Last Updated : 17 Jun, 2015 12:47 PM

 

Published : 17 Jun 2015 12:47 PM
Last Updated : 17 Jun 2015 12:47 PM

குட்டி விலங்குகளின் கின்னஸ் ரகசியம்

வீட்டில் நாய்க் குட்டிக் கரடி பொம்மை இருக்குதா? கைக்குள்ள வச்சிக்கிற அளவுக்கு இருக்குமே, குட்டி டெடி பியர், இருக்குதில்ல? ஆனால், உண்மையான கரடி மனுஷங்களைவிட ரொம்பப் பெருசு தெரியுமா? விலங்குக் காட்சி சாலைக்குப் போய் பார்த்தீங்கனா தெரியும். இப்படிப் பெரிய பெரிய உருவத்துல இருக்கிற விலங்குகள் எல்லாம் குட்டி குட்டியா டெடி பியர் போல ஆனா எப்படி இருக்கும்?

உங்கள மாதிரி குட்டிப் பசங்களின் ஆசைக்காக ‘ஜீ…பூம்…பா’ன்னு ஒரு மந்திரத்துல மாடு, ஆடு, குதிரை, நாய் எல்லாம் குட்டியா மாத்திடலாமா? ஆனால், உண்மையில் மந்திரம் தந்திரம் இல்லாமல் விலங்குகள் ரொம்ப குட்டியாகவும் பிறக்குதுங்க.

நாய், பூனை, குதிரை போன்ற விலங்குகளில் குட்டியா இருக்கிற மாதிரி புதிய கலப்பினத்தை (Breed) கண்டுபிடிச்சிருக்காங்க. இதன் மூலமா புதிய கலப்பினத்தை உருவாக்கவும் செய்யுறாங்க. இந்த விலங்குகள் பிறந்தது முதல் வளருவதேயில்லை.

இது மட்டுமில்ல மனிதர்களுக்கு குழந்தைகள் குறைபாட்டோட பிறக்குற மாதிரி விலங்குகளுக்கும் பிறக்குறதுண்டு. இப்படி பிறக்குற விலங்குகள் தன்னோட அம்மா, அப்பா மாதிரி இல்லாம குறைபாட்டு உள்ள குட்டியா பிறக்குதுங்க. இந்த விலங்குகளும் வளருவதேயில்லை. இப்படி குட்டியான விலங்குகள் பிறந்தாலும் அது சாதனையாயிடுது.

இந்த விலங்குகளுக்கு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்துல இடம் கிடைச்சிடுது. டிவி, பேப்பர்ல அதுங்களோட போட்டோ மிகவும் பிரபலமாயிருக்கு. உதாரணமா மிஸ்டர் பீப்லஸ் அப்படினு ஒரு பூனை இருக்கு. கண்ணாடி கிளாஸுக்குள்ள முழிச்சிட்டு இருக்கும் அந்தப் பூனை. அது பிறந்தப்போ ரொம்பக் குட்டியா இருந்திருக்கு. அந்தப் பூனையை வளர்க்குற டோன்னா என்பவர், குட்டின்னா அப்படிதான் இருக்கும்னு அதை விட்டுவிட்டார். ஆனால் அது பெருசா வளரவே இல்லை.

அவரும் ஒரு நாளைக்கு நாலு தடவை பால் கொடுத்துப் பார்த்திருக்கார். ஆனாலும் வளரவே இல்லை. டாக்டர் கிட்ட கூட்டிப்போய் காண்பித்திருக்கிறார். டாக்டர் செக் பண்ணி பார்த்திட்டு மிஸ்டர் பீப்லஸ் இவ்வளவுதான் வளரும் அப்படின்னு சொல்லிவிட்டார். ஆனாலும் அதை செல்லமா வளர்த்திருக்கிறார் டோன்னா. இப்போ அது கின்னஸ் ஹீரோவா மாறி, ஸ்டைலா போட்டோவுக்கு போஸ் கொடுக்குது.

இப்படி ஏதோ ஒரு வகையில குட்டியா இருக்குற விலங்குகளை மாயாபஜாருக்குக் கூட்டிவந்திருக்கோம். அந்த குட்டி விலங்குகளைப் பாருங்களேன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x