Last Updated : 17 Jun, 2015 11:46 AM

 

Published : 17 Jun 2015 11:46 AM
Last Updated : 17 Jun 2015 11:46 AM

சித்திரக்கதை: எறும்புகள் கட்டிய போட்டி வீடு

அப்போதுதான் மழை பெய்து ஓய்ந்தது. மண்ணுக்குள்ளே பாதுகாப்பாய் ஆழத்தில் குடியிருந்த சிவத்தான் எறும்பு மெல்ல வெளியே வந்தது. தன்னுடய உணர்கொம்புகளால் காற்றைத் துழாவியது. இப்போது மேல்மண் காயத் தொடங்கிவிட்டது. மறுபடியும் வேலையை ஆரம்பிக்க வேண்டியதுதான் என்று அது நினைத்தது.

இந்த மழை வருவதற்கு முன் மிகப் பெரிய புற்று கட்டியிருந்தார்கள் சிவத்தானின் கூட்டத்தார். வேலையாள் எறும்புகளின் அயராத உழைப்பை ராணியார் எறும்பான சிவப்புத் தலை சிங்காரியே பாராட்டியிருந்தார்கள். இந்த இடத்தைக் கண்டுபிடித்துச் சொன்னது சிவத்தான்தான். இதற்கு முன் அவர்கள் இருந்த புற்றில் அடிக்கடி ஒரு பாம்பு வந்து குடியிருந்துகொண்டது. என்ன கடித்தாலும் அதற்கு சுரணையே இல்லை.

அது மட்டுமல்ல, அருகில் இருந்த கருவை மரக்காட்டில் நிறைய ஓணான்களும் இருந்தன. அவை ஒன்று மாற்றி ஒன்று புற்று வாசலில் உட்கார்ந்துகொள்ளும். உணவு தேடிக்கொண்டு வரும் எறும்புகளைத் தன்னுடைய நீண்ட பசை நாக்கை நீட்டி வாய்க்குள் போட்டுக்கொள்ளும். அதனுடைய தோலும் ரப்பர் மாதிரி இருக்கும். என்ன கடித்தாலும் வலிக்காது.

ஒரு நாள் மாலை நான்கு ஓணான்கள் புற்று வாசலில் உட்கார்ந்திருந்தன. வேலையாட்களில் பாதியை அவை விழுங்கிவிட்டன. அன்றிரவு சிவத்தான் ராணி சிவப்புத்தலை சிங்காரியுடன் ஆலோசனை செய்து புதிய இடம் தேடுவதற்கான ஆணையை வாங்கியது. அப்படி அலைந்து திரிந்து கண்டுபிடித்த இடம்தான் இந்தக் கரிசல் மண். அருகில் மரங்களோ ஓணான்களோ இல்லை. சிவத்தானுக்கு ரொம்ப சந்தோஷம்.

ஒரு நாள் இரவில் சிவப்புத்தலை சிங்காரியின் தலைமையில் அனைவரும் இந்த இடத்துக்கு வந்து புற்று மாளிகையைக் கட்டினார்கள். அந்த மாளிகையின் அமைப்பைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தது ராணி சிவப்புத்தலை சிங்காரி. வேலையாட்களுக்கும் அவற்றின் தலைவனான சிவத்தானுக்கும் ஒரு பெரிய வெட்டுக்கிளியைப் பரிசாகக் கொடுத்தாள்.

அதிலிருந்து சிவத்தானுக்கு ரொம்பப் பெருமை. தலையைத் தூக்கிக்கொண்டே திரிந்தது. தன்னுடைய முன்காலைத் தூக்கித் தலையைச் சொறிந்தது. போன தடவை கட்டியதைவிடப் பெரிதாகக் கட்ட வேண்டும். உள்ளே போய் வேலையாட்களை அழைத்து, மாளிகை கட்டுவதற்கான திட்டங்களைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தது சிவத்தான்.

அப்போது ஏதோ ஒரு வாசனை காற்றில் வந்ததை உணர்கொம்புகள் மூலம் சிவத்தான் உணர்ந்துகொண்டது. சிவத்தான் சுற்றும்முற்றும் பார்த்தது. சற்று தூரத்தில் ஒரு எறும்பு வந்துகொண்டிருந்ததைப் பார்த்தது. உடனே சிவத்தானுக்குக் கோபம் வந்துவிட்டது. நம்முடைய இடத்தில் இன்னொருத்தனா? நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இடத்தைக் கண்டுபிடித்திருக்கிறோம்.

இந்த இடத்துக்கு வந்த பிறகுதான் ராணி சிவப்புத் தலை சிங்காரி நிம்மதியாக முட்டைகளை இட்டுக்கொண்டேயிருக்கிறாள். அதனால் கூட்டத்தில் வேலையாட்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. இந்த இடத்தில் இன்னொருத்தனா? விடக் கூடாது என்று நினைத்தது சிவத்தான்.

உடனே, அதை நோக்கி வேகமாக குடுகுடுவென ஓடியது.

“ஏய்…நில்லு..நில்லு… எங்க போறே…”

“எம் பேரு கருப்பன். இங்க எங்கேயாவது தங்கறதுக்கு இடம் கிடைக்குமான்னு பார்க்க வந்தேன்.”

“இந்த ஏரியாக்குள்ள வராதே… இது எங்க ஏரியா…”

“ நண்பா, நாங்க ஏற்கெனவே இருந்த இடத்தில இப்ப சாக்கடை ஓடுது. அந்த வெள்ளத்தில என்னோட கூட்டத்தைச் சேர்ந்தவங்க நிறைய பேரு போய்ட்டாங்க. இப்ப நாங்க கொஞ்ச பேருதான் இருக்கோம். அதான் புதுசா இடம் பாத்துட்டு வரச் சொல்லி எங்க ராணி கருப்புத் தலை சிங்காரி அனுப்பிச்சாங்க…” என்று அந்த கருப்பு எறும்பான கருப்பன் சொன்னது.

அது மிகவும் நோஞ்சானாகி வேறு இருந்தது. சரியாக நிற்க முடியாமல் அடிக்கடி ஒரு பக்கமாகச் சாய்ந்துகொண்டேயிருந்தது. ஆனால், சிவத்தான் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அவனுடைய கவலையெல்லாம் இந்த இடத்தில் வேறு யாரும் குடிவந்துவிடக் கூடாது என்பதுதான்.

கருப்பனை மிரட்டுவதற்காகத் தன்னுடைய உணர்கொம்புகளால் லேசாகத் தள்ளிவிட்டது. கருப்பன் ஒரு பக்கமாக விழுந்துவிட்டது. அதனால் எழுந்திரிக்க முடியவில்லை. அதைப் பார்த்து சிவத்தானுக்குப் பாவமாகிவிட்டது. அருகில் சென்று அதற்குக் கைகொடுத்துத் தூக்கிவிட்டது.

“கருப்பா, உன்னைப் பாத்தா பாவமாத்தான் இருக்கு. ஆனா இங்கதான் நாங்க சுதந்திரமா இருக்கோம். வேற யாருடைய தொந்தரவும் இருக்கக் கூடாதுன்னு எங்க ராணி சிவப்புத்தலை சிங்காரி உத்தரவிட்டிருக்கிறார்கள்.”

“நண்பா, இந்த உலகத்தில நமக்கு மட்டுமில்ல எல்லாருக்கும் ஒரு இடம் இருக்கு. ஒருத்தரை ஒருத்தர் சாராமல் வாழ முடியாது. சமாதானம், சகோதரத்துவம், சக வாழ்வு. இதுதான் நாம் வாழும் இந்த பூமி நமக்குச் சொல்வது. இயற்கை உன்னைச் சிவப்பாகவும் என்னைக் கருப்பாகவும் படைத்திருப்பதற்கும் காரணம் இருக்கிறது நண்பா…” என்று சொல்லிவிட்டு மூச்சு வாங்கியது கருப்பன்.

சிவத்தான் அலட்சியமாக, “இந்தக் கதை எல்லாம் வேண்டாம். இந்த இடத்துக்கு வராதே… அவ்வளவுதான்”. என்று சொன்னது.

மறுபடியும் தன்னுடைய உணர்கொம்புகளை முன் கால்களால் தடவி விட்டுக்கொண்டு கருப்பன் எறும்பு, “நண்பா… நீ இங்கே வருவதற்கு முன்னால் இங்கே யார் இருந்தா தெரியுமா? அதுக்கு முன்னால யார் இருந்தான்னு தெரியுமா?

நம்மோட வாழ்க்கை ஒரு வாரமோ பத்து நாளோ. அதுக்கப்புறம் யார் இந்த இடத்துக்கு வரப்போறாங்கன்னு உனக்குத் தெரியுமா? நீ ஒரு பக்கமா இருந்தா… நான் ஒரு பக்கமா இருந்துக்கிறேன்… எங்க கூட்டமே அழியிற நிலைமையில இருக்கு… என்னென்னவோ வித்தியாசம் இருந்தாலும் நாம் எல்லோரும் எறும்புக் கூட்டம்தானே…”

இதைக் கேட்ட சிவத்தானுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. கருப்பனைக் கனிவோடு பார்த்தது. கருப்பன் தள்ளாடிக்கொண்டிருந்தது. பிறகு சிவத்தான் கருப்பனிடம், “இவ்வளவு அறிவு எனக்கில்லை கருப்பா. ஆனால், எங்களைத் தொந்தரவு செய்ய மாட்டீர்கள் என்றால் நீங்களும் உங்கள் கூட்டத்தாரும் இங்க வந்து வீடு கட்டிக்கோங்க… தயவுசெஞ்சி என்னோட முரட்டுத்தனத்தை மன்னிச்சிரு…”

இதைக் கேட்டதுமே கருப்பனுக்குப் புதுத் தெம்பு வந்த மாதிரி இருந்தது. “ரொம்ப நன்றி நண்பா..” என்று தன்னுடைய உணர்கொம்புகளால் சிவத்தானின் உணர்கொம்புகளைத் தட்டிக்கொடுத்தது. சிவத்தானும் தன்னுடைய முன்காலால் கருப்பனைத் தடவிக்கொடுத்தது.

மறு நாள் அங்கே இரண்டு எறும்புப் புற்றுகள் எழும்பிக்கொண்டிருந்தன.

ஓவியம்: ராஜே

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x