Published : 08 Apr 2015 01:00 PM
Last Updated : 08 Apr 2015 01:00 PM
வீட்டில் உள்ள சமையல் அறையில் அதிகமாகப் புகை ஏற்பட்டால் என்ன செய்வோம்? கண்ணைக் கசக்கிக்கொண்டு, புகை வெளியேற வீட்டு ஜன்னல்களைத் திறந்து வைப்போம் இல்லையா? புகையை விரைவாக எப்படி வெளியேற்றலாம்? அதைத் தெரிந்துகொள்ள ஆசையா? வாங்க, ஒரு சோதனை செய்து தெரிந்துகொள்வோம்.
தேவையான பொருட்கள்:
ஆறு அடி நீளமும் அரை அடி விட்டமும் உள்ள பிளாஸ்டிக் பை.
சோதனை
1. இருபுறமும் திறந்த நீளமான பிளாஸ்டிக் பையின் ஒரு முனையில் இறுக்கமாக முடிச்சு போட்டுக் கொள்ளுங்கள்.
2. இப்போது முடிச்சு போட்ட பகுதியை உங்கள் நண்பரிடம் கொடுத்து பூமிக்கு இணையாகப் பிடிக்கச் சொல்லுங்கள்.
3. திறந்த முனையில் வாயை வைத்துக் காற்றை ஊதுங்கள். எத்தனை மூச்சுகளில் பிளாஸ்டிக் பையைக் காற்றை ஊதி நிரப்ப முடியும் என்று உங்கள் நண்பரிடம் சவால் விடுங்கள். பதினைந்து அல்லது இருபது தடவை ஊதினால் மட்டுமே பிளாஸ்டிக் பையை ஊதி முடிக்க முடியும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
4. பல தடவை ஊதுவதற்குப் பதிலாக ஒரே ஒரு மூச்சிலேயே காற்றை ஊதிப் பையை நிரப்பிவிட முடியும் என்று எல்லோரிடமும் சவால் விடுங்கள்.
5. அதே பிளாஸ்டிக் பையை வாங்கிப் பையின் வாயில் ஒட்டி வைக்காமல் உங்கள் வாய்க்கும் பையின் வாய்க்கும் சற்று இடைவெளிவிட்டுக் காற்றை ஒரே ஒரு தடவை வேகமாக ஊதுங்கள். இப்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள்.
6. ஒரே மூச்சில் பை முழுவதும் காற்று நிறைந்திருப்பதைப் பார்க்கலாம். பைக்குள் இருக்கும் காற்று வெளியே போகாதவாறு முனையை இறுக்கிப் பிடித்துக்கொள்ளுங்கள்.
நடப்பது என்ன?
ஒரே மூச்சில் வேகமாகக் காற்றை ஊதியவுடன் பை நிறைகிறதே எப்படி? பையின் வாயோடு உங்கள் வாயை ஒட்டி வைத்து ஊதும்போது நம் நுரையீரலுக்குள் இருக்கும் காற்று மட்டும்தான் உள்ளே செல்லும். அதனால்தான் பையை நிரப்ப மீண்டும் மீண்டும் பலமுறை ஊதவேண்டியிருக்கிறது.
ஆனால், பிளாஸ்டிக் பையின் வாயைச் சற்று விரித்துப் பிடித்து உங்கள் வாயிலிருந்து சற்று இடைவெளி விட்டு வேகமாகக் காற்றை ஊதும்போது வளி மண்டலத்தில் உள்ள காற்றும் சேர்ந்து வேகமாகப் பைக்குள் போகிறது. இதனால்தான் ஒரே மூச்சில் பிளாஸ்டிக் பை உடனடியாக நிரம்பிவிடுகிறது.
ஆனால், பை காற்றால் நிரம்புவதற்கு ஓர் அறிவியல் காரணமும் இருக்கிறது. ஒரு திரவம் அல்லது காற்று எங்கே வேகமாகப் பாய்கிறதோ அங்கு அழுத்தம் குறையும். இதுவே பெர்னோலி தத்துவம். இந்த விதிப்படி பிளாஸ்டிக் பையின் வாயருகே காற்றை வேகமாக ஊதும்போது அங்கே காற்றழுத்தம் குறைக்கிறது. இந்த அழுத்தக் குறைவை நிறைவு செய்யச் சுற்றியுள்ள வளிமண்டலக் காற்று வேகமாகப் பைக்குள் போய் நிறைந்துவிடுகிறது. இந்தச் சோதனையை பெர்னோலி காற்றுப் பை சோதனை என்றும் கூறலாம்.
பயன்பாடு
வீட்டு சமையல் அறைகளில் புகையை வெளியேற்றும் மின் விசிறி (Exhaust fan) சுவரில் பொருத்தப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். சுவிட்சைப் போட்டால் புகை வெளியேறுவதற்கு நீண்ட நேரம் பிடிக்கும். இது காற்றுப் பையின் வாயை வாயோடு ஒட்டி வைத்து ஊதுவதைப் போன்றதாகும்.
பிளாஸ்டிக் பையின் வாய்க்கும் உங்கள் வாய்க்கும் இடைவெளி விட்டு ஊதுவதைப் போல, இந்த மின்விசிறிக்கும் சுவருக்கும் இடையில் சுமார் ஒரு அடி இடைவெளிவிட்டுப் பொருத்தினால் சமையல் அறையின் சுவரில் உள்ள துவாரம் வழியாக அதிகமான காற்றும் புகையும் உடனடியாக வெளியே செல்லும்.
அழுத்தம் அதிகமுள்ள பகுதியிலிருந்து குறைந்த அழுத்தம் உள்ள பகுதிக்குக் காற்று செல்வதைக் ‘காற்றின் நேர் பாய்தல்’ என்கிறார்கள். இதன் அடிப்படையில்தான் தீயணைப்பு வீரர்கள் கட்டிடங்களிலிருந்து விரைவாகப் புகைமூட்டத்தை வெளியேற்றுகிறார்கள்.
பட உதவி: அ. சுப்பையா பாண்டியன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT