Published : 01 Apr 2015 01:09 PM
Last Updated : 01 Apr 2015 01:09 PM
தீபாவளிப் பண்டிகையின் போது ராக்கெட் வெடியை வெடித்திருப்பீர்கள். அது வானத்தில் பறந்து சென்று வெடிப்பதை மகிழ்ச்சியுடன் பார்த்திருப்பீர்கள். அதேபோல ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்திலிருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதையும் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். ராக்கெட் எப்படி மேலே செல்கிறது? தெரிந்துகொள்ள ஆசையா? ஒரு சிறிய சோதனை செய்து பார்த்துவிடுவோமே.
தேவையான பொருட்கள்:
நீளமான பலூன், நூல் கண்டு, உறிஞ்சு குழல், பசை டேப்.
சோதனை:
1. ஒரு நீளமான பலூனை போதுமான அளவுக்கு ஊதி, காற்று வெளியே போகாதவாறு அதன் வாயை விரல்களால் பிடித்துக் கொள்ளுங்கள்.
2. ஊதிய பலூன் மீது நீண்ட உறிஞ்சு குழலை வைத்துப் பசை டேப்பால் ஒட்டிவிடுங்கள்.
3. உறிஞ்சு குழல் வழியே நூலைச் செருகி நூலின் இரு முனைகளையும் ஜன்னல் கம்பியில் கட்டி விடுங்கள்.
4. பலூனின் வாய்ப் பக்கத்தை ஜன்னல் கம்பிக்கு அருகே கொண்டு வாருங்கள்.
5. பத்தில் இருந்து (10, 9, 8, .... 2, 1) இறங்கு வரிசையில் எண்களைச் சொல்லுங்கள். பூஜ்ஜியம் வந்தவுடன் பலூனிலிருந்து கையை எடுத்து விடுங்கள்.
இப்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள். நொடிப் பொழுதில் பலூன் சீறிப் பாய்ந்து எதிர் ஜன்னலில் போய் நிற்கும்.
நடந்தது என்ன?
ஊதிய பலூனை விட்டவுடன் அது எப்படி வேகமாகச் செல்கிறது? ஊதப்பட்ட பலூனுக்குள் காற்று அதிக அழுத்தத்தில் இருக்கும். ஊதிய பலூனிலிருந்து கையை எடுத்தவுடன் அழுத்தம் நிறைந்த காற்று மிகுந்த விசையுடன் பலூனின் வாய் வழியாக வெளியேறுகிறது. ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை உண்டு. இதுவே நியூட்டனின் மூன்றாவது இயக்க விதி ஆகும். இந்த விதிப்படி காற்று வெளியேறும் திசைக்கு எதிர்த் திசையில் பலூன் வேகமாகப் பாய்கிறது.
பயன்பாடு
பலூனை ராக்கெட் வெடியாகவோ அல்லது செயற்கைக்கோள் ராக்கெட்டாகவோ கற்பனை செய்துகொள்ளுங்கள். நியூட்டனின் மூன்றாவது விதிப்படி பலூன் பாய்ந்து செல்வதைப் போல்தான் நிஜ ராக்கெட்களும் விண்ணில் பறக்கின்றன.
ராக்கெட்டின் பின்புறம் வழியாக அதிக அழுத்தத்தில் எரிபொருள் இருக்கும். எரிபொருள் எரிந்து வாயுக்கள் வெளியேறுவதால் ராக்கெட் முன்னோக்கிச் செல்கிறது. இந்த வாயுக்கள் தொடர்ச்சியாக வெளியேறுவதால் ராக்கெட்டின் எடை குறைந்துகொண்டே வரும். இதனால் ராக்கெட் மேல் நோக்கிச் செல்லும் வேகம் அதிகரிக்கும்.
பட உதவி: அ. சுப்பையா பாண்டியன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT