Published : 22 Apr 2015 12:32 PM
Last Updated : 22 Apr 2015 12:32 PM
கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. வெளியூர்களுக்குச் செல்ல ஆரம்பித்திருப்பீர்கள். ரயிலில்கூட ஊருக்குப் போயிருப்பீர்கள். ரயிலுக்காக பிளாட்பாரத்தில் காத்துக் கொண்டிருக்கும்போது பிளாட்பாரத்தில் ஒன்றைக் கவனித்திருக்கிறீர்களா?
பிளாட்பாரத்தின் விளிம்பில் இருந்து கொஞ்சம் தள்ளி மஞ்சள் கோடு வரைந்திருப்பார்கள். இந்த மஞ்சள் கோட்டை ஏன் போட்டிருக்கிறார்கள். அதைத் தெரிந்துகொள்ள அதற்கும் ஒரு சோதனை இருக்கிறது.
தேவையான பொருட்கள்:
இரண்டு குளிர்பான டப்பிகள், ஒரு பாக்கெட் உறிஞ்சு குழல்கள் (ஸ்ட்டிரா)
சோதனை:
1. கோடைகாலத்தில் குளிர்பானம் குடிப்பது மிகவும் பிடிக்கும் இல்லையா? குளிர்பானத்தைக் குடித்துவிட்டு அந்த டப்பாவைத் தூக்கி எறிந்துவிடாமல், இரண்டு டப்பாக்களை வைத்துகொள்ளுங்கள்.
2. ஒரு சென்டி மீட்டர் இடைவெளியில் உறிஞ்சு குழல்களை மேசை மீது சீராகப் பரப்பி வையுங்கள்.
3. அவற்றின் மேல் காலி குளிர்பான டப்பாக்களை வையுங்கள். இரண்டு டப்பாக்களுக்கும் இடையே சுமார் ஐந்து செ.மீ. இடைவெளி இருக்க வேண்டும்.
4. இபோது டப்பாக்களுக்கு இடையே குனிந்து காற்றை ஊதுங்கள்.
இப்போது என்ன நடக்கிறது என்பதைக் கவனியுங்கள். டப்பாக்கள் பறந்து தள்ளிப் போய்விடும் அல்லது தனித்தனியாக விலகிச் சென்றுவிடும் என்று நினைப்பீர்கள். ஆனால், அதுதான் இல்லை. டப்பாக்கள் தனித்தனியாக விலகிச் செல்லாமல் ஒன்றொடொன்று மோதிக்கொள்ளும். இதற்குக் காரணம் என்ன தெரியுமா?
நடந்தது என்ன?
எங்கு ஒரு வாயு அல்லது திரவத்தின் திசைவேகம் அதிகமாக இருக்கிறதோ அங்கு அழுத்தம் குறையும். இதுதான் பெர்னோலி தத்துவம். டப்பாக்களுக்கு இடையே வேகமாகக் காற்றை ஊதும்போது பெர்னோலி விதிப்படி அங்கு அழுத்தம் குறைகிறது.
டப்பாக்களுக்கு வெளிப்புறத்தில் காற்றழுத்தம் அதிகரிக்கிறது. அழுத்தம் அதிகமான இடத்திலிருந்து அழுத்தம் குறைவான பகுதிக்குக் காற்று செல்லும். இந்தக் காற்றழுத்த வேறுபாட்டினால் காற்று வெளிப்புறத்திலிருந்து டப்பாக்களை உள்நோக்கித் தள்ளுகிறது. இரண்டு டப்பாக்களும் வெளிப்புறத்திலிருந்து காற்றழுத்ததால் தள்ளப்படுவதால் அவை ஒன்றோடொன்று மோதிக்கொள்கின்றன.
பயன்பாடு:
ஒருவர் ரயில்வே பிளாட்பாரத்தின் விளிம்புக்கு மிக அருகில் அருகில் நிற்பதாகவும், ரயில் வேகமாக பிளாட்பாரத்தின் அருகே உள்ளே வந்து கொண்டிருப்பதாகவும் வைத்துக்கொள்ளுங்கள். இரண்டு டப்பாக்களில் ஒன்றை பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருப்பவராகவும் மற்றொன்றை விரைவாக வரும் ரயிலாகவும் கற்பனை செய்துகொள்ளுங்கள். ரயில் வேகமாக வரும்போது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருப்பவருக்கும் ரயிலுக்கும் இடையில் வேகமாக வண்டி செல்லும் திசையிலேயே காற்று பாய்வதால் அங்குக் காற்றழுத்தம் குறையும்.
நின்று கொண்டிருப்பவருக்குப் பின்புறத்தில் காற்றழுத்தம் அதிகரிக்கும். காற்றழுத்தக் குறைவினால் டப்பாக்கள் மோதிக்கொள்வதைப் போல பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருப்பவர் ரயிலோடு மோத அதிக வாய்ப்பு உள்ளது. அதனால்தான் ரயில் வரும்போது பிளாட்பாரத்தின் விளிம்பு அருகே நிற்கக் கூடாது.
இதை எச்சரிக்கைச் செய்வதற்காகத்தான் பிளாட்பாரத்தின் விளிம்பு அருகே மஞ்சள் கோடு வரைந்திருப்பார்கள். ரயில் வரும்போது மஞ்சள் கோட்டைத் தாண்டி யாரும் நிற்கக் கூடாது. பிளாட்பாரத்தில் மஞ்சள் கோடு வரையப்பட்டுள்ளதற்கான காரணம் இப்போது உங்களுக்குப் புரிந்துவிட்டதல்லவா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT