Published : 22 Apr 2015 12:35 PM
Last Updated : 22 Apr 2015 12:35 PM
சிட்-காம் (சிச்சுவேஷன் காமெடி) தொடர்கள் உலகமெங்கும் தற்போது பிரபலமாகி வருகின்றன. இந்த வகை தொலைக் காட்சித் தொடர்களுக்கு முன்னோடி எது தெரியுமா? ஃபிளின்ட்ஸ்டோன்ஸ் கார்ட்டூன் தொடர்தான். இந்த கார்ட்டூன் தொடர் செய்த புதுமைகள் எண்ணிலடங்காதவை.
நம்முடைய வாழ்க்கையில் அன்றாடம் பயன்படுத்தும் கார், கேமரா, வாக்குவம் கிளீனர், லிஃப்ட், வாஷிங் மெஷின் போன்றவற்றைக் கற்காலத்துக்கு ஏற்ற வகையில் மாற்ற முடியுமா? முடியும் என்றால், அது எப்படி நடக்கும்? கற்காலத்தில் எப்படிப் போட்டோ எடுக்க முடியும்? போட்டோ எடுக்கும் கருவியின் உள்ளே ஒரு பறவை இருக்கும்.
படமெடுக்க வேண்டியவர்களைக் கருவியின் முன்னே நிறுத்தினால், அவர்களை ஒரு சிறிய பாறையில் தனது அலகினால் ஒரு பறவை ஓவியமாக வடித்துவிடும். இப்படித்தான் ஒவ்வொரு நவீன கருவியும், வசதிகளும் விலங்குகளையும், பறவைகளையும்கொண்டே இந்தத் தொடரில் உருவாக்கப்பட்டன.
உருவான கதை:
டாம் & ஜெர்ரி தொடரைத் தயாரித்த ஹன்னா-பார்பெரா அடுத்தடுத்துப் பல தொலைக்காட்சி கார்ட்டூன் நிகழ்ச்சிகளை உருவாக்கினாலும், அவை எல்லாமே டாம் & ஜெர்ரி அளவுக்கு வெற்றியையோ, புகழையோ ஈட்டவில்லை. அது மட்டுமல்லாமல், இவர்களுடைய நிகழ்ச்சிகள் அனைத்துமே குழந்தைகளுக்கானவை என்ற முத்திரையும் குத்தப்பட்டது. இதனால் பொருளாதார ரீதியாகப் பாதிப்பு ஏற்பட்டது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கவரும் வகையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை உருவாக்க வேண்டிய சூழல் உருவானது.
அந்தக் காலகட்டத்தில் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக இருந்தது 'தி ஹனிமூனர்ஸ்' என்ற தொடர். இதை அடிப்படையாகக்கொண்டு, இரண்டு குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையை நகைச்சுவையாக்கி ஒரு தொடரை உருவாக்க நினைத்தார்கள்.
பின்னர் அந்தத் தொடரை அப்படியே கற்காலத்துக்கு மாற்றினார்கள். தற்போதைய வாழ்க்கையில் என்னென்ன வசதிகள் உள்ளனவோ, அதை அப்படியே கற்கால வாழ்க்கைக்கு மாற்ற முடியும் என்ற பார்பெராவின் அசைக்க முடியாத நம்பிக்கைக்குச் சான்றாக, இத்தொடர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தத் தொடர் 1960 செப்டம்பர் 30-ம் தேதி முதன்முதலில் ஒளிபரப்பானது.
பிளின்ட்ஸ்டோனின் கதை:
இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முந்தைய காலகட்டமான கற்காலத்தில், பெட்ரா என்ற ஒரு கற்பனை நகரில் கதை நடக்கிறது. ஆனால், 20-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தும் அனைத்துக் கருவிகளையும் இவர்கள் அப்போதே பயன்படுத்துவதாகக் கதை அமைக்கப்பட்டதே இந்தத் தொடரின் வெற்றிக்கு முக்கியக் காரணம்.
ஃப்ரெட் பிளின்ட்ஸ்டோன், அவருடைய அடுத்த வீட்டு நண்பரான பார்னி ரப்பிள் ஆகியோரின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களைச் சார்ந்தே கதைகள் நகர்ந்தன. தற்கால நவீன கருவிகளை அவர்கள் எவ்வாறு கற்காலப் பாணியில் வடிவமைத்துள்ளனர், ஒவ்வொரு அத்தியாயத்திலும் என்ன புதுமை வரப்போகிறது என்ற ஆர்வம் ரசிகர்களைப் பார்க்கத் தூண்டியது.
கதாபாத்திரங்கள்
ஃப்ரெட் பிளின்ட்ஸ்டோன்: இந்தக் கதையின் நாயகனான இவர், ஒரு முன்கோபக்காரர். நகரின் முக்கிய நிறுவனத்தில் கிரேன் இயக்கும் பணியாளரான இவருடைய சேஷ்டைகள்தான் தொடருக்கு அடிப்படை. இவர்களுடைய வளர்ப்புப் பிராணியான டீனோ என்ற டைனோசர் குட்டி, அடிக்கடி இவருடைய கால்களின் நடுவே வந்து இவரை இடறிவிட்டுவிடும். அதனால் கோபம் கொள்ளும் இவரைச் சாந்தப்படுத்தும் வகையில், அந்த டைனோசர் குட்டி இவருடைய முகம் முழுவதும் முத்தம் கொடுத்துச் சமாதானப்படுத்தும்.
வில்மா பிளின்ட்ஸ்டோன்: ஷாப்பிங் செய்வதையே முழு நேரப் பொழுதுபோக்காகக் கொண்டவர் இவர். கணவரைவிடப் புத்திசாலி. வீட்டையும், குழந்தையையும் பொறுப்பாகப் பராமரிக்கும் இவர், கதையின் முக்கியமான அங்கம்.
பெப்பிள்ஸ் பிளின்ட்ஸ்டோன்: ஃப்ரெட்-வில்மாவின் மகள்தான் இந்தக் குழந்தை. இது இன்னமும் பேச ஆரம்பிக்கவில்லை. அத்துடன் இவர்களுடைய வீட்டில் ஒரு புலிக்குட்டியும் செல்லமாக வளர்க்கப்படுகிறது.
பார்னி ரப்பிள்:
இவர்தான் இந்தத் தொடரின் இரண்டாவது முக்கியக் கதாபாத்திரம். ஃப்ரெட்டின் அடுத்த வீட்டுக்காரர். இவர் அதே குவாரியில் பணிபுரிகிறார். ஃப்ரெட்டின் முன்கோபத்தால் ஏற்படும் விளைவுகள் இவரைத்தான் அதிகமாகப் பாதிக்கும்.
தொடக்கமும் முடிவும்
இந்தத் தொடர் முழுக்க முழுக்கப் பார்வையாளர்கள் மற்றும் விளம்பரதாரர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டது. எது இந்தத் தொடரின் வெற்றிக்குக் காரணமாக இருந்ததோ, அதுவே இதன் முடிவுக்கும் காரணமாக அமைந்தது. தொடரின் மூன்றாவது வருடத்தில் பிளின்ஸ்டோனுக்குப் பிறக்கும் குழந்தையை, விளம்பரக் காரணங்களுக்காகப் பெண் குழந்தையாக மாற்றினார்கள். பெண் குழந்தைக்கான பொம்மைகள் அதிகமாக விற்கும் அல்லவா? அதன் பிறகு அந்த முழு நிகழ்ச்சிக்கும் விளம்பரதாரராகத் திராட்சைப் பழரசம் மற்றும் ஜாம் தயாரிக்கும் நிறுவனம் முன்வந்தது.
அதன் பின்னர் கதையில் மறுபடியும் குழந்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. குடும்பம் முழுவதற்குமான இந்த நிகழ்ச்சி மறுபடியும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியாக மாறியது. இதன் விளைவாக இந்தத் தொடருக்கு வரவேற்பு குறைந்தது. இறுதியில் தொடர் நிறுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT