Published : 30 Oct 2019 01:18 PM
Last Updated : 30 Oct 2019 01:18 PM

ஸ்ரீ வள்ளியம்மாள் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, திருபாதிரிபுலியூர், கடலூர்.

‘ஆனந்தத்துடன் கற்றுக் கொள்ளும் எதையும் நாம் மறப்பதில்லை’ என்பதை நோக்கமாகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டது இந்தப் பள்ளி. கல்விப் பணியில் 25 ஆண்டுகளைக் கடந்து வெற்றிநடை போட்டுவருகிறது.

சிறப்பான கட்டமைப்போடு மிகப் பெரிய விளையாட்டு மைதானத்துடன் நகரின் மையப் பகுதியில் இயங்கி இருக்கிறது. மரங்கள் நிறைந்த இயற்கையான சூழல் இங்கே உருவாக்கப்பட்டிருக்கிறது. ப்ரீகேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை செயல்பாட்டுவழிக் கல்வியை அளிப்பதற்காக மாண்டிசோரி லேப் மற்றும் கணிதக் கூடம் போன்றவை செயல்படுத்தபட்டுள்ளன.

மாணவர்களின் தனித்திறன்களைக் கண்டறிந்து, அவற்றை ஊக்குவித்து, பயிற்சிகளையும் அளித்து வருகிறது. தொடர்ச்சியாக 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சி அளித்துவருகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப அறிவியல் சார்ந்த உலகத்தை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்களில் கற்பிக்கப்படும் முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. தன்னம்பிக்கையுடன் தன்னலமற்ற திறமையுள்ள மாணவர்களை உருவாக்குவதே இந்தப் பள்ளியின் நோக்கமாக இருக்கிறது.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, பள்ளிகுப்பம், வேலூர்.

போக்குவரத்து வசதிகூட அதிகம் இல்லாத குக்கிராமத்தில் அமைத்துள்ள இந்தப் பள்ளியில், பெரும்பாலும் ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளே பயிலுகின்றனர். மின் விசிறி, குடிநீர், கழிப்பறை, விளையாட்டு மைதானம் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

நிழல் தரும் மரங்கள், மலர் தோட்டம், காய்கறித் தோட்டம், மூலிகைத் தோட்டம் எனப் பசுமைப் பள்ளியாக இருக்கிறது. உரம் இன்றி அவரை, பூசணி, முருங்கை, மிளகாய், தர்பூசணி, வாழை, தூதுவளை, சிறு நெல்லி, நார்த்தங்காய் போன்றவற்றை மாணவர்களே பயிரிட்டு வருகின்றனர். காய்கறி அங்காடி அமைத்து, அவற்றைப் பொது மக்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விற்பனை செய்து, அதன் மூலம் பள்ளிக்குத் தேவையான பொருட்களை வாங்குகின்றனர்.

ஸ்மார்ட் வகுப்பறை, கணினி கல்வி, ஆங்கில நாளிதழ் வாசிப்பு, அகராதி பயன்படுத்துதல் போன்ற செயல்பாடுகளும் நடைபெறுகின்றன. 4 ஆண்டுவிழாக்கள், 3 விளையாட்டு விழாக்கள், சர்வதேச யோகா தினம் போன்றவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. களப்பயணங்களுக்கும் சுற்றுலாக்களுக்கும் மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

கலாம் கண்ட ’கனவுப் பள்ளி’ விருது இந்தப் பள்ளிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர்களின் கடின உழைப்பாலும், ஊர் பொதுமக்களின் ஒத்துழைப்பாலும் ஒன்றியத்திலேயே மாதிரிப் பள்ளியாகத் திகழ்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x