உயிர், ஜேம்ஸ் லவ்லாக் (தமிழில்: சா.சுரேஷ்), பாரதி புத்தகாலயம்.

உலகில் உள்ள தாவரங்கள், உயிரினங்கள் என உயிருள்ள அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டுள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து உலகையே ஓர் உயிராகச் செயல்பட வைக்கின்றன என்ற கொள்கையை முன்மொழிந்த சூழலியல் அறிவியலாளர் ஜேம்ஸ் லவ்லாக்கின் புகழ்பெற்ற நூலின் தமிழ் வடிவம்.

தொல்லியல் நோக்கில் சங்க காலம், கா. ராஜன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

கீழடி அகழாய்வுக் கண்டறிதல்களைத் தொடர்ந்து தமிழகத்தின் சங்க காலம் குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்தப் பின்னணியில் முந்தைய தொல்லியல் தரவுகளின் அடிப்படையில் சங்க காலம் குறித்து விவரிக்கிறது முக்கியத்துவம் வாய்ந்த இந்த நூல்.

இலவச மின்னூல்: https://bit.ly/35qSQuK

தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும், மா. இராசமாணிக்கனார், செண்பகா பதிப்பகம்.

தமிழக வரலாற்றுப் பின்னணியில் தமிழ்க் கலைகள், தமிழர் பண்பாடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்துக் கடந்த நூற்றாண்டில் அதிகம் எழுதியவர் தமிழறிஞர் மா. இராசமாணிக்கனார். அவருடைய குறிப்பிடத் தக்க இந்த நூல் வரலாற்றுப் பின்னணியில் தமிழர் பண்பாட்டை விவரிக்கிறது.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், ராபர்ட் கால்டுவெல், பாரி நிலையம்.

திராவிட மொழிகள் அனைத்தும் ஒரு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை, இவற்றுக்கும் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்துக்கும் தொடர்பில்லை என்பதை நிறுவிய நூல். திராவிட இனமும் அதன் மொழிகளும் தனித்தவை என்பது குறித்த தொல்லியல், பரிணாமவியல் ஆதாரங்கள் தற்போது கிடைத்துவரும் நிலையில், மொழியியல் ரீதியில் இந்த நூல் அதை முதலில் உறுதிப்படுத்தியது.

இலவச மின்னூல்: https://bit.ly/33ibzHw

தமிழ்நடைக் கையேடு, அடையாளம்.

தமிழ் உரைநடைக்கென்று தனி இலக்கணம் திட்டவட்டமாக வரையறுக்கப்படவோ பரவலாக்கப்படவோ இல்லை. அந்தக் குறையைப் போக்கும் வகையில் தமிழை எழுதும் முறை, வாக்கிய அமைப்பு, சொற்களைத் தரப்படுத்துதல் போன்ற அம்சங்களில் கவனம் செலுத்தும் நூல் இது.

இலவச மின்னூல்: https://bit.ly/2KO6Kiz

ஆசிரியரைக் கவர்ந்த நூல்

ஒன்பதாம் வகுப்புத் தமிழ் பாடநூலில் வெளியாகியிருக்கும் 'அறிவை விரிவு செய்' நூல்களில், தனக்குப் பிடித்த நூல் குறித்து கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேனிலைப் பள்ளித் தமிழாசிரியர் ரா. தாமோதரன் பகிர்ந்துகொள்கிறார்:

இயல் நான்கில் 'கல்வியில் சிறந்த பெண்கள்' என்ற பாடம் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடத்தில் வரும், “பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி அதற்காகப் போராடிய வீரச்சிறுமி மலாலா, நோபல் பரிசு வாங்கினாங்க தெரியுமா!” என்ற வரிக்காக, ஆயிஷா நடராசன் எழுதிய 'மலாலா-கரும்பலகை யுத்தம்' புத்தகத்தை வாசித்த பின்பே பாடம் நடத்தினேன். தற்காலத்தில் பெண் கல்விக்கான புரட்சியாளராகவே மலாலா யூசுப்ஸாய் என்கிற தன்னலமற்ற அந்தச் சிறுமி திகழ்கிறார்.

பள்ளிகளுக்குத் தலிபான் பயங்கரவாதிகள் விதித்த தடை, அதை எதிர்த்து, 'எனக்குக் கல்வி வேண்டும். நான் படிக்க வேண்டும். பெண் கல்வியைப் பறிக்கத் தாலிபான்கள் யார்?' என்று, உலக மக்கள் உணரும்படி பல குறிப்புகளை மலாலா தொடர்ந்து எழுதினார். பிறகு பள்ளியிலிருந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் தலிபான்களால் சுடப்பட்டார். இவற்றைப் பற்றி மட்டுமில்லாமல் வலைப்பூ (பிளாக்), இணையம் (வெப்), மின்னஞ்சல் (மெயில்) பற்றிய மாணவர்களின் பல கேள்விகளுக்கு, இந்த நூலில் பதில்கள் உள்ளன. இவை அனைத்தையும் மாணவர்களுக்கு வாசித்துக்காட்டினேன்.

'மலாலா-கரும்பலகை யுத்தம்' நூலை மாணவர்களிடமும் வாசிக்கக் கொடுத்தேன். இந்த நூல் குறித்து மாணவி ஒருவர் எழுதித் தந்த விமர்சனத்தில், சுட்டிக்காட்டியிருந்த ஒரு வரி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது – 'பெண்கள் கல்வி கற்கக் கூடாது எனத் தடைசெய்ய தாலிபான்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்றார் மலாலா'. இதுபோதும் மலாலாவைப் புரிந்துகொள்ள.

- ஆதி, தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

இந்த வாரம்
ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலில் கொடுக்கப்பட்டுள்ள ‘அறிவை விரிவு செய்' பகுதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x