Published : 08 Apr 2015 01:15 PM
Last Updated : 08 Apr 2015 01:15 PM
அன்புக் குழந்தைகளே...
கோடை விடுமுறை தொடங்கிவிட்டாதா? விடுமுறைக்கு ஊரில் உள்ள உறவினர்கள் வீட்டுக்குப் போவீர்கள். ஊரில் உள்ள சுற்றுலா மையங்களுக்குச் சென்று குதூகலமாக மகிழ்வீர்கள். ஒவ்வொரு ஊரிலும் குழந்தைகளுக்கான சுற்றுலாத் தலங்கள், அறிவியல் மையங்கள், பொழுதுபோக்கு மையங்கள் நிறைய உள்ளன. அவற்றைப் பற்றி கோடை விடுமுறை முடியும் வரை ஒவ்வொன்றாகப் பார்ப்போமா?
சென்னை நகருக்குள் நினைத்த நேரத்தில் குழந்தைகளை அழைத்துச் செல்லும் ஒரு இடம் என்றால், அது கிண்டி தேசியப் பூங்காதான். அதில் ஒரு பகுதியான கிண்டி சிறுவர் பூங்கா, அண்ணா பல்கலைக்கழகம் அருகே அமைந்துள்ளது. இந்தியாவிலேயே நகரின் மையப் பகுதியில் உள்ள ஒரு சில தேசியப் பூங்காக்களில் இதுவும் ஒன்று.
சிறிய தேசியப் பூங்காவும்கூட. ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் விலங்குகளை இங்கே வேட்டையாடியிருக்கிறார்கள். சுதந்திரத்துக்குப் பிறகு வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் இப்பூங்கா கொண்டு வரப்பட்டது. அப்படியே சிறுவர் பூங்காவைச் சுற்றிவிட்டு வருவோமா?
பூங்காவில் நுழைந்ததுமே நுழைவாயிலில் உள்ள பிரம்மாண்ட டைனோசர் வரவேற்கிறது. அதைத்தாண்டி உள்ளே சென்றால், வண்ண மீன்கள், மான்கள் கண்ணைக் கவர்கின்றன. பழுப்பு, செந்நிறங்களில் கூழைக்கடா உள்பட பலவிதப் பறவைகள் கீச்சுக் குரலில் கத்தி நம்மைக் கவருகின்றன. கிண்டி தேசியப் பூங்காவில் கறுப்பு நிறக் வெளிமான்களும், புள்ளி மான்களும் உள்ளன.
குறிப்பாகப் புள்ளி மான்கள் சர்வச் சாதாரணமாக அங்குமிங்கும் உலாவுவதைப் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். மான்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் பறவைகளும் இங்கே நிறைய உள்ளன. வண்ணத்துப்பூச்சிகளையும்கூட இந்தப் பூங்காவில் பார்க்கலாம்.
பூங்காவில் ஏராளமான மரங்கள் இருப்பதால் வெயிலின் தாக்கம் கொஞ்சமும் தெரியாது. குளுகுளுவென காற்று வாங்கிக்கொண்டு அப்படியே காலாற நடந்தபடி பறவைகளையும் விலங்குகளையும் பார்த்து மகிழலாம். சாப்பிடவும், ஓய்வெடுக்கவும் நிறைய இடங்கள் உள்ளன.
சிறுவர் பூங்கா என்றால் குழந்தைகளை மகிழ்விக்கும் விளையாட்டுப் பொருட்கள் இருக்க வேண்டும் இல்லையா? குழந்தைகள் விளையாடுவதற்காக ஊஞ்சல், சறுக்கு மெத்தை, சீசாக்களை இங்கே அமைத்திருக்கிறார்கள். இவை குழந்தைகளைக் குதூகலமடையச் செய்யும்.
சிறுவர் பூங்காவை ஒட்டியே பாம்பு பண்ணையும் உள்ளது. பாம்பென்றால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள் இல்லையா? இங்கு அப்படிப் பயப்பட வேண்டியதில்லை. பல விஷமுள்ள மற்றும் அரிய வகை பாம்புகளைக் கண்ணாடி கூண்டுக்குள் வைத்துப் பராமரிக்கிறார்கள். மலைப்பாம்புகள், கட்டுவிரியன், நல்லப் பாம்பு, சாரைப் பாம்பு, மரங்களில் வசிக்கும் பாம்பு, கடல் பாம்பு, தண்ணீர்ப் பாம்பு, மண்ணுளி பாம்பு என 40-க்கும் அதிகமான வகைகளைச் சேர்ந்த பாம்புகள் உள்ளன. ஒவ்வொரு பாம்பைப் பற்றியும் தகவல்களை வைத்திருக்கிறார்கள். இங்கே பாம்புகள் மட்டுமல்ல, முதலைகளும் உள்ளன. சதுப்பு நில முதலை, உப்பு நீர் முதலை, ஆப்பிரிக்க முதலைகளைப் பார்க்கலாம். இங்கு ஆமைகளும்கூட இருக்கின்றன.
பாம்பு, முதலை, ஆமைகளைப் பற்றி தெரிந்துகொள்ளத் தனித்தனியாகச் சோதனைக்கூடம் ஒன்றும் உள்ளது. பாம்புகளின் வரலாறு பற்றியும், அவற்றின் குணாதிசயம் பற்றியும் சொல்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை எல்லா நேரத்திலும் காண முடியாது.
காலை 11.30, மதியம் 1.30, மாலை 4.30 மணிக்குப் பார்க்கலாம். சிறுவர், சிறுமிகளுக்கு 5 ரூபாயைக் கட்டணமாக வசூலிக்கிறார்கள். பெரியவர்களுக்கு 20 ரூபாய். சிறுவர் பூங்காவுக்கும், பாம்பு பண்ணைக்கும் செவ்வாய்கிழமை வார விடுமுறை. காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை பூங்காவுக்குள் செல்ல அனுமதி உண்டு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT