Published : 08 Jul 2015 11:50 AM
Last Updated : 08 Jul 2015 11:50 AM
“நரியாரே!
அந்த தர்பூசணி என்ன விலை?
“அதுவா! இருபது ரூபாய். கரடியாரே நீங்கதான் ரொம்ப சிக்கனம் பார்ப்பவராச்சே. தர்பூசணி வாங்க வந்திருக்கீங்க” எனக் கேட்டது நரி.
“புதுசா ஒரு சட்டம் வந்திருக்கே, அது உங்களுக்குத் தெரியாதா?” என பதிலுக்கு கேள்விக் கேட்டது கரடி.
“ என்ன சட்டம்? தினமும் தர்பூசணி வாங்கணும்னா?” எனக் கேலியாகக் கேட்டது நரி.
“அட! இல்லை நரியாரே! வாகனம் ஓட்டுறவங்க கட்டாயமா தலைக்கவசம் போடணுமாம்” என்றது கரடி.
“ஓ… அந்தச் சட்டமா? நல்ல சட்டம்தானே. அப்போதானே விபத்துகள் குறையும்” என்றது நரி.
“அது சரி, உங்ககிட்ட வண்டி இல்லை. நீங்க ஈஸியா சொல்லிட்டிங்க. என்கிட்ட வண்டி இருக்கே” என அலுத்துக் கொண்டது கரடி.
“சரி கரடியாரே... தலைக்கவசம் வாங்கிட்டீங்களா, இல்லியா?”
“அதற்குத்தான் இங்கே வந்திருக்கேன்” என்றது கரடி.
“என்னது! தலைக்கவசம் வாங்க பழக்கடைக்கு வந்திருக்கீங்க, என்ன கரடியாரே அடிக்குற வெயில்ல மூளை குழம்பி போய்டுச்சா?” எனக் கேலி பேசியது நரி.
“கோபப்படாதீங்க நரியாரே! நான் வண்டி ஓட்டுறதே வாரத்துக்கு ஒருமுறையோ, இருமுறையோதான். அதுக்காக 700, 800 நூறு ரூபா கொடுத்து தலைக்கவசம் வாங்ணுமா? அதான் இந்த தர்பூசணியை வாங்க வந்தேன்” என்றது கரடி.
“கரடியாரே! நீங்க சொல்றது எனக்குப் புரியவே இல்லை. கொஞ்சம் புரியும்படிதான் சொல்லுங்களேன்” எனக் கேட்டது நரி.
“புரியும்படியே சொல்றேன். நான் வாங்குற இந்த தர்பூசணியை நல்லா சுத்தம் செஞ்சிட்டு தலைக்கவசமாக பயன்படுத்தப்போறேன். வண்டி ஓட்டுறப்ப தலையில மாட்டிக்குவேன். மீதி நாள்ல ஃபிரிட்ஜில வைச்சிடுவேன். இப்போதெல்லாம் இதுபோன்ற தலைக்கவசங்கள் கடைகள்ல நிறைய கிடைக்கின்றன. அதனால போலீஸ்காரங்கள ஈஸியா ஏமாத்திடலாம்” என்றது கரடி.
“அட! பொல்லாத கரடியாரே. நீங்கதான் அவுங்கள ஏமாற்ற நினைச்சால், நீ தான் ஏமார்ந்து போவீங்க” என்றது நரி.
“சரிசரி, பேசியே என்னோட நேரத்தை வீணாக்காங்தீங்க. ஒரு பழத்தைக் கொடு” என்று கூறி வாங்கிக்கொண்டு போனது கரடி.
இரண்டு நாட்களுக்கு பிறகு…
வெளியே செல்ல தனது குட்டிக்கரடியை வண்டியின் முன்னே உட்கார வைத்துக் கொண்டது. தயாராக வைத்திருந்த தர்பூசணி தலைக்கவசத்தைத் தலையில் மாட்டிக்கொண்டு புறப்பட்டது கரடி.
முந்தைய நாள் செய்திருந்த மழையால் சாலையெங்கும் ஒரே தண்ணீர். எதிரே இருந்த பள்ளத்தைக் கவனிக்காமல் கரடி ஓட்டி வந்த வாகனம், பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த வேகத்தில் கரடி தூக்கி எறியப்பட்டது. கரடி விழுந்த வேகத்தில் தலையில் போட்டிருந்த தர்பூசணி சுக்கல் சுக்கலானது. கரடியின் மண்டை உடைந்து ரத்தம் பெருக்கெடுத்தது. குட்டிக் கரடி சிறிய காயத்துடன் தப்பியது.
அருகிலிருந்தவர்கள் இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு வந்த போலீஸ்காரர்கள், தலைக்கவசம் என தர்பூசணியைப் போட்டுகொண்டு ஏமாற்றியதாக கூறி அபராதம் விதித்தார்கள்.
கரடி விபத்துக்குள்ளான செய்தியைக் கேள்விப்பட்டு, மருத்துவமனைக்கு வந்தது நரி.
நரியைக் கண்டதும், “வாங்க நண்பரே! எழுநூறு ரூபாய்க்காக சிக்கனம் பார்த்தேன். இப்போது மருத்துவ செலவு, அபராதச் செலவு என எல்லாம் சேர்ந்து நாலாயிரம் ரூபாய் ஆகிடுச்சி” என்று கண்ணீர் விட்டபடியே கூறியது.
நரியைக் கண்டதும், “வாங்க நண்பரே! எழுநூறு ரூபாய்க்காக சிக்கனம் பார்த்தேன். இப்போது மருத்துவ செலவு, அபராதச் செலவு என எல்லாம் சேர்ந்து நாலாயிரம் ரூபாய் ஆகிடுச்சி” என்று கண்ணீர் விட்டபடியே கூறியது.
“கரடியாரே! சாலை விபத்துகளை தடுக்கவும், இறப்புகளையும் தவிர்க்கவும்தான் தலைக்கவசம் போடச் சொல்லி உத்தரவு போடுறாங்க. நம்ம நல்லதுக்குத்தானே சொல்றாங்க. அதை விட்டுவிட்டு இப்படி ஏமாற்ற நினைக்கலாமா” என அன்பாக அறிவுரைச் சொன்னது
“நீங்க சொல்வது உண்மைதா நரியாரே. குட்டிக்கரடியும் பல முறை தலைக்கவசத்தின் அவசியத்தைச் சொல்லுச்சி. இப்போதுதான் சரியாகப் புரிந்து கொண்டேன். இனி இது போன்ற தவறைச் செய்ய மாட்டேன்” என்றது கரடி.
ஓவியம்: ராஜே
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT