Published : 03 Jun 2015 12:38 PM
Last Updated : 03 Jun 2015 12:38 PM
சர்க்கஸ்களில் குள்ள மனிதர்கள் செய்யும் சேட்டைகளைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்து மகிழ்ந்திருப்பீர்கள். மனிதர்களில் மட்டுமே குள்ளமானவர்கள் இருக்கிறார்கள் என்று நினைத்திருப்பீர்கள். விலங்குகளில்கூட இப்படி உண்டு. அதற்கு நல்ல உதாரணம் போர்னியா யானைகள் எனப்படும் குள்ள யானைகள். இவற்றை ‘பிக்மி யானைகள்’ என்றும் அழைக்கிறார்கள்.
போர்னியோ என்பது ஒரு தீவு. இந்தோனேசியா, மலேசியா, புரூனே நாடுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள பெரிய தீவு. இந்தத் தீவில் சாஃபா என்ற ஒரு இடம் இருக்கிறது. இங்கு தான் இந்தக் குள்ள யானைகளைப் பார்க்க முடியும். உலகில் வேறு எங்கும் இந்த யானைகள் கிடையாது. 18-ம் நூற்றாண்டில் ‘சூலு’ நாட்டின் சுல்தான் பரிசாகக் கப்பல்கள் மூலம் இந்த யானைகளை ஜாவா, சுமத்ரா தீவுகளுக்கு அனுப்பி வைத்ததாகச் சொல்லப்படுகிறது. பின்னர் இவை போர்னியோ தீவுகளில் விடப்பட்டிருக்கலாம் என்றும் கருத்துகள் உலா வருகின்றன.
இந்தக் குள்ள யானைகள் எந்த நாட்டில் தோன்றின எனச் சரியாக விளக்கம் ஏதும் இல்லை. ஆப்பிரிக்க யானைகளைவிட ஆசிய யானைகள் குள்ளமாக இருக்கும். ஆனால், இந்த போர்னியா யானைகள் ஆசிய யானைகளைவிட இன்னும் குள்ளம். அதிகபட்சம் 8 அடி உயரம் மட்டுமே வளரும். தொடக்கக் காலத்தில் இந்த யானைகள் மரபணுக் கோளாறு காரணமாகப் பாதிக்கப்பட்டவை என்று கருதினார்கள். ஆனால், இப்படி எந்தப் பாதிப்பும் இந்த யானைகளுக்கு இல்லை என்பது மரபணுச் சோதனை மூலம் தெரிய வந்தது. இதனாலேயே ‘பிக்மி யானைகள்’ என்ற தனி அந்தஸ்தை இந்த யானைகள் பெற்றன.
இந்த யானைகளுக்குக் கூச்ச சுபாவம் ரொம்ப அதிகம். ரொம்பவும் பயப்படும். புதருக்குள் மறைந்துகொள்வது இந்த யானையின் பழக்கம். அது மட்டுமல்ல, இந்த யானை அதிகத் தூரம் எங்கேயும் போகாது. இப்படி இந்த யானைகளைப் பற்றிப் பல சுவையான தகவல்கள் உண்டு. பொதுவாக எல்லா யானைகளும் விரும்பி சாப்பிடுவதைப் போலப் புல், இலைதழை, வாழை, பனையோலை, காய்கறிகளை இந்த யானைகள் விரும்பிச் சாப்பிடும். ஆனால், துரியன் பழம் என்றால் குள்ள யானைகளுக்கு உயிர்.
உலகில் பல விலங்குகளும் அழிவைச் சந்தித்துவருவது போல குள்ள யானைகளும் அழிந்துவருகின்றன. பனை மரங்கள் அழிப்பு, காடுகள் அழிப்பு, யானைகள் வேட்டை ஆகியவை இதற்குக் காரணம். அரிய வகை இந்தக் குள்ள யானைகளைப் பாதுகாப்பதும் மனிதர்களின் கடமை அல்லவா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT