Published : 03 Jun 2015 12:49 PM
Last Updated : 03 Jun 2015 12:49 PM
அன்புக் குழந்தைகளே...
கோடை விடுமுறையில ஒன்றரை மாசமா வீட்டுல ஜாலியா ஆட்டம் போட்டிருப்பீங்க. உங்க நண்பர்களோடு சேர்ந்து உங்களுக்குப் பிடிச்ச விளையாட்ட விளையாடி இருப்பீங்க. ஊருல இருக்குற தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, பெரியப்பா, சித்தப்பா வீட்டுக்குப் போயிருப்பீங்க. அந்த ஊர்ல இருக்குற சுற்றுலாத் தலங்கள மகிழ்ச்சியா சுத்திப் பார்த்திருப்பீங்க. சம்மர் கேம்ப்புக்குப் போய் புதிய விஷயங்களைத் தெரிஞ்சுவைச்சிருப்பீங்க.
மே மாசம் கடைசி வாரம் வந்தவுடனேயே உங்களுக்கு மனசெல்லாம கஷ்டமாயிருக்கும். பள்ளிக்கூடம் தொடங்கப்போகுதே... நம்ம ஜாலி கொண்டாட்டத்தை மூட்டை கட்டி வைக்கணுமேன்னு மனசுக்குள்ள சோர்வு கொஞ்சமா எட்டிப் பார்க்கும். இத்தனை நாளா காலையில 8 மணி வரைக்கும் தூங்கினோம். இனி காலையிலேயே அம்மா எழுப்பி விடுவாங்களேன்னு வருத்தமா இருக்கும்.
முதன் முதலா பள்ளிக்கூடம் போற குழந்தைகளுக்கு நிச்சயமா பயம் இருக்குத்தான் செய்யும். இத்தனை நாள் வீட்டுல அம்மா கூடவே இருந்துட்டு இப்போ ஒரு எடத்துல போய் விட்டுட்டு வரப்ப சின்னக் குழந்தைங்க அழுவாங்க. கொஞ்சம் நாள் ஆனதும் அவுங்களுக்குப் பள்ளிக்கூடத்து மேலே ஆசை வந்திடும். உண்மையில பள்ளிக்கூடம் திறப்பதை நினைச்சி கொஞ்சம் வளர்ந்த குழந்தைகள் சந்தோஷப்படுவாங்க. இன்னும் சிலருக்கு எப்பவும் வேப்பங்காயைப் போல கசக்கும். புது வகுப்பறை, புது டீச்சர், புதுப் பசங்க, புதுப் பாடப்புத்தகத்தை நினைச்சி சின்னதா பயம் வரும். அது மட்டுமல்ல, தினமும் வீட்டுப் பாடம் செய்யணும், டியூஷன் போகணும் என்று பல விஷயங்களும் சேருவதால படபடப்பும் கூட சேர்ந்துகொள்ளும் இல்லையா?
ஆனா, இப்படிக் குழந்தைங்க பயப்படலாமா? தேவையே இல்லை தானே? பள்ளிக்கூடம் திறக்குறதிலும் ஜாலி இருக்கு இல்லையா? முதல்ல, ஒன்றரை மாசமா பார்க்காம இருந்த உங்ககூட படிச்ச ஃப்ரெண்ட்ஸைப் பாக்குறது எவ்வளவு ஜாலியான விஷயம். ஒன்றரை மாசமா பேச உங்களுக்கு நிறைய விஷயங்கள் இருக்குமில்லையா? லீவுல நீங்க அடிச்ச அரட்டை, ஊருக்கு போய் சுத்திப் பார்த்த விஷயங்கள், உங்களுக்கு ஊருல புதுசா கிடைச்ச நண்பர்களைப் பத்தி ஒரு வாரத்துக்கூட பேசிக்கிட்டே இருக்கலாம் இல்லையா?
அது மட்டுமா? அம்மாவும் அப்பாவும் உங்கள கடைவீதிக்குக் கூட்டிட்டுப் போய் புது யூனிஃபார்ம், புது ஷூ, புது பை, புது புத்தகம், புது நோட்டு, புது பேனா, புது பென்சில்ன்னு நிறைய புதுப் பொருட்களை வாங்கித் தருவாங்க. இதெல்லாம் கோடை விடுமுறைக்கு அப்புறமா பள்ளிக்கூடம் திறக்கறப்ப மட்டும்தானே கிடைக்கும், இல்லையா?
அப்புறம், உங்க வகுப்புக்கு இன்னும் சில புது ஃப்ரெண்ட்ஸ் வந்திருப்பாங்க. அவுங்ககிட்ட நீங்க அறிமுகமாகி அவுங்களும் உங்க ஃப்ரெண்டஸ் ஆவாங்க. புது டீச்சர் வந்தவுடனேயே பாடத்தை ஆரம்பிக்க மாட்டாங்க. முதல்ல உங்க பேரு, எங்கிருந்து வரீங்க? அப்பா, அம்மா என்ன பண்றாங்கன்னு நிறைய கேட்பாங்க. முதல்ல உங்கள நல்லா புரிஞ்சுக்கப் பார்ப்பாங்க. அப்புறமாதான் பாடத்தையே ஆரம்பிப்பாங்க.
அப்புறமென்ன, புது வருஷத்தை ஜாலியாகத் தொடங்குங்க. பயமில்லாமல், நல்லாப் படிங்க!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT