Published : 27 Nov 2019 09:33 AM
Last Updated : 27 Nov 2019 09:33 AM

திரைப்படம்: கடல் தாண்டும் இளவரசி

‘ஃப்ரோஸன்’ திரைப்படம் வெளியாகி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, ‘ஃப்ரோஸன் 2’ (தமிழ்) திரைப்படம் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர்கள் கிரிஸ் பக், ஜெனிஃபர் லீ ஆகிய இருவருமே இரண்டாம் பாகத்தையும் இயக்கி இருக்கிறார்கள். புகழ்பெற்ற வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவின் 58-ம் அனிமேஷன் படத் தயாரிப்பாக இது வெளிவந்துள்ளது. 1844-ம் ஆண்டு டென்மார்க்கைச் சேர்ந்த எழுத்தாளர் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் டேனிஷ் மொழியில் எழுதிய ‘தி ஸ்நோ குயீன்’ என்ற தேவதைக் கதையைத் தழுவியே இரண்டு பாகங்களும் எடுக்கப்பட்டுள்ளன.

எல்சா, அன்னா ஆகிய இரண்டு இளவரசிகளின் குழந்தைப் பருவத்திலிருந்து தொடங்குகிறது. ஆரெண்டல் ராஜ்ஜிய அரசரின் மகள்களாக இருவரும் மகிழ்ச்சியாக வளர்கிறார்கள். ஒருநாள், இரவு தூங்கச் செல்வதற்குமுன், இரண்டு இளவரசிகளுக்கும் அரசர், அருகில் இருக்கும் நார்த்துல்ட்ரா என்ற மந்திரக் காட்டில் தனக்குச் சிறுவயதில் ஏற்பட்ட அனுபவங்களைக் கதையாகச் சொல்கிறார்.

கடந்தகாலத்தில் ஆரெண்டல் ராஜ்ஜியத்தினருக்கும் நார்த்துல்ட்ரா இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் நடைபெற்ற போரின் காரணமாக நார்த்துல்ட்ரா மந்திரக் காடு தூங்கிக்கொண்டிருக்கிறது. அந்தக் மந்திரக் காடு விழித்துகொண்டால், ஆரெண்டலுக்கு ஆபத்து என்று சொல்கிறார் அரசர். தங்கள் தாயின் தாலாட்டுப் பாடல் மூலம், ஹட்டோல்லன் என்ற மாய நதியிடம்தான் தங்கள் ராஜ்ஜியத்தின் கடந்தகால ரகசியங்களுக்கான பதில்கள் கிடைக்கும் என்பதை இளவரசிகள் தெரிந்துகொள்கிறார்கள்.

கப்பல் பயணத்தின்போது நடந்த விபத்தில் தங்கள் பெற்றோரை இழக்கும் இரண்டு இளவரசிகளும் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள். அனைத்தையும் பனியாக்கும் ஆற்றல்கொண்ட இளவரசி எல்சாவுக்கு மட்டும் மந்திரக் காட்டிலிருந்து ஒரு மாயக் குரல் தொடர்ந்து கேட்கிறது. இளவரசிகளின் பனி நண்பன் ஒலாஃப், அன்னாவின் காதலன் கிறிஸ்டோஃப், அவனின் பனிக்கலைமான் ஸ்வென் என அனைவரும் மாளிகையில் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.

ஒருநாள், திடீரென்று தனக்குக் கேட்கும் மாயக் குரலைப் பின்தொடர்ந்து செல்லும் எல்சா, தூங்கிக்கொண்டிருந்த மந்திரக் காட்டை எழுப்பிவிடுகிறாள். மந்திரக் காட்டில் 34 ஆண்டுகள் தூங்கிக்கொண்டிருந்த நிலம், நீர், நெருப்பு, காற்று என நான்கு ஆன்மாக்களும் எழுந்தவுடன் ஆரெண்டல் ராஜ்ஜியத்தில் வாழும் மக்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. தங்கள் மக்களைக் காப்பாற்றி மலை உச்சியில் தங்கவைக்கும் இளவரசிகள், கடந்த கால ரகசியங்களுக்குப் பதில் கிடைக்காமல் ராஜ்ஜியத்தைக் காப்பாற்ற முடியாது என்பதை உணர்கிறார்கள்.

தான் மட்டும் தனியாக மந்திரக் காட்டுக்குச் செல்வதாகச் சொல்லும் எல்சாவின் மனத்தை மாற்றி, அன்னா, ஒலாஃப், கிறிஸ்டோஃப், ஸ்வென் ஆகியோரும் உடன்செல்கிறார்கள். தங்கள் ராஜ்ஜியத்தின் கடந்தகால ரகசியங்களைக் கண்டுபிடித்து ஆரெண்டல் மக்களை இளவரசிகள் எப்படிக் காப்பாற்றுகிறார்கள் என்பதை இந்தத் திரைப்படம் அழகாக, நகைச்சுவையாக, சுவாரசிியத்துடன் பதிவுசெய்துள்ளது. கடல்குதிரையை அடக்கி, கடல் தாண்டும் இளவரசி எல்சா, துணிச்சலுக்கு உதாரணமாகத் திகழ்கிறாள்.

- என். கௌரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x