Last Updated : 27 May, 2015 11:23 AM

 

Published : 27 May 2015 11:23 AM
Last Updated : 27 May 2015 11:23 AM

சித்திரக்கதை: கிளிக்கூண்டு கனவு

மத்தியான நேரம். கிருஷ் அவனது பள்ளிக்கூடத்தில் இருந்த வேப்ப மரத்தில் இரண்டு கிளிகள் பறந்து பறந்து விளையாடியதைப் பார்த்துகொண்டிருந்தான். இளம்பச்சை நிறமும் கரும் பச்சை நிறமும் கலந்த உடல். கழுத்தைச் சுற்றி வரைந்து வைத்த மாதிரி ஒரு கறுப்புக் கோடு.

அழகான சிவந்த அலகுகள். உருண்டையான விழிகள். நீளமான வால். அடடா.. கிளி அழகாக இருக்கிறது. கிருஷ் உடனே அதைத் தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டான். அந்தக் கிளிகள் கீ… கீகீ… கீக்கீ… என்று கத்திக்கொண்டு ஒவ்வொரு கிளையாகத் தாவின.

அப்போது கூட இருந்த அபி, “டேய் கிளியைக் கூண்டுல வச்சி வளப்பாங்க… அது நாம சொல்றத அப்படியே திருப்பிச் சொல்லும். எங்க வீட்டுக்குப் பக்கத்துல ஒரு பாட்டி கிளி வளக்குறாங்க.. அவங்க வீட்டுக்கு யார் போனாலும் அது யார் நீங்க…யார் நீங்க…ன்னு கேக்கும்”.

அதைக் கேட்ட கிருஷ் அண்ணாந்து கிளிகளையே பார்த்துக்கொண்டிருந்தான். கிளிகள் மேலே வானத்தில் பறந்துகொண்டிருந்தன.

சாயந்திரம் வீட்டுக்குப் போனதும் அம்மாவிடம், “எனக்குக் கிளி வேணும்…” கிருஷ் அடம் பிடித்தான். அவனுடைய அம்மா, “கிளி பொம்மையெல்லாம் இப்ப கிடையாதுடா” என்று சொன்னார். உடனே கிருஷ்ஷுக்குக் கோபம் வந்து விட்டது. “எனக்கு உயிருள்ள கிளி வேணும். நான் வளக்கப்போறேன்”னு சொன்னான்.

“அது பாவம்டா கிருஷ்” பறக்குற பறவையைக் கூண்டுல அடைக்கக் கூடாதுடா. எஞ்செல்லமில்ல, சொன்னா கேளுடா”ன்னு அம்மா சொன்னார்.

அதைக் கேட்டதும் அழ ஆரம்பித்தான் கிருஷ். “ எனக்கு வேணும்… நானும் கிளியும் பேசி விளையாடுவோம். என்கூட விளையாட யாரிருக்கா”ன்னு அழுதுகிட்டே சொன்னான். அம்மாவுக்குச் சங்கடமாகிவிட்டது.

“அழக் கூடாதுடா செல்லம். இப்ப என்ன, உனக்குக் கிளி வேணும் அவ்வளவுதானே, அப்பா வந்ததும் பிடிச்சித் தரச் சொல்றேன். ஆனா, கொஞ்சம் யோசிச்சிப் பாரேன்… நல்லா ஓடியாடித் திரியற உன்னைப் பிடிச்சி ஒரு கூண்டுக்குள்ள போட்டு ஆடுறா, பாடுறான்னு சொன்னா கேட்பியா”.

அம்மா சொன்னதைக் கேட்டதும் கிருஷ் வேகமாகக் கத்தி அழ ஆரம்பித்தான். அப்போது அலுவலகத்திலிருந்து அப்பா வந்துவிட்டார். கிருஷ் அழுவதைப் பார்த்த அவர்,

“ ஏண்டா கண்ணா அழறே” என்று கேட்டார்.

கிருஷ் அழுகையை அடக்கிக்கொண்டே அவன் பள்ளிக்கூடத்தில் பார்த்த கிளிகளைப் பற்றிச் சொன்னான். அவனுடைய ஆசையையும் சொன்னான். உடனே அப்பா, “இவ்வளவுதானே நாளைக்கே ரெண்டு கிளிய வாங்கிட்டு வரேன். இதுக்குப் போயி அழலாமா?”என்று சிரித்துக்கொண்டே சொன்னார். உடனே கிருஷ் அழுகையைச் சட்டென நிறுத்திவிட்டான்.

உடனே அப்பாவிடம், “ நாளைக்கே கிடைச்சிருமாப்பா” என்று கேட்டான். அதற்கு அப்பா, “ நாளைக்கு உங்கூட கிளிகள் பேசிக்கிட்டிருக்கும், சரியா” என்று சொன்னார். கிருஷுக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. உடனே சுறுசுறுப்பாகப் பாடங்களைப் படித்தான். அம்மா சுட்டுத் தந்த தோசைகளை முரண்டு பண்ணாமல் சாப்பிட்டான். அவனுடைய நினைவில் பள்ளிக்கூடத்தில் பார்த்த கிளிகளின் ஞாபகம்தான் இருந்தது. படுத்தவுடன் தூங்கியும் விட்டான்.

அப்போதுதான் விடிந்திருந்தது. கிளிகளின் கீச் சத்தம் அவனை எழுப்பியது. கண் விழித்துப் பார்த்தான். அவனைச் சுற்றிலும் கிளிகள். பறந்துகொண்டும் கீ கீ என்று பேசிக்கொண்டும் நடந்துகொண்டும் இருந்தன. சில கிளிகள் பறந்து அவனுடைய மேசை மீது உட்கார்ந்தன.

ஒரு கிளி சன்னல் கம்பியில் தலைகீழாக நடை பழகிக்கொண்டிருந்தது. இன்னொரு கிளி மின்விசிறி மீது உட்கார்ந்து தலையைத் திருப்பி எல்லோரையும் பார்த்துக்கொண்டிருந்தது. இரண்டு கிளிகள் தங்களுடைய அலகுகளால் ஒன்றோடொன்று உரசி விளையாடின.

கிருஷ்ஷுக்கு ஒரே ஆச்சரியம். அப்பாவிடம் ரெண்டு கிளிகள்தானே கேட்டோம். எதுக்கு இத்தனை கிளிகளை வாங்கிட்டு வந்தார் என்று நினைத்தான். திரும்பி அப்பாவைக் கூப்பிட வாயெடுத்தான். அய்யோ, அவனால் திரும்பவே முடியலியே. அசைய முடியாமல் கிடந்தான். அப்போதுதான் அவனுக்குத் தெரிந்தது, அவன் ஒரு கூண்டுக்குள் அடைபட்டிருப்பது. அவனுக்கு அருகில் ஒரு கிண்ணத்தில் அவனுக்குப் பிடித்த நெய்ச் சோறும், ஒரு தண்ணீர் பாட்டிலும் இருந்தன. ஆனால், அவனால் நிமிர்ந்து நிற்கவோ, நடக்கவோ முடியவில்லை. அவன் உட்கார மட்டுமே இடமிருந்தது.

அம்மாவையோ அப்பாவையோ காணவில்லை. அவனைச் சுற்றிப் பெரிய வயதான கிளிகள், இளம் கிளிகள், குஞ்சுக்கிளிகள் கூட்டமாக இருந்தன. அவனுடைய கூட்டைச் சுற்றிப் பெரிய கிளிகள் கீ…கீ..கீ..கீ… என்று தொடர்ந்து கத்திக்கொண்டிருந்தன. அவனுக்கு அழுகையாக வந்தது.

அவன் அம்மாவையும் அப்பாவையும் கத்திக் கூப்பிட்டான். கூண்டைத் திறக்க முயன்றான். எதுவும் நடக்கவில்லை. வயிறு பசித்தது. அவனுக்குப் பிடித்த நெய்ச் சோறு அருகில் இருந்தாலும் சாப்பிடப் பிடிக்கவில்லை. பள்ளிக்கூடம் போக வேண்டிய நேரமாகிவிட்டது. அவன் ஒரு நாள்கூடப் பள்ளிக்கூடத்துக்குப் போகாமல் இருந்ததில்லை.

அவனுடைய வீட்டுக்குள் பறந்துகொண்டிருந்த கிளிகள் எல்லாம் சேர்ந்து ஒரே குரலில் கீ கீ கீ கீ என்று கத்தின. அவனுக்கு முதலில் எதுவும் புரியவில்லை. அப்புறம்தான் தெரிந்தது, அந்தக் கிளிகள் அதனுடைய மொழியை அவனுக்குச் சொல்லிக் கொடுக்க முயல்கின்றன என்று. அவனுடைய முகம் கோணியது. அழுகை பொங்கி வர பெரிய குரலில் அழத் தொடங்கினான்.

அப்போது கிருஷ்ஷைப் படுக்கையிலிருந்து அம்மா எழுப்பினார். கண்விழித்துப் பார்த்தான் கிருஷ். கூண்டையோ கிளிகளையோ காணவில்லை. எழுந்து உட்கார்ந்து ஒரு நிமிடம் அவன் கண்ட பயங்கரக் கனவை நினைத்துப் பார்த்தான். உடனே அம்மாவிடம், “அம்மா எனக்குக் கிளி வேண்டாம்மா, அப்பாகிட்ட சொல்லிடு. கிளிகளை நான் மரத்திலேயே பாத்து ரசிக்கிறேன். பறவைன்னா பறக்கணும். மனுஷன்னா நடக்கணும், இல்லியாம்மா…” என்று சொன்ன கிருஷை ஆச்சரியத்துடன் பார்த்தார் அம்மா.

ஓவியம்: ராஜே

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x