Published : 27 May 2015 11:58 AM
Last Updated : 27 May 2015 11:58 AM
ஒரு காமிக்ஸ் / கார்ட்டூன் தொடரில் வழக்கமாக எத்தனை கதாபாத்திரங்கள் இருக்கும்? ஒன்றா, இரண்டா, ஐந்தா, பத்தா? ஆனால், போகேமான் கார்ட்டூன் தொடரில் இதுவரை 721 கதாபாத்திரங்கள் (?!?) சாகசம் செய்திருக்கிறார்கள். இன்னமும் புதிய கதாபாத்திரங்கள் வருவதற்குக் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஒரு தொடர் நமக்குள் இருக்கும் குழந்தைத் தன்மையை வெளியே கொண்டு வந்துவிட்டால், உறுதியாக அது வெற்றி பெற்றுவிடும். அந்த வகையில் அனைத்து வயதினரையும் அவர்களுடைய சின்ன வயதுக்கு அழைத்துச் செல்லும் ஒரு தொடர் இந்த போகேமான்.
போகேமான்கள் என்பவை சிறிய வடிவிலான பூச்சி வகை உயிரினங்கள். ஒவ்வொரு போகேமானுக்கும் ஒரு வித்தியாசமான சக்தி இருக்கும். உதாரண மாக கார்ட்டூன் தொடரில் வரும் பிகாச்சு என்ற போகேமானுக்கு மின்சாரத்தைப் பாய்ச்சும் சக்தி உண்டு. இந்தப் போகேமான்களைக் கட்டுப்படுத்தி, யார் அதிகமான போட்டிகளில் ஜெயிக்கிறார்கள் என்பதே இந்தத் தொடரின் கதை அமைப்பு.
போகேமான் உருவான கதை:
கிராமத்துச் சிறுவர்கள் பொன்வண்டைத் தீப்பெட்டியில் அடைத்து வைத்து விளையாடிய கதையை உங்கள் பாட்டி, தாத்தா சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அதைப் போல விளையாடியவர்தான் சடோஷி டஜிரி. ஆனால், அவர் வளர்ந்த பிறகு, அவர் வசித்த இடம் முழுவதும் நகரமயமாக்கப்பட்டு, பூச்சிகளை மறக்க வைத்துவிட்டதாம். ஒரே கட்டிடமயமாக இருக்கும் இடத்தில் பூச்சிகள் எப்படி வளரும்?
அதனால் மனம் வருந்தினார் சடோஷி. இன்றைய தலைமுறையிடம் இருக்கும் தேவையற்ற வன்முறை எண்ணங்களையும், கோபத்தையும் கட்டுப்படுத்த ஒரு பொழுதுபோக்கு தேவை என்று அவர் உணர்ந்தார். இதை மையப் பொருளாகக் கொண்டு அவர் உருவாக்கிய விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட தொடர்தான் போகேமான். பாக்கெட் மான்ஸ்டர் என்பதன் சுருக்கமே போகேமான்.
ஜப்பானில் இருக்கும் கான்டோ என்ற இடத்தை ஒட்டிக் கற்பனையில் உருவாக்கப்பட்ட இடத்தில் இந்தத் தொடர் நடக்கிறது. 1996 பிப்ரவரி 26-ம் தேதி முதல் ஒளிபரப்பாகத் தொடங்கியது இத்தொடர்.
போகேமானின் கதை:
தன்னுடைய பத்தாவது பிறந்தநாளை கொண்டாடி விட்டு அசதியில் தூங்கிவிடுகிறான் சடோஷி (ஆங்கிலத்தில் ஆஷ்). அதனால், புரஃபெசர் ஓர்க்கின் போகேமான் வழங்கும் நிகழ்வுக்குத் தாமதமாகச் செல்கிறான். தன்னிடம் இருந்த சிறந்த போகேமான்களை ஏற்கெனவே வழங்கிவிட்ட புரஃபெசர் ஓர்க், பிகாச்சு என்ற ஒரு போகேமானை சடோஷிக்குக் கொடுக்கிறார். இப்படி ஒரு தூங்குமூஞ்சிதானா தனக்குக் கிடைக்க வேண்டும் என்று சடோஷிக்கு உடன்பட மறுக்கிறது பிகாச்சு.
தானொரு போகேமான் சாம்பியன் ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் வரும் சடோஷிக்கு, அவனுக்குக் கிடைக்கும் போகேமானே சவாலாக அமைந்துவிடுகிறது.
ஆனால், பிகாச்சுவுக்கு ஒரு சிரமம் வரும்போது, சடோஷி கஷ்டப்பட்டுப் போராடிக் காப்பாற்றுகிறான். அதைக் கண்ட பிறகுதான் பிகாச்சுவுக்கு சடோஷியின் மீது நம்பிக்கை வருகிறது. பிறகு இருவரும் இணைந்து தங்களுடைய சாகசப் பயணத்தைத் தொடங்குகிறார்கள்.
அவனது பயணத்தில் ஏற்படும் கஷ்டங்கள் என்ன என்பதைத்தான் இந்த கார்ட்டூன் தொடர் விளக்குகிறது. இந்தப் பயணத்தின் இன்னுமொரு விசேஷம் என்னவென்றால், இவர்களுக்கு உதவி செய்ய மர்மமான போகேமான் ஒன்று இவர்களுடன் பயணம் செய்வதுதான்.
சடோஷி போகேமான் சாம்பியன் ஆகிறானா? இதில் ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்படும் கஷ்டங்களும், அதை அவன் சமாளிக்கும் விதமும் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பத்து வயது சிறுவன் ஒருவனின் எண்ண ஓட்டத்துடனேயே கதை சொல்லப்பட்டிருப்பதால், கிட்டத்தட்ட அனைவராலும் இந்தத் தொடருடன் ஒன்றிணைந்து ரசிக்க முடிகிறது. இதுவே இந்தத் தொடரின் வெற்றிக்குக் காரணம்.
நண்பர்கள்
சடோஷியின் கள்ளம் கபடமில்லாத சுபாவத்தால், அவனுக்கு போகேமான் பயணத்தின் வழி நெடுகிலும் நண்பர்கள் கிடைக்கிறார்கள். அவனுடைய நேர்மை காரணமாக அறிமுகம் இல்லாதவர்கள்கூட அவனுக்கு உதவ முன்வருகின்றனர். இருந்தாலும் அவனுடைய முதல் ஜிம் தலைவர் கசுமி (ஆங்கிலத்தில் மிஸ்டி), போகேமான் வளர்ப்பாளர் டகேஷி (ப்ராக்), போகேமான் ஓவியர் கென்ஜி (ட்ரேசி) ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்கள்.
எதிரிகள்
ராக்கெட் குழு:
ஜெஸ்ஸி, ஜேம்ஸ், மியோ ஆகிய மூவரைக் கொண்ட குழு, போகேமான்களைத் திருடுவதையே வேலையாகக் கொண்டவர்கள். ஒவ்வொரு கட்டத்திலும் சடோஷிக்கு ஏதாவது ஒரு சங்கடத்தை உருவாக்கி அவனுடைய கவனத்தைத் திசைதிருப்பி, அவனிடம் இருக்கும் பிகாச்சுவைத் திருட இவர்கள் திட்டமிடுவார்கள்.
ஒவ்வொரு திட்டமும் சுவாரஸ்யமாக இருக்கும். நண்பர்கள், அதிர்ஷ்டம், தன்னுடைய புத்திசாலித்தனத்தால் சடோஷி இவர்களைத் தோற்கடித்துவிட்டு அடுத்த கட்டத்துக்கு முன்னேறிவிடுவான்.
வீடியோ கேம்களால் குழந்தைகளிடையே வன்முறை உணர்வு தூண்டப்படுகிறது என்பது பரவலான ஒரு கருத்து. ஆனால், அதே வீடியோ கேம்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தத் தொடர், கடந்த இருபது ஆண்டுகளாக விளையாட்டு, காமிக்ஸ், கார்ட்டூன் தொலைக்காட்சி தொடர், அனிமேஷன் திரைப்படம் என்று பல வடிவங்களில் வெற்றி பெற்றுவருகிறது. அது மட்டுமல்ல, இத்தொடர் சார்ந்த வணிகம் உலக அளவில் பரவலாக இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT