Last Updated : 29 Apr, 2015 12:36 PM

 

Published : 29 Apr 2015 12:36 PM
Last Updated : 29 Apr 2015 12:36 PM

உயிரிகள் உலகம்: ஒளி தரும் வண்டுகள்!

இரவு நேரங்களில் பளிச்பளிச் என வெளிச்சத்தைச் சிந்தியபடி பறந்து செல்லும் மின்மினிப் பூச்சிகளைப் பார்த்திருப்பீர்கள். பூச்சி என்று சொன்னாலும் மின்மினி வண்டு இனத்தைச் சேர்ந்தது. இவற்றில் 2,000 இனங்கள் இருக்கின்றன. வெப்பமும் ஈரப்பதமும் மிகுந்த இடங்களில் இவை வசிக்கின்றன. அண்டார்டிகாவைத் தவிர மற்ற கண்டங்களில் மின்மினிகள் வாழ்கின்றன. ஆசியாவிலும் தென் அமெரிக்காவிலும் இவற்றின் எண்ணிக்கை மிக அதிகம். குளம், குட்டை போன்ற நீர்நிலைகளுக்கு அருகேயும் காடுகளுக்கு அருகிலும் வசிப்பிடங்களைத் தேர்ந்தெடுக்கின்றன.

முதிர்ந்த வண்டுகள் மட்டுமில்லை, மின்மினியின் முட்டைகள், லார்வா புழுக்களும்கூட ஒளியை உமிழ்கின்றன. ஆணும் பெண்ணும் சேர்ந்து குடும்பம் நடத்திய பிறகு, பெண் மின்மினி நிலத்தில் முட்டைகளை இடும். 3 முதல் 4 வாரங்களில் முட்டைகளில் இருந்து புழுக்கள் வெளியே வந்துவிடும். மண்புழுக்களும் நத்தைகளும்தான் மின்மினிப் புழுக்களின் உணவு. இரையைக் கண்டதும் தன் கொடுக்கால் கொட்டும். வேதிப் பொருள் இரையின் உடலுக்குள் சென்றதும் மயக்கமடைந்துவிடும். பிறகு இரைக்குள் செரிமான நொதிகளைச் செலுத்தும். சிறிது நேரத்தில் இரை, திரவப் பொருளாக மாறிவிடும். இரையைச் சுற்றி மின்மினிப் புழுக்கள் அமர்ந்து, சாற்றை உறிஞ்சிக் குடித்துவிடும்.

கோடைக்காலம் முடியும் வரை புழுக்கள் நன்றாகச் சாப்பிட்டு வளர்கின்றன. குளிர்காலம் வந்தவுடன் மண்ணுக்கு அடியிலோ, மரப்பட்டைகளுக்கு அடியிலோ தங்கி, நீண்ட உறக்கத்துக்குச் சென்றுவிடுகின்றன. இளவேனிற்காலம் வந்த பிறகு, இரண்டு வாரங்களில் புழுக்கள் முழு வண்டுகளாக மாற்றம் அடைகின்றன. இவை சராசரியாக ஒன்பது சென்டிமீட்டர் நீளம் வளரும். தலை கறுப்பாகவும் இரண்டு சிவப்புப் புள்ளிகளுடனும் காணப்படும். உடலைச் சுற்றி மஞ்சள் கோடுகள் இருக்கும். பூந்தேனையும் பூச்சிகளையும் சாப்பிடுகின்றன. சில வகை மின்மினிகள் சக மின்மினிகளையே சாப்பிட்டுவிடுகின்றன.

மின்மினிகளின் அடிவயிற்றில் ஒளிரும் பகுதி இருக்கிறது. பெரும்பாலும் பெண் மின்மினிகள் ஒளியை உமிழ்வதில்லை. பெண்ணுக்குத் தான் இருப்பதை உணர்த்தவும் எதிரிகளை எச்சரிக்கவும் ஒளியை உமிழ்கின்றன ஆண் மின்மினிகள். ஆணும் பெண்ணும் ஒளியின் மூலம் தகவல் பரிமாறிக்கொள்கின்றன. வெளிச்சத்தை வெளிவிடுவதன் மூலம் இணையை ஈர்க்கிறது ஆண் மின்மினி. பகலில் சுற்றித் திரியும் மின்மினிகள் ஒளியை உமிழ்வதில்லை. இரவில் உணவு தேடி அலையும் மின்மினிகளே ஒளியை உமிழக்கூடிய சக்தியைப் பெற்றுள்ளன.

நம் வீடுகளில் ஒளிரக்கூடிய பல்புகளில் 90 சதவிகித ஆற்றல் வெப்பமாக இருக்கும். 10 சதவிகிதமே ஒளியாக இருக்கும். ஆனால் மின்மினிகளின் ஒளியில் 100 சதவிகிதம் வெளிச்சமாகவே வெளிப்படுகிறது. அதாவது மின்மினி ஒளியில் வெப்பமே கிடையாது.

மின்மினியின் வால் பகுதியில் லூசிஃபெரேஸ், லூசிஃபெரின் என்ற இரண்டு வேதிப் பொருட்கள் உற்பத்தியாகின்றன. லூசிஃபெரின் வெப்பத்தை எதிர்க்கக்கூடியது. லூசிஃபெரேஸ் ஒளியை உமிழக்கூடியது.

தூக்கணாங்குருவிகள் தங்கள் கூடுகளில் களிமண்ணை வைத்து, அதில் மின்மினிப் பூச்சிகளை ஒட்டி வைத்து கூடுகளை அழகுபடுத்துகின்றன. மனிதர்களும் வெளிச்சத்துக்காக மின்மினிகளைப் பிடித்து பாட்டிலில் போட்டு வைப்பார்கள்.

முதிர்ச்சியடைந்த மின்மினிகள் மிகக் குறைந்த காலமே உயிர்வாழ்கின்றன. அதாவது இரண்டு மாதங்கள்வரை உயிரோடு இருக்கின்றன. அந்த இரண்டு மாதங்களில் குடும்பம் நடத்தி, முட்டைகளை இட்டு பிறகு, இறந்தும் போய்விடுகின்றன. லார்வா எனப்படும் புழுக்கள்தான் ஓராண்டு காலம்வரை உயிர் வாழ்கின்றன.

மின்மினிகள் தங்களைச் சாப்பிட வேண்டாம் என்று எதிரிகளுக்கு எச்சரிக்கின்றன. அதையும் மீறி எதிரிகள் சாப்பிட நெருங்கினால் உடலிலிருந்து ரத்தத்தைப் பீய்ச்சுகின்றன. கசப்புச் சுவையுடைய இந்த ரத்தம் சில உயிரினங்களுக்கு விஷமாக மாறிவிடும். அதனால் பெரும்பாலும் மின்மினிகளைச் சாப்பிட எந்த உயிரினமும் விரும்புவதில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x