Published : 17 Jun 2015 12:03 PM
Last Updated : 17 Jun 2015 12:03 PM
பாலைவனம் என்றாலே என்ன ஞாபகத்துக்கு வரும்? கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சுடு மணலும், வறண்ட பிரதேசமும்தான் ஞாபகத்துக்கு வரும் இல்லையா? பெரு நாட்டில் உள்ள ஒரு பாலைவனத்தைப் பார்த்தால் இந்த எண்ணத்தை மாற்றிக் கொள்வோம்.
அங்கே உள்ள ஒரு பாலைவனம் அழகிய சோலைவனமாகக் காட்சியளிக்கிறது! இந்த அழகிய சோலைவனத்தை ஹூவகாசீனா (Huacachina) குட்டிக் கிராமம் என்று அழைக்கிறார்கள். பெரு நாட்டின் தெற்கு லிமாவில் இருந்து 300 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த இடம் உள்ளது.
பாலைவனத்தில் ஒரு சொட்டுத் தண்ணீர்கூடக் கிடைக்காது என்றுதானே நினைக்கிறீர்கள். ஆனால், இந்தப் பாலைவனத்தில் அழகான ஏரி ஒன்றும் உள்ளது. ஈச்ச மரங்கள் நிறைந்து காணப்படும் இந்தச் சோலைவனத்தில் பூக்களும் பூத்துக் குலுங்குகின்றன. இதைவிட பெரிய ஆச்சரியமும் இங்கே உள்ளது.
இந்தக் குட்டி கிராமத்தில் 115 பேர் வசிக்கிறார்கள். அவர்களுக்கு இங்கே வீடுகளும் உள்ளன. இங்கே உள்ள மணலை வைத்தே இங்கே வசிப்பவர்கள் தொழில் செய்கிறார்கள். வெளியே சென்று வர வாகனங்களையும் வைத்திருக்கிறார்கள் இங்கே வசிப்பவர்கள். உணவகம், கடைகள், நூலகமும்கூட இங்கே உள்ளன.
இந்த ஏரி உருவானதற்குப் பல கதைகளைக் கூறுகிறார்கள். ஆனால், இந்த ஏரி இயற்கையாகவே உருவானதாகக் கூறுகிறார்கள். ஏரியைச் சுற்றி வரப் படகுகளையும் விட்டிருக்கிறார்கள். உலகின் அதிசய இடங்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் இந்த இடம் உலகக் கலாச்சாரப் பாரம்பரியத் தலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி ஒரு இயற்கை அதிசயத்தை இயற்கை ஆர்வலர்களும் சுற்றுலாப் பயணிகளும் விட்டுவைப்பார்களா? இந்த இடத்தைப் பார்க்கவே ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகள் குவிந்துவிடுகிறார்கள். உலகின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் இந்த ஹூவகாசீனாவும் இடம் பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT