Published : 29 Apr 2015 12:06 PM
Last Updated : 29 Apr 2015 12:06 PM
வனா வானத்தையே பாத்துக்கிட்டு இருந்தா. மேகங்கள் கொஞ்சம் கொஞ்சமா சேர ஆரம்பிச்சது. எல்லாம் சேர்ந்து பெரிய மேகமா ஆயிடுச்சு. கண்ண எடுக்காம பாத்துக்கிட்டே இருந்தா. ‘மேகத்திலிருந்து இப்ப ஒரு பறவை பறந்து வந்தா.... எவ்வளவு நல்லா இருக்கும்?’
புதுசா ஒரு பறவையைப் பார்க்க வனா ஆசைப்பட்டா. வனாதான் கதசாமிக்கு ரொம்ப நெருக்கமாச்சே. அவ நெனச்ச மாதிரியே மேகத்திலிருந்து ஒரு பெரிய பறவை பறந்து வந்துச்சு.
அது ரொம்ப பெருசா இருந்துச்சு. அதோ எதிரில தெரியுதே அந்த மலையவிடப் பெருசு. அவ்வளவு பெரிய பறவை வானத்தில பறக்கறத பாத்தா ஆச்சரியமா இருக்கும் இல்லையா? மலை அளவுக்கு வானத்தில பறந்தா சூரிய வெளிச்சம் வருமா? வெளிச்சமாத்தான் இருந்துச்சு. எப்படி? பறவையே வெளிச்சம்தான்.
சரி, அது என்ன பறவை? அது நாம தினமும் பாக்குற பறவை அல்ல. வேற பறவை. இந்தப் பறவைக்கு என்ன பேரு? கதைப் பறவை. சரி. இந்தப் பறவை எங்கிருந்து வருது. கதசாமி கோயில்ல இருந்து வருது.
ஓ... கத தர சாமியோட கோயிலா?!
கோயிலுக்குப் பக்கத்துல ஒரு மரம் இருக்கு. நாம இருக்கிற உலகத்தைவிட மிகவும் பெரிசு. அது என்ன மரம்? கதை மரம். நாம கேட்ட கேட்கிற, கேட்கப்போகிற எல்லாக் கதைகளும் அந்த மரத்துல இருக்கு.
கதை மரத்துல ஒரு பூ பூத்தா ஒரு பிரபஞ்சமே உருவாகும். பிரபஞ்சம்னா? கோடி கோடி சூரியன்கள் சேர்ந்தது. கோடிப் பூக்கள் இப்ப மரத்தில இருக்கு. ஒரு பூவில உருவான பிரபஞ்சத்துலதான் நாம இருக்கோம். கதை மரம் ஏன் உலகத்தைவிடப் பெரிசா இருக்கு? இப்ப விடை கிடைச்சாச்சா?
வனா பாக்கற கதைப் பறவை கதை மரத்துல இருந்துதான் வருது. வனா பாப்பாவ பாக்கறதுக்காக அந்தப் பறவை இப்ப வருது. வனா ரொம்ப நல்ல பாப்பா. நீங்களும் நல்ல பாப்பாவா இருந்தா உங்களைத் தேடியும் கதைப் பறவை வரும். பறவையைப் பார்த்ததும் வனா வீட்டுக்குள் ஓடினா. பழத்தட்டிலிருந்த பெரிய கொய்யாப்பழத்தை எடுத்து வந்தா. அதை வைச்சுக்கிட்டுக் காத்திருந்தா. பறவை வனாவை நோக்கிக் கீழே இறங்கிச்சு.
மலை மாதிரி இருக்கிற பறவைக்கு வயிறு எவ்வளவு பெருசா இருக்கும். இந்தச் சின்னக் கொய்யா அதுக்கு எப்படிப் போதும். மனசு வருந்திக் கதசாமிய வேண்டினா. கதசாமியால எல்லாம் முடியும்தானே? பறவை அருகில் வர வரத் தட்டிலிருந்த கொய்யா பெருசாகிக்கிட்டே வந்துச்சு. வனா இருந்த வீடும் பெருசாச்சு. இப்ப வீடு எவ்வளவு பெருசு? ஊரு அளவுக்குப் பெருசு.
யானை அளவுக்குப் பழம் பெருசாச்சு. பறவைக்கு ரொம்ப சந்தோஷம். அதனால வனாவையும் அதுக்குப் பிடிச்சிப்போச்சு. கீழ இறங்கி பழத்த ருசிச்சிச் சாப்பிட்டுச்சு. முதல்முறையா வயிறுமுட்ட சாப்பிட்ட சந்தோஷம்.
‘உனக்கு என்ன வேணும். என்னால எதுவும் தர முடியும்... கேளு’ன்னு பறவை சொல்லிச்சு.
‘எனக்குக் கதை பிடிக்கும். தினம் வந்து ஒரு கதை சொல்லுவியா?’ என்றாள் வனா.
‘அப்படியே செய்கிறேன்’ என்றது பறவை. வனாவைத் தேடிப் பறவை தினமும் வந்தது. ஒவ்வொரு நாளும் வனா அதற்குப் பழம் தந்தா. பழத்தைத் தின்னு முடிச்சதும் பறவை ஒரு கதையைச் சொல்லும்.
வனாவிடம் கதைப் பறவை சொன்ன கதையைக் கேட்க உங்களுக்கு ஆசையா? அதற்கு இன்னும் ஒரு வாரம் காத்திருங்களேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT