Published : 06 May 2015 12:24 PM
Last Updated : 06 May 2015 12:24 PM

அடடே அறிவியல்: தீயைத் தடுக்கும் வாயு

மின் நிலையங்கள், விமான நிலையங்கள், தொழில் நிறுவனங்களில் தீயணைப்பானைப் பார்த்திருக்கிறீர்களா? இந்தச் சிறிய கருவியைக் கொண்டு தீயை எப்படி அணைக்கிறார்கள்? தெரிந்துகொள்ள ஆசையா? வாங்க, ஒரு சிறிய சோதனை செய்து பார்த்துவிடுவோம்.

தேவையான பொருட்கள்:

இரண்டு உயரமான பாட்டில்கள், சமையல் சோடா, வினிகர், மெல்லிய கம்பி, தீப்பெட்டி, சிறிய கரண்டி.

சோதனை:

1. உயரமான இரண்டு பிளாஸ்டிக் பாட்டில்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

2. இப்போது சிறிய மெழுகுவர்த்தியை மெல்லிய இரும்புக் கம்பியில் பொருத்தி வையுங்கள்.

3. கம்பியில் பொருத்தப்பட்ட மெழுகுவர்த்தியின் திரியைப் பற்ற வையுங்கள். அதை முதல் பாட்டிலில் வையுங்கள். தீ நன்றாக எரியும். அதே மெழுகுவர்த்தியை இரண்டாவது பாட்டிலிலும் வையுங்கள். இப்போதும் தீ நன்றாக எரியும்.

4. இப்போது பிளாஸ்டிக் பாட்டில்களில் இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி சமையல் சோடாவைப் போடுங்கள்.

5. அதில் வினிகரை ஊற்றுங்கள். வினிகரை ஊற்றியவுடன் குபுகுபு என நுரை வரும். வாயுக் குமிழ்கள் பாட்டிலின் மேலே வருவதைப் பார்க்கலாம்.

6. நுரை வருவது நின்றவுடன், அந்த பாட்டிலுக்குள் கம்பியில் பொருத்தப்பட்ட எரியும் மெழுகுவர்த்தியைக் கொண்டு செல்லுங்கள். இப்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள்.

மெழுகுவர்த்தியைப் பாட்டிலுக்குள் கொண்டு சென்றவுடன் அணைந்துவிடும். இதற்கு என்ன காரணம்?

நடந்தது என்ன?

சமையல் சோடா என்பது சோடியம் பை கார்பனேட் ஆகும். வினிகர் என்பது வீரியம் குறைந்த அசிட்டிக் அமிலம். சோடியம் பை கார்பனேட் அசிட்டிக் அமிலத்துடன் இணைந்து வேதிவினை புரிகிறது. இதனால் கார்பன் டை ஆக்ஸைடு வாயு, சோடியம் அசிட்டேட், நீர் கிடைக்கும்.

வேதி வினையால் உருவாக்கப்பட்ட கார்பன் டை ஆக்ஸைடு குமிழ்களும் நுரையும் நின்றவுடன் பாட்டில் முழுவதும் கார்பன் டை ஆக்ஸைடு நிறைந்திருக்கும். குமிழ்கள் உருவாகும்போது பாட்டிலுக்குள் இருந்த ஆக்ஸிஜன் வெளியேறிவிடுகிறது. இப்போது எரியும் மெழுகுவர்த்தியைப் பாட்டிலுக்குள் கொண்டுசெல்லும் போது ஆக்ஸிஜன் இல்லாததால் மெழுகுவர்த்தி அணைந்துவிடுகிறது.

ஒரு பொருள் தொடர்ந்து எரிவதற்கு எரிபொருள், ஆக்ஸிஜன், வெப்பம் ஆகிய மூன்றும் தேவை. இதில் ஏதேனும் ஒன்று இல்லாவிட்டாலும் தீ அணைந்துவிடும்.

இரண்டாவது பாட்டிலுக்குள் மெழுகுவர்த்தியைக் கொண்டு செல்லும்போது எரிபொருள் (மெழுகுவர்த்தி), வெப்பம், ஆக்ஸிஜன் இருப்பதால் மெழுகுவர்த்தி எரிகிறது. முதல் பாட்டிலில் எரிபொருளும் வெப்பமும் இருந்தாலும் ஆக்ஸிஜன் இல்லாததால் அணைந்துவிடுகிறது.

பயன்பாடு

தீயினால் பல நன்மைகள் இருந்தாலும் அது அளவுக்கு அதிகமாக ஏற்பட்டுவிட்டால் அழிவும் அதிகம். பொதுவாகத் தீயை ஏ, பி, சி என்று வகைப்படுத்துகிறார்கள். மரம், தாள், துணி, குப்பை ஆகிய பொருட்களில் தோன்றும் தீ ஏ வகை. பாரஃபின், பெட்ரோல், மண்ணெண்ணெய், டீசல் போன்ற எரி திரவங்களில் தீப்பற்றுவது பி வகை. ப்ரோயேன், பியுட்டேன், மீத்தேன் போன்ற வாயுக்களில் தீப்பற்றுவது சி வகை.

பி, சி வகைத் தீயை அணைப்பதற்குக் கார்பன் டை ஆக்ஸைடு தீயணைப்பான்கள் பயன்படுகின்றன. கணிப்பொறி அறைகள், தொலைத்தொடர்பு சாதனங்கள், மின் கருவிகள் ஆகியவற்றில் தீப்பிடித்தல், அதை அணைப்பதற்குக் கார்பன் டை ஆக்ஸைடு தீயணைப்பான்கள் தேவை.

தீயணைப்பான் கருவிகளில் கார்பன் டை ஆக்ஸைடு வாயு திரவ நிலையில் அதிக அழுத்தத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும். தீயணைப்பான்களில் உள்ள வால்வைத் திறந்தால் உள்ளிருக்கும் கார்பன் டை ஆக்ஸைடு வாயு 1 : 450 என்ற விகிதத்தில் வெளி வரும். அதாவது இவ்வளவு விகிதத்தில் வாயு வருவதால் மிகப்பெரிய தீயைக்கூட அணைக்க முடியும்.

கார்பன் டை ஆக்ஸைடு எரிவதற்குத் துணை புரியாது அல்லவா? அது ஆக்ஸிஜனை அப்புறப்படுத்திவிடும். ஆக்ஸிஜன் இல்லாததால் தீயும் அணைந்துவிடுகிறது.

சோதனையில், மெழுகுவர்த்தியின் சிறிய தீயை கார்பன் டை ஆக்ஸைடு வாயு எப்படி அணைத்துவிடுகிறதோ, அதேபோல தீயணைப்பான் கருவிகளில் அதிக அழுத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடு வாயு மிகப் பெரிய தீயை அணைத்துவிடுகிறது என்பது இப்போது உங்களுக்குப் புரிகிறதா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x