Last Updated : 08 Apr, 2015 12:57 PM

 

Published : 08 Apr 2015 12:57 PM
Last Updated : 08 Apr 2015 12:57 PM

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

ஒரு காட்டில் நான்கு காட்டெருமைகள் வாழ்ந்து வந்தன. நான்குமே இணைபிரியாத நண்பர்கள். எப்போதுமே ஒன்றாகத்தான் இவை செல்லும். புல், பூண்டைப் பார்த்தால்கூடத் தனியாக எந்த மாடும் சாப்பிடாது. ஒன்றாகத்தான் சாப்பிடும். இந்த நான்கு மாடுகளைப் பார்த்து மற்ற விலங்குகள் பொறாமைப்படும். ஏனென்றால், நான்குமே ஒன்றாக இருப்பதால், பலத்தோடு சுற்றிவந்தன. புலி, சிங்கம்கூட இவை அருகே வர அஞ்சின.

காட்டில் கடும் கோடைக் காலம் வந்தது. அதனால் காட்டில் பயங்கர வறட்சி. புல், பூண்டுகள் எல்லாம் காய்ந்துவிட்டன. குட்டையில் இருந்த தண்ணீரெல்லாம் வற்றிவிட்டது. வறட்சியைச் சமாளிக்க முடியாமல் சில விலங்குகள் பக்கத்து ஊரில் இருந்த காட்டுக்கு இடம்பெயர்ந்தன. இந்த நான்கு காட்டெருமைகளும் என்ன செய்யலாம் என யோசித்தன.

“கோடை முடியும்வரை இந்த இடத்தில் இருக்க முடியாது. அதனால் நாம் வேறு எங்கேயாவது சென்றுவிடுவோம்” என்று ஒரு காட்டெருமை சொல்லியது. அதை இன்னொரு காட்டெருமையும் ஏற்றுக்கொண்டது, மற்ற இரு காட்டெருமைகளும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

“கோடை முடிந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். அதுவரையில் சமாளித்துவிடுவோம். எனவே வேறு எங்கேயும் போக வேண்டாம்” என மற்ற இரு காட்டெருமைகளும் கூறின. இடம் பெயர விருப்பம் தெரிவித்த மற்ற இரு காட்டெருமைகளுக்கும் இந்த யோசனை பிடிக்கவில்லை. அதனால், நான்கு காட்டெருமைகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

கடைசியில் இரண்டு காட்டெருமைகள் பிரிந்து பக்கத்து காட்டுக்குச் சென்றன. மற்ற இரண்டு காட்டெருமைகளும் அங்கேயே இருந்தன. நிறைய விலங்குகள் பக்கத்து ஊர் காட்டுக்குச் சென்றுவிட்டதால் புலி, சிங்கம் போன்ற பெரிய விலங்குகளும் இரை கிடைக்காமல் திண்டாடின.

பக்கத்து ஊர் காட்டுக்குப் போகாத இரண்டு காட்டெருமைகளும் ஒரு நாள் காட்டில் புல், பூண்டைத் தேடிச் சுற்றி வந்தன. அப்போது அந்த வழியாக இரை தேடி வந்த மூன்று சிங்கங்கள், காட்டெருமைகளைக் கண்டதும் குஷியாயின.

“ நான்கு பேரும் ஒன்றாக இருந்ததால், உங்கள் அருகே வந்தால்கூடச் சேர்ந்து எங்களை விரட்டிவிடுவீர்கள். இப்போது நீங்கள் இருவர் மட்டும்தான் இருக்கிறீர்கள். என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று காட்டெருமைகளைப் பார்த்து ஒரு சிங்கம் கேட்டது.

“எங்களுக்கு மிகவும் பசியாக உள்ளது. அதனால் உங்கள் இருவரையும் நாங்கள் சாப்பிடப் போகிறோம்” என்று இன்னொரு சிங்கம் கூறியது.

இதைக் கேட்டதும் காட்டெருமைகள் செய்வதறியாமல் தவித்தன. தப்பித்துப் போக இரு காட்டெருமைகளும் முயன்றன. ஆனாலும் முடியவில்லை. மூன்று சிங்கங்களும் ஒன்றாகச் சேர்ந்து தாக்கியதால் தப்பிக்க முடியவில்லை. கடைசியில் இரு காட்டெருமைகளும் சிங்கங்களுக்கு உணவாயின.

இந்த இரண்டு காட்டெருமைகளும் செய்தது சரியா? எப்போதும் ஒன்றாக இருந்த நான்கு காட்டெருமைகளும் பிரிந்திருக்கக் கூடாது இல்லையா? நான்கும் ஒன்றாக இருந்திருந்தால் சிங்கங்களை விரட்டி இருக்கலாம். போயிருந்தால் உயிருடன் இருந்திருக்கலாம். முரண்டு பிடித்துக்கொண்டு பிரிந்ததால் இப்போது உயிரோடு இல்லை. ஆகவே, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது உங்களுக்குப் புரிகிறது இல்லையா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x