Last Updated : 01 Jul, 2015 02:20 PM

 

Published : 01 Jul 2015 02:20 PM
Last Updated : 01 Jul 2015 02:20 PM

ஆட்டுக் குட்டியின் தும்மல்

குழந்தைக் கவிஞர் செல்ல கணபதிக்கு இந்த ஆண்டுக்கான பால சாகித்திய விருது கிடைத்திருக்கிறது. பால சாகித்திய அகாடமி விருது என்றால் என்ன என்று கேட்கிறீர்களா? பள்ளிக்கூடத்தில் உங்களுக்குள் பாட்டிப் போட்டி, பேச்சுப் போட்டி, விளையாட்டுப் போட்டி எனப் பலவிதமான போட்டிகள் நடக்கும் இல்லையா? அதுபோல இதுவும் ஒரு போட்டி என்று வைத்துக்கொள்ளலாம்.

சாகித்திய அகாடமி என்பது இந்திய அரசாங்கத்தின் அமைப்பு. இந்திய அளவில் 23 மொழிகளில் வெளிவந்த படைப்புகளில் சிறந்த படைப்பைத் தகுதியான நடுவர்களைக் கொண்டு தேர்ந்தெடுத்து விருது வழங்குவார்கள். பெரியவர்களுக்கான புத்தகங்களுக்கு விருது கொடுப்பது போல உங்களைப் போன்ற குழந்தைகளுக்கான புத்தகங்களை எழுதுபவர்களுக்கும் விருது கொடுக்கிறார்கள். அந்தக் குழந்தைகள் இலக்கியத்துக்கான தமிழ்ப் புத்தக விருதுதான் செல்ல கணபதிக்கு கிடைத்திருக்கிறது.

கவிஞர் செல்ல கணபதி, குழந்தைகளுக்காக இதுவரை 40க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். இவற்றில் பாடல்கள் தொகுப்பு மட்டும் 24 புத்தகங்கள். நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு 1941-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி இவர் பிறந்தார். சொந்த ஊர் காரைக்குடிக்கு பக்கத்தில் உள்ள காணூர். இப்போது கோயம்புத்தூரில் வசித்துவருகிறார்.

அழகான, கருத்தான பல குழந்தைப் பாடல்களை எழுதிய குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் பாடல்களும் எழுத்துகளும்தான் இவருக்கு ஊக்கம் அளித்துள்ளது. உங்களுக்கும் வீட்டிலோ பள்ளியிலோ யாராவது ஊக்கம் அளிப்பார்கள் இல்லையா?

உங்கள் ஆசிரியர் போல நாமும் ஒரு ஆசிரியர் ஆக வேண்டும், பக்கத்து வீட்டு அக்கா மாதிரி நாமும் ஓவியம் வரைய வேண்டும், பக்கத்து வீட்டு அண்ணனைப் போல நாமும் நன்றாகப் பாட்டு பாட வேண்டும் என்றெல்லாம் நினைப்பீர்கள் இல்லையா? அப்படித்தான் அழ. வள்ளியப்பா போலவே தானும் குழந்தைகக் கவிஞராக வேண்டும் என்று நினைத்தார் செல்ல கணபதி. அப்படி ஆர்வம் வந்து அவரைப் போலவே பாடல்கள் எழுதத் தொடங்கினார்.

செல்ல கணபதி தன் பாடல்களை விதவிதமாகப் பிரித்தே எழுதுகிறார். 5-8 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கான மழலையர் பாடல்கள், 9-11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான பாடல்கள், 12-16 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான பாடல்கள் என பிரித்து எழுகிறார். இவரது பாடல்கள் பள்ளிப் பாடப் புத்தகங்களில்கூட பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

‘டுவிங்கிள்... டுவிங்கிள்... லிட்டில் ஸ்டார்’ மாதிரியான ஆங்கிலப் பாடல்களைப் போல் செல்ல கணபதியின் பாடல்களையும் குழந்தைகள் பாடி வருகிறார்கள். இப்போது இவருக்கு ‘தேடல் வேட்டை’ என்னும் பாடல்கள் தொகுப்புக்காக ‘பால சாகித்திய விருது’ கிடைத்திருக்கிறது.

செல்ல கணபதியின் பாடல்களில் இருந்து ஒரு குட்டிப் பாடல் ஒன்றை படித்துப் பார்ப்போமா? மழை பெய்யும்போது அதில் நனைய வேண்டும் என ஆசையாக இருக்கும். ஆனால் அம்மா, அப்பா சம்மதிக்க மாட்டார்கள் இல்லையா? தும்மல் வரும், காய்ச்சல் வரும், டாக்டரிடம் போய் ஊசி போடுவார்கள் என்றெல்லாம் பயமுறுத்துவார்கள். சரி, ஒரு குட்டி ஆடு, மழையில் நனைந்தால் என்ன ஆகும்?

“ஆட்டுக் குட்டி ஆட்டுக் குட்டி

அடடா மழையில் நனையாதே

மாட்டிக்கொண்டால் மழையால் உனக்கு வருமே தும்மல் ஏராளம்!”

ஆக ஆட்டுக் குட்டிக்கும் தும்மல் வரும் என்று இந்தப் பாடலில் செல்ல கணபதி சொல்கிறார். இந்தப் பாடல் எப்படி இருக்கிறது? குட்டியாக அழகாக இருக்கிறது இல்லையா? இந்த மாதிரி பல பாடல்களைக் கவிஞர் செல்ல கணபதி குழந்தைகளுக்காக எழுதியுள்ளார். அவரை எல்லோரோடு சேர்ந்து நாமும் வாழ்த்துவோமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x