Last Updated : 08 Jul, 2015 11:32 AM

 

Published : 08 Jul 2015 11:32 AM
Last Updated : 08 Jul 2015 11:32 AM

கிரேயானில் மந்திர ஜாலம்

மேஜிக் என்றால் உங்களுக்குப் பிடிக்குமா? மேஜிக்காரர் போல மாயாஜாலங்களைச் செய்து உங்கள் நண்பர்களை அசத்த உங்களுக்கும் ஆசையா? அப்போ, எளிமையான மேஜிக்குகளை கற்றுக்கொள்வோமா?

ஓவியங்கள் வரைந்த பிறகு வண்ணம் தீட்ட கிரேயானை பயன்படுத்துவீர்கள் இல்லையா? அந்த கிரேயான்களை வைத்துக்கூட மேஜிக் செய்யலாம். செய்து பார்த்துவிடுவோமா?

என்ன தேவை?

மேஜை, கருப்புத் துணி, கிரேயான் பாக்ஸ்

எப்படி செய்வது?

ஒரு மேஜையின் மீது கிரேயான்கள் உள்ள பெட்டியை வையுங்கள்.

1. முதலில் மேஜைக்கு முன்னால் நின்றபடி உங்கள் கண்களை கருப்புத் துணியால் கட்டிக் கொண்டும், கைகளையும் கட்டிக்கொண்டும் திரும்பி நின்றுகொள்ளுங்கள்.

2. இப்போது உங்கள் நண்பர்களில் ஒருவரைக் கூப்பிடுங்கள். கிரேயான் பெட்டியைத் திறக்கச் சொல்லி அதிலிருந்து ஒரு கிரேயானை எடுக்கச் சொல்லுங்கள். அந்த கிரேயானை வாங்கியதும் கையில் திருப்பித் திருப்பி சோதிப்பது போல பாவனை செய்யுங்கள்.

3. அந்த நேரத்தில் கிரேயானை யாருக்கும் தெரியாமல் நகத்தில் லேசாக சுரண்டிக்கொள்ளுங்கள்.

4. இப்போது உங்கள் நண்பர்கள் அமர்ந்துள்ள பக்கமாகத் திரும்புங்கள். கண்ணில் கட்டப்பட்ட கருப்புத் துணியை அவிழ்த்துக் கொள்ளுங்கள்.

5. உங்கள் நண்பர் எடுத்து கொடுத்த கிரேயானின் வண்ணம் என்ன என்று சொல்லட்டுமா என்று கூறியபடி, மந்திரம் சொல்வது போல பாவனை பண்ணுங்கள். அப்படி பாவனை செய்யும்போது நகத்தில் ஒட்டியுள்ள கிரேயானின் வண்ணத்தைத் தந்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.

6. இப்போது உங்கள் நண்பர் எடுத்துக் கொடுத்த கிரேயானின் வண்ணத்தைக் குறிப்பிட்டுச் சொல்லி உங்கள் நண்பர்களை வியக்க வையுங்கள்.

இப்படி ஒவ்வொரு கிரேயானையும் எடுக்கச் சொல்லி உங்கள் நண்பர்களை அசர வைக்கலாம்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x