Published : 11 Mar 2015 12:20 PM
Last Updated : 11 Mar 2015 12:20 PM
சைக்கிள் டயரை ஓட்டி விளையாடி இருக்கிறீர்களா? டயர் வழவழவென இல்லாமல் மேடும் பள்ளங்களாக இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். சைக்கிள் டயர்கள் ஏன் இப்படி இருக்கின்றன? இதற்கான காரணத்தை தெரிந்துகொள்ள ஆசையா? அப்போ, வாங்க ஒரு சோதனை செய்து பார்த்துவிடுவோம்.
தேவையான பொருள்கள்:
நூறு பக்கங்கள் கொண்ட ஒரே அளவுள்ள இரண்டு புத்தங்கள் அல்லது நோட்டுகள்.
சோதனை:
1. இரண்டு புத்தங்களை அருகருகே வைத்து ஒரு புத்தகத்தின் கடைசி தாள் மீது மற்றொரு புத்தகத்தின் கடைசி தாள் பொருந்துமாறு வையுங்கள்.
2. அந்த இரண்டு புத்தகங்களின் தாள்களை ஒன்றின் மீது மேல் பொருந்துமாறு சேர்த்து வையுங்கள். தாள்களை மடிப்பில்லாமலும் அவற்றுக்கு இடையில் காற்றுப் புகாதவாறும் ஒரே சீராக இருக்குமாறும் தாள்களை அழுத்தித் தடவி விடுங்கள்.
3. இரண்டு புத்தகத்தின் தாள்களும் மாறி மாறி ஒன்றின் மீது ஒன்றாக இருக்குமாறு புத்தகத்தின் அனைத்து தாள்களையும் அமைத்துக் கொள்ளுங்கள்.
4. இப்போது நாம் புத்தகம் இழுக்கும் போட்டியைத் தொடங்குவோமா? ஒரே எடை, உயரம் கொண்ட இரண்டு மாணவர்கள் எதிரெதிராக நின்று கொண்டு ஒன்றின் மேல் ஒன்றாக மேல் பொருந்துமாறு அமைக்கப்பட்ட இரண்டு புத்தகங்களின் முனைகளை கைகளால் இறுக்கமாகப் பிடித்து எதிரெதிர் திசையில் இழுங்கள்.
புத்தகங்களை இழுத்து அவற்றைப் பிரிக்க முடிகிறதா என்று பாருங்கள். எவ்வளவு பலமாக இழுத்தாலும் புத்தகங்களைப் பிரிக்க முடியாது என்பதை நீங்கள் உணர்வீர்கள்.
நடப்பது என்ன?
வெறும் தாள்களை மட்டும் ஒன்றின் மேல் ஒன்றை அடுக்கி இழுத்தால் புத்தகங்களைப் பிரிக்க முடியவில்லை. இதற்கு என்ன காரணம்?
இரண்டு தாள்களை ஒன்றின் மீது ஒன்றாக வைத்து இழுக்கும் போது, தாள்களை இழுக்கும் திசைக்கு எதிர்த் திசையில் உராய்வு விசை செயல்படுகிறது. இது மிகவும் குறைவான விசை. தாள்களின் எண்ணிக்கை 100 மடங்காக அதிகமாகும்போது அவற்றின் தொடு பரப்பு அதிகமாவதால் உராய்வு விசையும் 100 மடங்கு அதிகமாகிறது. இதனால்தான் புத்தகங்களைப் பிரிக்க முடியவில்லை.
சரி, இனி புத்தகங்களை எப்படித்தான் பிரிப்பது? புத்தகங்களுக்கு இடையே சிறிதளவு காற்றை ஊதி புத்தங்களை இழுத்தால் அவற்றை எளிதாகப் பிரித்துவிட முடியும்.
பயன்பாடு
ஒரு பொருள் மற்றொரு பொருள் மீது நகரும்போது அப்பொருளின் இயக்கத்துக்கு எதிராகச் செயல்படும் விசை உராய்வு விசையாகும். பொருள் நகரும் பரப்பு வழவழப்பாக இருந்தால் உராய்வு விசை குறைவாகவும் சொரசொரப்பாகவும் இருந்தால் உராய்வு விசை அதிகமாகவும் இருக்கும்.
சைக்கிள், மோட்டார் சைக்கிள்களில் உள்ள சக்கரங்களில் மேடு பள்ளங்கள் இருப்பதால் சாலைப் பரப்புக்கும் சக்கரத்துக்கும் இடையே உள்ள உராய்வு அதிகமாக இருக்கும். உராய்வு அதிகமாக இருந்தால்தான் சாலைகளில் வாகனங்கள் சறுக்கிச் செல்லாமல் சீராக இயங்க முடியும். உராய்வை அதிகரிப்பதற்காகத்தான் வாகன சக்கரங்களில் மேடு பள்ளங்கள் அமைக்கப்படுகின்றன.
மேலும் மழைக்காலங்களில் சாலைப் பரப்புக்கும் வாகனங்களின் சக்கரத்துக்கும் இடையே உள்ள உராய்வுக் குறைவாக இருப்பதால் வாகனங்களை ஓட்டுநர்கள் மெதுவாகவும் கவனமாகவும் ஓட்டுகிறார்கள்.
பட உதவி: அ.சுப்பையா பாண்டியன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT