Published : 01 Jul 2015 12:53 PM
Last Updated : 01 Jul 2015 12:53 PM
குவிஸ் (Quiz) என்ற விநாடி வினா போட்டி உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா? உங்கள் பள்ளி சார்பாக அந்தப் போட்டியில் கலந்துகொண்டது உண்டா? குவிஸ் என்ற அந்த வார்த்தை எப்படி வந்தது என்று என்றாவது நினைத்திருக்கிறீர்களா? குவிஸ் என்ற வார்த்தையே ஒரு போட்டியில் இருந்துதான் வந்தது என்று சொல்கிறார்கள்.
குவிஸ் என்ற வார்த்தையைக் கண்டுபிடித்தவர் யார் தெரியுமா? ஜேம்ஸ் டாலி என்பவர்தானாம். அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரைச் சேர்ந்தவர் இவர். 1791-ம் ஆண்டில்தான் இந்த வார்த்தையைக் கண்டுபிடித்ததாகச் சொல்கிறார்கள். இந்த வார்த்தையை டாலி எப்படிக் கண்டுபிடித்தார் தெரியுமா?
ஒரு சமயம் டாலி தன் நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது இதுவரை இல்லாத ஒரு புதிய வார்த்தையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நண்பர்கள் முடிவு செய்தார்கள். அந்த வார்த்தை ரொம்பவும் பிரபலமாக வேண்டும் என்றும் தங்களுக்குள் நிபந்தனை விதித்துக்கொண்டார்களாம்.
அப்படி ஒரு வார்த்தையைக் கண்டுபிடிக்க அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வார்த்தையைக் கூறினார்கள். அப்போது டாலி கூறிய வார்த்தைதான் குவிஸ் என்ற வார்த்தை. இந்த வார்த்தையை எப்படிப் பிரபலமாக்குவது என்று யோசித்தாராம் டாலி.
ஒரு நாள் இரவு டப்ளின் நகர் முழுவதும் குவிஸ் என்ற வார்த்தையை எழுதி வைத்தார். மறுநாள் காலையில் அந்த வார்த்தையைப் பார்த்த மக்களுக்கு ஒரே குழப்பம். குவிஸ் என்றால் என்ன என்று ஒருவருக்கொருவர் கேள்வி கேட்டுக்கொண்டார்கள்.
ஆனால், யாரிடம் அதற்குப் பதில் இல்லை. அர்த்தம் இல்லாமல் இந்த வார்த்தைப் புதிராக இருக்கிறதே என மக்கள் பேச ஆரம்பித்தார்கள். இப்படியே நாட்கள் சென்றன. புரியாத புதிராக நீடித்து வந்த குவிஸ் என்ற வார்த்தையைப் புதிர் என்றே சொல்ல ஆரம்பித்தார்கள் மக்கள். இப்படித்தான் குவிஸ் என்ற வார்த்தை பிரபலமானதாகச் சொல்கிறார்கள்.
இன்று உலகெங்கும் குவிஸ் என்ற பெயரில் விநாடி வினா போட்டியை நடத்தாத நாடுகளே இல்லை. டாலி அன்று நினைத்தது இன்று நிரூபணமாகிவிட்டதல்லவா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT