Published : 30 Oct 2019 01:44 PM
Last Updated : 30 Oct 2019 01:44 PM
ஆதி
தேசிய விலங்கு (புலி), தேசியப் பறவை (மயில்), தேசிய மரம் (ஆலம்), தேசிய மலர் (தாமரை) போன்றவற்றைப் பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருப்போம். மாநில விலங்கு, மாநிலப் பறவை, மாநில மரம், மாநில மலர், மாநில வண்ணத்துப்பூச்சி ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வோமா?
வரையாடு
தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடு (Nilgiri tahr - Nilgiritragus hylocrius), மலைப்பகுதிகளில் வாழக்கூடிய ஆட்டு வகையைச் சேர்ந்தது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே வாழும் சிறப்பு உயிரினங்களில் வரையாடும் ஒன்று. 4,000 அடி உயரத்துக்கு மேலுள்ள மலைமுகடுகளில் இது வாழ்கிறது. அழிந்துவரும் இந்த உயிரினம் தமிழ்நாடு, கேரளத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே உள்ளது.
காட்டு ஆடு இனத்திலேயே வரையாடு மிகப் பெரிய உடலமைப்பைக் கொண்டது. மற்றொரு காட்டு ஆட்டு இனமான ‘இமயமலை வரையாட்டை’விட இது சற்றே பெரிது. அதிலும் ஆண் வரையாடு, பெண் வரையாட்டைவிட இரண்டு மடங்கு உடல் எடை கொண்டது.
ஆண் வரையாட்டின் கொம்பு, பெண் வரையாட்டைவிட நீளமாக இருக்கும். வரையாடுகள் ஓய்வு எடுக்கும்போது, குழுவின் ஓர் உறுப்பினர் உயர்ந்த இடத்தில் நின்று காவல் காக்கும். ஆபத்து வருகிறது என்று தோன்றினால் விசில்போல ஒலி எழுப்பியோ உரக்கக் கத்தியோ எச்சரிக்கை விடுக்கும். சிறுத்தை, செந்நாய், புலி போன்ற விலங்குகள் வரையாடுகளை வேட்டையாடக் கூடியவை.
இன்றைய சூழ்நிலையில் 2,200-2,500 வரையாடுகள் மட்டுமே காடுகளில் எஞ்சியிருக்கின்றன. தேயிலை, காபி, யூகலிப்டஸ், சீகை (வாட்டில்) மரங்களுக்காக வரையாடுகள் வாழ்ந்த சோலைப் புல்வெளிகள் அழிக்கப்பட்டுவிட்டதாலும், வரையாடுகள் அதிகமாக வேட்டையாடப்பட்டதாலும் இந்த மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.
பஞ்சவர்ணப் புறா
தமிழக மாநிலப் பறவை பஞ்சவர்ணப் புறா (Emerald dove - Chalcophaps indica). இதற்கு மரகதப் புறா, பச்சைப் புறா என வேறு பெயர்களும் உண்டு. இந்தப் புறாவின் பின்பக்கமும் இறக்கைகளும் பளிச்சென்ற மரகதப் பச்சை நிறத்தில் இருக்கும் அதேநேரம், இதன் உடலில் ஐந்து நிறங்கள் உண்டு.
மாடப்புறாவின் உடல் அளவை ஒத்திருக்கும். ஓர் அடிக்கும் குறைவான நீளம் கொண்டது. மழைக் காடுகள், அதை ஒட்டிய தோட்டங்கள், பூங்காக்களில் இந்தப் பறவை காணப்படுகிறது. ‘கூ கூ கூ‘ என்ற ஒசையை எழுப்பும். தனியாகவோ ஜோடியாகவோ சிறு குழுக்களாகவோ இருக்கும். பெரும்பாலான நேரம் நிலப்பகுதிகளிலேயே வாழும். மண்ணில் விழுந்த பழங்கள், விதைகள், பல்வேறு தாவரப் பொருட்களைத் தேடிச் சாப்பிடும்.
பனை
தமிழக மாநில மரம் பனை (Palm tree - Borassus flabellifer). இது மர வகையைச் சேர்ந்தது அல்ல, புல் இனத்தைச் சேர்ந்தது. இதன் பழைய பெயர் போந்தை. சேர மன்னர்களின் சின்னம் என்ற பெருமை பனம்பூவுக்கு உண்டு. இயற்கையில் தானாகவே வளர்ந்து பெருகக்கூடியது. இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனேசியா, மியான்மர், தாய்லாந்து, வியட்நாம், சீனா போன்ற நாடுகளிலும், காங்கோ போன்ற மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் பனை மரம் இருக்கிறது.
பனை மரம் தரும் பலன்கள் கணக்கில் அடங்காதவை. அதனால் ‘கற்பகத்தரு’ என்று அழைக்கப்படுகிறது. பனங்கிழங்கைச் சுட்டோ அவித்தோ சாப்பிடலாம். பதநீர் மருத்துவக் குணங்களைக் கொண்டது. நுங்கு சூட்டைத் தணிக்கும். பனை மரம் வீடு கட்டப் பயன்படுகிறது. பனை ஓலை கூரை வேயவும் கூடை முடையவும் பாய் செய்யவும் பயன்படுகிறது.
செங்காந்தள்
தமிழக மாநில மலர் செங்காந்தள் (Gloriosa lily - Gloriosa superba). கார்த்திகைப்பூ என்று வேறொரு பெயரும் உண்டு. மருத்துவ வழக்கில் கண்வலிக்கிழங்கு அல்லது கலப்பைக் கிழங்கு எனப்படுகிறது.
ஆங்கில ‘வி’ வடிவில் இருக்கும் இதன் கிழங்கு, முக்கியமான மூலிகை. சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது. இந்தக் கிழங்கில் உள்ள கோல்சின், சூப்பர்பைன் ஆகிய இரண்டு வேதிப்பொருட்கள் மருத்துவக் குணம் கொண்டவை. வாதம், மூட்டுவலி, தொழுநோய் போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. முக்கியமான ஏற்றுமதிப் பொருளும்கூட. ஜிம்பாப்வே நாட்டின் தேசிய மலரும் செங்காந்தள்தான்.
இந்த வாரம்: ஏழாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில், ‘அணிநிழல் காடு’ என்ற இயலின்கீழ் ‘விலங்குகள் உலகம்’ உரைநடை உலகம் என்ற பகுதி. |
மலைச்சிறகன்
தமிழக மாநில விலங்கு, பறவை ஆகியவற்றோடு சமீபத்தில் இணைந்துள்ளது மாநில வண்ணத்துப்பூச்சி. இந்த வண்ணத்துப்பூச்சியின் ஆங்கிலப் பெயர் Tamil Yeoman, அறிவியல் பெயர் Cirrochroa thais. இதற்கு அரசு தமிழ் மறவன் என்று பெயர் வழங்கியிருந்தாலும், பூச்சியியலாளர்கள் இந்த வண்ணத்துப்பூச்சியை மலைச்சிறகன் என்றே அழைக்கிறார்கள். 'Yeomen' என்பதற்குப் போர் வீரன் என்றே பொருள்.
இந்த ஆரஞ்சு நிற வண்ணத்துப்பூச்சியின் இறகின் வெளிப்புறம் அடர் பழுப்பு நிறமாக இருக்கும். மேற்கு மலைத் தொடரில் வாழும் 32 வண்ணத்துப்பூச்சி வகைகளில் இதுவும் ஒன்று. இது கூட்டமாகவே வேறு இடங்களுக்குச் செல்லும் தன்மை கொண்டது.
தேசிய அளவில் வண்ணத்துப்பூச்சிக்கு மாநில அந்தஸ்து வழங்கிய ஐந்தாவது மாநிலம் தமிழகம். ஏற்கெனவே மகாராஷ்டிரம், உத்தராகண்ட், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் மாநில வண்ணத்துப்பூச்சியை அறிவித்துள்ளன.
கட்டுரையாளர் தொடர்புக்கு:
valliappan.k@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT