Published : 29 Apr 2015 11:57 AM
Last Updated : 29 Apr 2015 11:57 AM
வெயில் காலத்துல எந்தப் பழங்கள நிறையச் சாப்பிடுவீங்க? நீர்ச் சத்து அதிகமாக இருக்குற பழங்கள சாப்பிடுவீங்க இல்லையா? குறிப்பாக என்னை அதிகமா நீங்கச் சாப்பிடுவீங்க. பார்க்கக் குண்டா, உருண்டையா இருப்பேன்; பச்சை கலர்ல இருப்பேன்னு சொன்ன பிறகு நீங்க நிச்சயம் என்னைக் கண்டுபிடிச்சிடுவீங்கன்னு எனக்குத் தெரியும்.
ஆமா, நான்தான் தர்ப்பூசணி பழம் வந்துருக்கேன். வெயில் காலத்துல அதிகமா என்னைச் சாப்பிட்டா மட்டும் போதுமா? என்னைப் பத்தி தெரிஞ்சுக்க வேணாமா? அதான் உங்கள பார்க்க வந்துட்டேன்.
உங்க வறட்சியையும் உடலையும் குளிர வைக்குற நான் பொறந்த இடம் எது தெரியுமா? ஆப்பிரிக்கா கண்டத்துல தென் பகுதியிலதான் பொறந்தேன். எனக்கு எவ்ளோ வயசு இருக்கும்ணு நினைக்கிறீங்க? எனக்கு 5,000 வயசு ஆகிடுச்சின்னு 1850-ம் வருஷத்துல என்னைப் பத்தி ஆய்வு செஞ்ச ஆய்வாளர் டேவிட் லிவிங்ஸ்டன் சொல்லியிருக்கிறார்.
முற்காலத்துல எகிப்து நாட்டுல இறந்துபோன அரசர்களைப் புதைக்கிறப்ப என்னோட விதைகளையும் சேர்த்துப் புதைக்கிற பழக்கம் இருந்துருக்கு. மதிப்புக்குரியவங்க திரும்பவும் உயிர்த்தெழுவாங்கன்னு நம்பிக்கையில இப்படிச் செஞ்சிருக்காங்க.
வேறு எந்தப் பழத்துக்காவது இப்படிச் செஞ்சிருப்பாங்களான்னு தெரியல. ஒரு கட்டத்துல மூர் வம்சத்துக்காரங்க மூலமா ஐரோப்பா கண்டத்துக்குப் போனேன். அங்க ஸ்பெயின் நாட்டுல என்னை வளர்த்திருக்காங்க. இந்தியாவுக்கு எப்போ வந்தேன்னு கேட்குறீங்களா? சொல்றேன்... சொல்றேன்...
இந்தியாக்கு கி.பி. 7-ம் நூற்றாண்டுல வந்தேன். சீனாவுக்கு 10-ம் நூற்றாண்டுல போனேன். அப்புறம் அப்படியே அமெரிக்காவுக்குப் போயிட்டேன்.
‘குகுபுபிடாசே’ என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஆளு நாணு. என்னோட தாவரவியல் பேரு சிட்ருலஸ் லேனட்டஸ். வித்தியாசமான சுவையும், மாறுபட்ட வடிவமும் இருந்ததால வெள்ளைக்காரங்களுக்கு என்ன பேரு வைச்சு என்னைக் கூப்பிடுறதுன்னு தெரியல. எனக்குள்ள 92 சதவீதம் தண்ணீரே இருக்குறதால ‘வாட்டர் மெலன்’ன்னு பேரு வைச்சிடாங்க.
தமிழ்ல்ல எனக்கு நிறையப் பேரு இருக்கு. கொமட்டிப்பழம், கோசாப்பழம், நீர்ப்பூசணின்னு நிறையப் பேரு இருந்தாலும் தர்ப்பூசணின்ற பேருதான் நிலைச்சுடுச்சி. தரையோடு சேர்ந்து வளர்றதால தரைப்பூசணிப்பழம்னு என்னைக் கூப்பிட்டாங்க. அதுவே பின்னாடி தர்ப்பூசணின்னு ஆயிடுச்சி.
உலகம் முழுக்கச் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகை தர்ப்பூசணிகள் இருக்கு. பல வேளாண் விஞ்ஞானிகள் பல உருவங்கள்லயும், வண்ணங்கள்லயும் என்னை உருவாக்குறாங்க. பொதுவா பழங்கள செடியிலேர்ந்து பறிச்சவுடனே பழுக்கும் இல்லையா? ஆனா, பெரும்பாலும் கொடியிலேர்ந்து என்னைப் பறிச்சிட்டா பழுக்கமாட்டேன். அதனால விவசாயிங்க என்னைப் பக்குவமா பார்த்துப் பறிப்பாங்க. ஒவ்வொரு பழத்துக்கும் ஒவ்வொரு வாசனை இருக்கும். எனக்குன்னு எந்த வாசனையும் கிடையாதுன்னு உங்களுக்குத் தெரியுமில்லையா?
எனக்குள்ள நிறையத் தண்ணீர் இருக்கு. அப்புறம் ‘சிட்ரூலின்' என்ற சத்துப்பொருளும் அதிகம் இருக்கு. நார்ச் சத்து, இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், தாது உப்புகள் கொஞ்சம் இருக்கு. வைட்டமின் சி, பி., நியாசினும் இருக்கு. லைக்கோபீன்னு சொல்லுற நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்குற பழங்கள நானும் ஒண்ணு. அதனால உங்களோட உடல் வளர்ச்சிக்கு நானும் முக்கியம்.
வெயில் காலத்துல என்னை அதிகமா பார்க்குறதால நான் இந்தப் பருவத்துலதான் நிறைய காய்ப்பேன்னு நினைக்காதீங்க. வருஷம் முழுக்க நான் காய்ப்பேன். உங்களோட தாகத்தைத் தணிக்கிறத்துக்காகக் கடவுள் என்னைப் படைச்சிருக்காரு. இந்த உலகத்தில எல்லா உணவுப் பொருளும் அழிஞ்சாலும் ஒரு தர்ப்பூசணி போதும்ணு ஆங்கில எழுத்தாளர் மார்க் ட்வைன் சொல்லியிருக்காரு. அது உண்மைதானே? அப்போ, நான் வரட்டுமா... டாட்டா, பை…பை…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT