Published : 29 Jul 2015 12:21 PM
Last Updated : 29 Jul 2015 12:21 PM
வீட்டில் நீங்கள் சேட்டை பண்ணும்போது அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி எல்லாம் உங்களை என்ன சொல்லுவாங்க? ‘ஏன் குரங்கு மாதிரி சேட்டை பண்றே…’ன்னு சொல்வார்கள் இல்லையா? அப்படி என்றால் குரங்கு சேட்டை பண்ணும் விலங்கா? இல்லவே இல்லை.
குரங்கின் இயல்பே மரத்துக்கு மரம் தாவுவதுதான். குரங்குகளால் ஒரு இடத்தில் இருக்க முடியாது. அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாகத் தாவிக்கொண்டே இருக்கும். அதனால்தான், நீங்கள் ஓர் இடத்தில் அமைதியாக இருக்காதபோது ‘குரங்கு சேட்டை’ பண்ணாதே என்று சொல்கிறார்கள்.
உங்கள் வீடு, கோயில், சுற்றுலாத் தலங்களில் குரங்குகளைப் பார்த்திருப்பீர்கள். காடுகளில் மரங்கள் அடர்ந்தப் பகுதிகளில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக வாழும். சில சமயங்களில் ஊருக்குள் குரங்குக் கூட்டங்கள் வருவதும் உண்டு. அவற்றுக்கு உணவு எங்கு கிடைக்குமோ, அங்கே அவை கூட்டமாக வாழும். குரங்கு புத்திக் கூர்மையான விலங்கு. அது எந்த இடத்தில் வாழ்கிறதோ அந்த இடத்துக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் அறிவு கொண்டது. மனிதர்களைப் போலவே வாழைப் பழத்தை உரித்துச் சாப்பிடும்; தண்ணீர்க் குழாய்களைத் திறந்து தண்ணீர் குடிக்கும்.
குரங்குகளில் பல வகை உண்டு. உருவத்திலும்கூட வித்தியாசங்கள் உண்டு. மனிதர்களைக் காட்டிலும் பெரிய உருவம் கொண்ட குரங்கு களும் இருக்கின்றன. சிறிய அளவு கொண்ட விலங்குகளும் வாழ்கின்றன. அபூர்வமாக சில விலங்குகள் வாழ்வதைப்போல குரங்குகளிலும்கூட அபூர்வ இன குரங்குகள் இருக்கின்றன. அந்த வகையில் அபூர்வமான இனத்தைச் சேர்ந்த குட்டிக் குரங்குகளும் உண்டு. அந்தக் குட்டிக் குரங்கு இனத்தின் பெயர் பிக்மி மர்மோசெட் (Pygmy marmoset).
தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் காடுகளில் இந்தக் குட்டி குரங்கு இனம் இருக்கிறது. இவையும் கூட்டமாகவே வாழும். ஒரு கூட்டத்தில் ஒன்பது குரங்குகள் வரை இருக்கும். நம் வீட்டருகே கலர்கலராக கோழிக் குஞ்சுகளை விற்பார்கள் இல்லையா? அந்த கோழிக் குஞ்சு அளவில்தான் இந்தக் குரங்குகள் இருக்கும். இவற்றின் எடை சராசரியாக வெறும் 100 கிராம் அளவுதான் இருக்கும். உயரம் எவ்வளவு தெரியுமா?117- 152 மில்லி மீட்டர் வரை. அதாவது ஆள்காட்டி விரலைவிட இன்னும் கொஞ்சம் அதிகமாகத்தான் இவை வளர்ந்திருக்கும்.
இந்தக் குட்டிக் குரங்குகளின் விருப்ப உணவு என்ன தெரியுமா? மரப் பிசின்தான் இவை விரும்பிச் சாப்பிடும் உணவு. மரத்தின் மேல் புறத் துளைகளில் ஜாம் போலச் சுரக்கும் ஒருவிதமான கெட்டி திரவம்தான் மரப் பிசின். முருங்கை மரத்தில் இந்தப் பிசினை பார்க்கலாம்.
அபூர்வ வகை விலங்குகள் பலவும் வேகமாக அழிந்துவருவதைப் போல, இந்தக் குட்டிக் குரங்குகளும் இப்போது வேகமாகக் குறைந்து வருகின்றன. இவை வாழும் இடத்திலிருந்து இவற்றைப் பிரித்துக்கொண்டு போவதுதான் இதற்குக் காரணம். குட்டியாக இருப்பதால் வீட்டில் நாய், பூனை போல இதைச் செல்லப் பிராணியாக வளர்க்க பிடித்துக் கொண்டுபோய் பணத்திற்காகச் சிலர் விற்றுவிடுகிறார்கள்.
அமேசான் காடுகளை விட்டு வேறு எங்கேயாவது இவற்றை எடுத்துக்கொண்டு போனால், இவற்றுக்கு அந்த இடம் பிடிக்காமல் போய்விடுகிறது. அப்பா, அம்மா எனக் கூட்டமாக வாழ முடியாமல் தவித்து இறந்துபோய்விடுகின்றன. நம் வீட்டை விட்டுப் பிரித்து வேறு இடத்தில் விட்டால் எப்படி இருக்கும்? தவித்துவிடுவோம் இல்லையா? அப்படித் தான் இந்தக் குட்டிக் குரங்குகளும் தவிப்புக்கு ஆளாகின்றன.
மனிதர்கள் கையில் சிக்கிப் படாதபாடுபடுகின்றன அல்லவா இந்தக் குட்டிக் குரங்குகள்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT