Published : 26 Aug 2015 11:23 AM
Last Updated : 26 Aug 2015 11:23 AM
மரியா மாண்டிசோரி பிறந்த நாள்- ஆக. 31
இத்தாலி தலைநகர் ரோம் நகரத்திலிருந்த சான் லாரென்சோ இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஏழை மக்கள் பலர் 1900-களின் ஆரம்பத்தில் வாழ்ந்துவந்தனர். அங்கு வாழ்ந்த பெரியவர்களும் வளர்ந்த குழந்தைகளும் வழக்கம்போல் பகலில் வேலைக்கும் பள்ளிக்கும் சென்றுவிடுவார்கள். ஆனால், மூன்று வயது முதல் ஆறு வயதுவரையிலான குழந்தைகள் பகல் முழுக்க அந்தப் பகுதியில் சுற்றிக்கொண்டு, தங்கள் வயதுக்கே உரிய குறும்புகளையும் சேட்டைகளையும் செய்துகொண்டிருந்தார்கள்.
இதனால் அப்பகுதியில் இருந்த கட்டிடச் சுவர்களில் கிறுக்கப்பட்டிருந்தன, பல பகுதிகள் உடைக்கப்பட்டுச் சேதமடைந்திருந்தன. பகலில் அந்தக் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள யாரும் இல்லை. இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க, அந்தக் கட்டிடங்களின் நிர்வாகக் குழு 1906-ல் ஒரு முடிவெடுத்தது. சேட்டையும் குறும்புத்தனங்களும் நிரம்பிய குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள ஒருவரை நியமிக்கலாம் என்பதுதான் அந்த முடிவு.
புதிதாக நியமிக்கப்பட்ட அந்த பராமரிப்பாளர், பின்னாளில் உலகப் புகழ்பெற்ற கல்வியாளராக மாறிய டாக்டர் மரியா மாண்டிசோரி. சான் லாரென்சோவைச் சேர்ந்த 60 ஏழைக் குழந்தைகளைக்கொண்டே, உலகை மாற்றக்கூடிய புதிய கல்வி முறையை அவர் கண்டறிந்தார்.
இத்தாலியில் இருந்த மாண்டிசோரியின் அந்த மையத்துக்குப் பெயர் காசா டி பாம்பினி (குழந்தைகள் இல்லம்). குழந்தைகளுக்குப் புதிய முறையில் கல்வி அளிக்கும் பரிசோதனைகளை அங்கேதான் அவர் செய்து பார்த்தார்.
புதிய முயற்சி
முன்னதாக, மருத்துவப் பயிற்சி முடித்த பிறகு, ‘கல்வி கற்க முடியாத குழந்தைகள்' என்று ஒதுக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்குக் கற்பிக்கும் முயற்சியில் மாண்டிசோரி ஈடுபட்டார். அந்தக் குழந்தைகள், அனைத்துக் குழந்தைகளுக்குமான பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றதுடன், கூடுதல் மதிப்பெண்களும் பெற்று எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். அதுவே கற்பிப்பதில் மாண்டிசோரியின் முதல் முயற்சி. அந்த முயற்சிதான் காசா டி பாம்பினியில் அவருக்குக் கைகொடுத்தது.
காசா டி பாம்பினியில் அவர் மேற்கொண்ட பரிசோதனைகளில் கிடைத்த வெற்றி தொடர்பான செய்தி உலகெங்கும் பரவியது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆர்வலர்கள், தங்கள் நாட்டிலும் இதேபோன்ற குழந்தைகள் மையத்தை அமைக்க ஆர்வம் காட்டினார்கள். தொலைபேசியைக் கண்டறிந்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல்லும் அவருடைய மனைவி மாபெல் கார்டினர் ஹப்பார்டும், மாண்டிசோரி முறை தொடர்பாகப் பேசுவதற்கு அமெரிக்காவுக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தனர். தொடர்ந்து சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளில் தனது முறையைப் பற்றி நேரில் மாண்டிசோரி விளக்கிய பிறகு, அவருடைய கல்வி முறை பிரபலமடைய ஆரம்பித்தது.
எது கல்வி?
ஆசிரியர் கற்றுக்கொடுப்பதுதான் கல்வி என்பதில்லை என மாண்டிசோரி நம்பினார். கல்வி என்பது, ஒரு தனி மனிதன் தன்னிச்சையாக முன்னெடுக்கும் இயற்கைச் செயல்பாடு என்பது மாண்டிசோரியின் புரிதல். ஐம்புலன்கள் வழியாகவும் சுற்றுச்சூழலை அனுபவமாக உணரும்போதுதான், கற்கும் செயல்பாடு சாத்தியம் என்கிறார் மாண்டிசோரி.
அது மட்டுமல்லாமல், பெரியவர்கள் நினைப்பதுபோலக் குழந்தைகள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில்லை. ‘ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்கிறோம்' என்ற உணர்வு இல்லாமல்தான், புதிய புதிய விஷயங் களைக் குழந்தைகள் கற்றுக்கொள்கின்றனர். வலுக்கட்டாயமாக ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ளச் செய்வதற்குப் பதிலாக, ஒரு செயல்பாட்டை மகிழ்ச்சி யாகவும் பிடித்த மாதிரியும் இயல்பாகச் செய்து பார்த்து, செய்து பார்த்து மனதில் பதிவதுதான் உண்மையான கல்வி. குழந்தைகளிடம் குடிகொண்டிருக்கும் இயல்பான கற்றுக் கொள்ளும் ஆற்றல், ஒரு அற்புதமான விஷயம் என்கிறார் மாண்டிசோரி.
ஆடுவது, பாடுவது, திறந்தவெளியில் விளையாடுவது, கருவிகளைக் கொண்டு விளையாடுவது போன்றவை மாண்டிசோரி கல்வி முறையில் பின்பற்றப்படுகின்றன. வகுப்பறையில் ஒரு குழந்தை தனக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுத்து விளையாடலாம். தூங்க நினைத்தால் தூங்கலாம்.
சிறகு தரும் கல்வி
இப்படிக் குழந்தைகளை அவர்களுடைய இயல்புடன் மாண்டிசோரி புரிந்துகொண்டதற்குக் காரணம் இருக்கிறது. அவருடைய அம்மா ஒரு ஆசிரியை. அவருடைய அப்பா பெண்களுக்கு உயர்கல்வி அவசியம் என்று கருதியவர். அதன் காரணமாகவே இத்தாலியில் மருத்துவம் படித்த முதல் பெண் என்ற பெருமையை 1896-ல் மாண்டிசோரி பெற்றார்.
இத்தாலியில் முசோலினியின் சர்வாதிகார ஆட்சி நடைபெற்றதால் மாண்டிசோரி நாடு கடந்து வாழ்ந்தார். அப்படி அவர் வாழ்ந்த முக்கிய இடம், சென்னை அடையாறில் உள்ள தியசாபிகல் சொசைட்டி. இந்தியாவில் எட்டு ஆண்டுகளுக்குத் தங்கியிருந்த அவர், நாடு முழுவதும் ஆசிரிய-ஆசிரியைகளுக்கு மாண்டிசோரி முறையில் பயிற்சி அளித்தார். அப்படிப் பயிற்சி பெற்றவர்களில் ஒருவர்தான் குஜராத்தைச் சேர்ந்த ஆசிரியர் கீஜுபாய் பாத்கேகா. 1946-ல் ஜெய்ப்பூரில் நடைபெற்ற முதல் அகில இந்திய மாண்டிசோரி மாநாட்டிலும் பங்கேற்றார். ‘இந்தியா எனது இரண்டாம் வீடு' என்று தெரிவித்த மாண்டிசோரி, நோபல் அமைதிப் பரிசுக்காக மூன்று முறை பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்.
புகழ்பெற்ற விண்வெளி விஞ்ஞானி விக்ரம் சாராபாய், குழந்தை எழுத்தாளர் ஆன் ஃபிராங்க், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்குவெஸ், கூகுள் நிறுவனர்கள் லாரி பேஜ், செர்ஜெய் பிரின் உள்ளிட்டோர் மாண்டிசோரி முறையில் கற்றவர்கள்தான். இவர்கள் மட்டுமில்லை, இன்னும் லட்சக்கணக்கான குழந்தைகள் இன்றைக்கும் மாண்டிசோரி முறையில் கல்வி கற்கிறார்கள்.
சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகளாகக் குழந்தைகளை மாற்றுவதற்குப் பதிலாக, சிறகை விரித்து உலகின் ஆச்சரியங்களை அனுபவிக்க நூறாண்டுகளுக்கு மேலாக அவர்களுக்கு உதவிக்கொண்டிருப்பது மாண்டிசோரி, அவருடைய கல்வி முறையின் மிகப் பெரிய சாதனைதான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT