Last Updated : 06 May, 2015 11:43 AM

 

Published : 06 May 2015 11:43 AM
Last Updated : 06 May 2015 11:43 AM

அதிசயிக்க வைக்கும் அறிவியல் மையம்

வீட்டுக்குள்ளேயும், வெளியேயும் நம்மை மகிழ்விக்கும் எல்லாப் பொருட்களிலும் கலந்திருக்கிறது அறிவியல். அதை நாம் சரியாகப் புரிந்து வைத்திருக்கிறோமா? அறிவியல் சார்ந்த விஷயங்கள் என்றால் படிப்புடன் தொடர்புடைய விஷயம் என்று விலகி விடுகிறோம் இல்லையா?

அறிவியலில் ஆர்வத்தை அதிகரித்துக் கொள்ள உங்களுக்கு ஆசையா? ஒரு வேளை நீங்கள் திருநெல்வேலிக்குப் போனால் அந்த ஆர்வம் கிடைக்கக்கூடும். கோடை விடுமுறையை உற்சாசமாகக் களிக்கத் தாமிரபரணி, குற்றாலம், பாபநாசம் அருவிகள் நெல்லையில் இருக்கின்றன. இன்னும் பயனுள்ள விதத்தில் கழிக்கத் தென்மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஏற்ற இடம் என்றால், அது திருநெல்வேலியிலுள்ள மாவட்ட அறிவியல் மையம்தான்.

திருநெல்வேலியிலுள்ள மாவட்ட அறிவியல் மையம் 1987-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி திறக்கப்பட்டது. அப்போதைய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த பி.வி. நரசிம்மராவ் அந்த விழாவில் கலந்துகொண்டார். பல கோடி மதிப்புள்ள உபகரணங்கள், கட்டமைப்புகள், பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்த மையம் செயல்படுகிறது. திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பிரதான சாலையையொட்டி சுமார் 5.7 ஏக்கர் பரப்பில் இம்மையம் அமைந்துள்ளது.

இந்த அறிவியல் மையத்தில் அன்றாட அறிவியல், கேளிக்கை அறிவியல், மின்னணுவியல் என்று மூன்று பிரிவுகளில் கேலரிகள் உள்ளன. பல்வேறு அரிய தாவரங்கள் அடங்கிய அறிவியல் பூங்கா, 3 டி திரையரங்கு, கோளரங்கம், டைனோசர் பூங்கா, அறிவியல் அறிஞர்களின் உருவச் சிலைகள், கணிதம் வளர்ந்த வரலாறு குறித்த மாதிரிகள், தொலைநோக்கிப் போன்ற வான் ஆய்வு கருவிகள், அறிவியல் விளக்கக் காட்சிகள், கண்ணாடி மாயாஜால அரங்கு, டிவி ஸ்டுடியோ என்று பல்வேறு அரங்குகளும், கட்டமைப்புகளும் உள்ளன.

இயங்கும் மற்றும் இயக்கும் காட்சிப் பொருள்கள், ஆர்வத்தைத் தூண்டும் செயல்முறை விளக்கங்கள், கைவினைச் செயல்பாடுகள், திரைப்படங்கள், ஒளிப்படங்கள், கணினிகள், கற்பித்தல், பயிற்றுவித்தல் போன்றவற்றின் பரவசமூட்டும் அம்சங்களை உள்ளடக்கியிருக்கிறது. கேளிக்கை அறிவியல் என்ற அரங்கத்தில் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய விளையாட்டுடன் கூடிய காட்சிப் பொருட்கள் உள்ளன. இவை அறிவியலை எளிதில் விளக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

நாள்தோறும் நவீனத் தொலைநோக்கி மூலம் வானில் நட்சத்திரங்களையும், பூமிக்கு அருகில் வரும் கோள்களையும், பவுர்ணமி நாட்களில் நிலவையும் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. தீபாவளி, பொங்கல் தினங்களைத் தவிர்த்து 363 நாட்களும் இம்மையம் செயல்படுகிறது.

அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 6.30 மணிவரை இம்மையத்துக்குப் போய்ப் பார்வையிடலாம். 5 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 10 ரூபாய் கட்டணம். பள்ளி மாணவர்கள் குழுவாக வந்தால் ஒவ்வொருவருக்கும் தலா 5 ரூபாய் கட்டணம். இதுதவிர 3 டி திரையரங்கில் காட்சிகளைப் பார்க்க 10 ரூபாயும், கோளரங்கத்தைப் பார்க்க 20 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

படங்கள்: மு. லெட்சுமிஅருண்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x