Published : 02 Oct 2019 12:47 PM
Last Updated : 02 Oct 2019 12:47 PM
மிது கார்த்தி
விண்வெளிக்கு ராக்கெட் பறப்பதைத் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். உங்கள் வீட்டிலேயே ஒரு ராக்கெட்டை விட்டுப் பார்க்கலாமா?
என்னென்ன தேவை?
பலூன்
உறிஞ்சுகுழல் (ஸ்டிரா)
நூல்
செல்லோ டேப்
எப்படிச் செய்வது?
* உறிஞ்சு குழலை 3 அல்லது 4 செ.மீ. அளவுக்கு வெட்டிக்கொள்ளுங்கள்.
* அதன் நடுவே செல்லோ டேப்பைச் சமமான அளவில் ஒட்டுங்கள்.
* 3 மீட்டர் நீளமான நூலை எடுத்துக் கொண்டு அதன் முனையை ஜன்னலின் மேலே கட்டிக்கொள்ளுங்கள். நூலை சாய்தளம்போல் வைத்துக்கொண்டு கீழே உட்கார்ந்துகொள்ளுங்கள்.
* நூலின் இன்னொரு முனையை உறிஞ்சுகுழல் வழியாக நுழைத்துக்கொள்ளுங்கள்.
* இப்போது உங்கள் நண்பரிடம் பலூனை ஊதச் சொல்லுங்கள் (பலூனை முடிச்சுப் போட வேண்டாம். விரலால் பிடித்துக்கொள்ளுங்கள்).
* உறிஞ்சுகுழலில் செல்லோ டேப் ஒட்டினீர்கள் அல்லவா? உறிஞ்சு குழலின் நடுவே ஒட்டியதுபோக இரண்டு பக்கமும் செல்லோடேப் நீண்டிருக்கும். அதை உறிஞ்சுகுழலுடன் சேர்த்து பலூன் மீது ஒட்டுங்கள் (பலூனிலிருந்து விரலை எடுத்துவிட வேண்டாம்).
* இப்போது ஊதப்பட்ட பலூனிலிருந்து உங்கள் விரலை எடுத்துவிடுங்கள். நடப்பதைக் கவனியுங்கள்.
* உறிஞ்சுகுழலுடன் சேர்ந்து பலூன் நூல் வழியாக மேல்நோக்கிப் பாய்ந்து செல்வதைப் பார்க்கலாம். பலூன் முன்னேறிப் பாய்ந்தது எப்படி?
காரணம்?
பலூனை ஊதிய பிறகு அதனுள் அதிக அழுத்தத்தில் காற்று இருக்கும். பலூனிலிருந்து விரலை எடுக்கும்போது அதனுள் அமுக்கப்பட்ட காற்று அதிக விசையுடன் பலூனின் வாய் வழியாக வெளியேறும். இந்த இடத்தில்தான் ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை உண்டு என்ற நியூட்டனின் மூன்றாவது இயக்க விதி செயல்படுகிறது. இந்த விதியின்படி பலூனிலிருந்து காற்று வெளியேறும் திசைக்கு எதிர்திசையில் பலூன் வேகமாகச் சீறிச் செல்கிறது.
பயன்பாடு
விண்வெளிக்குப் பறக்கும் ராக்கெட்டுகள், ராணுவத்தினர் ஏவும் ஏவுகணைகள் நியூட்டனின் மூன்றாவது விதிப்படிதான் செயல்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT