Published : 18 Mar 2015 12:32 PM
Last Updated : 18 Mar 2015 12:32 PM

இயற்கையை வரவேற்கும் வியாழன்

எரிபொருளை மிச்சப்படுத்துங்கள்.. மின்சாரத்தைச் சிக்கனப்படுத்துங்கள்.. என்று வார்த்தைகளில் சொல்லிக் கொண்டு இருக்காமல் அதைச் செயலிலும் காட்டிக் கொண்டிருக்கின்றன மதுரையிலுள்ள இரு பள்ளிக்கூடங்கள்.

இங்கே, புத்தகப் படிப்பை மட்டுமில்லாமல், சுற்றுப்புறச் சூழல், பசுமை பரிவு, மனித உறவுகள், தூய்மை உள்ளிட்ட மனித வாழ்க்கைக்கான விஷயங்களும் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. அவை, விராட்டிபத்தில் உள்ள ஸ்ரீ சாதனா மெட்ரிக் மேல்நிலை மற்றும் ஓம் சாதனா மத்திய பள்ளிகள்.

தூய்மை இந்தியா திட்டத்தை அக்டோபர் 2-ம் தேதி தொடங்கினார் பிரதமர் நரேந்திர மோடி. நவம்பர் 2-ல் இந்தப் பள்ளிகளைச் சேர்ந்த 50 மாணவர்கள் தூய்மை டி.பி.எம். நகர் திட்டத்தை உடனே தொடங்கிவிட்டார்கள்.

பள்ளி அமைந்துள்ள டி.பி.எம் நகரைத் தத்தெடுத்துக் கொண்ட இந்த மாணவர்கள், ஒவ்வொரு மாதமும் 2-ம் தேதி பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி முழுமையான துப்புரவுப் பணிகளை மேற்கொள்கிறார்கள். கூடவே, அந்தப் பகுதி மக்களிடம் தூய்மையின் அவசியம் குறித்து பிரசாரமும் செய்கிறார்கள்.

இரு பள்ளிகளிலும் பிரதமர் தலைமையில் 22 அமைச்சர்களை உள்ளடக்கிய பள்ளி நாடாளுமன்றமும் செயல்படுகிறது. இவர்களை அடையாளம் காட்டிக் கொள்வதற்காக அங்கியும் அணிகிறார்கள்.

22 பேரும் ஒவ்வொருவரு துறையைக் கவனிக்கிறார்கள். ஒரு மாணவன் பள்ளிக்கு வரவில்லை என்றால், ஏன் வரவில்லை என்று சம்பந்தப்பட்ட அமைச்சர் வீட்டுக்கு போன் போட்டு விவரங்களைத் தெரிந்து கொள்கிறார்.

இந்தப் பள்ளியின் இன்னொரு முக்கியமான கோஷம் ‘சேவ் பவர், சேவ் ஃப்யூல்’ இந்தப் பள்ளி மாணவர்களில் 5 சதவீதம் பேர் சொந்த வாகனங்களில் பள்ளிக்கு வந்து போகிறார்கள். வியாழன்தோறும் இவர்கள் அனைவரும் கட்டாயம் சைக்கிளில்தான் பள்ளிக்கு வருகிறார்கள்.

இப்படி சைக்கிள் மிதித்து பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர்கள் பள்ளி வாசலில் கைகுலுக்கி வரவேற்கிறார்கள். மாலையில் பேண்டு வாத்தியங்கள் முழங்க விளையாட்டுத் திடலில் அந்த மாணவர்களுக்கு மற்ற மாணவர்கள் வாழ்த்துச் சொல்லி கவுரவிக்கப்படுகிறார்கள்.

இது மட்டுமில்லாது மின் சிக்கனம் மற்றும் வெப்பமயமாதலைத் தடுக்கும் வகையில் வியாழன் முழுவதும் இந்தப் பள்ளிகளில் எங்கும் மின்சாரம் இருக்காது. கம்ப்யூட்டர், லைட், ஃபேன் உள்ளிட்ட எதுவும் இயங்காது. அன்றைய தினம் பெரும்பாலான வகுப்புகள் மரத்தடி நிழலில் தான். இதற்காகவே பள்ளி வளாகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய வகை மரங்களை நட்டு வைத்திருக்கிறார்கள்.

“வாரத்தில் ஒரு நாள் சைக்கிளில் வர வேண்டும் என்று நாங்கள் சொன்னதும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. படிக்கும் பிள்ளைகளில் 12 பேர் குட்டி சைக்கிள் வாங்கி அதில் பள்ளிக்கு வந்தார்கள். அதைப் பார்த்துவிட்டு, டிஸையர் காரில் வரும் நானும் இப்போது வியாழனில் 14 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் மிதித்து பள்ளிக்கு வருகிறேன்” என்கிறார் இப்பள்ளிகளின் இயக்குநர் நடன குருநாதன்.

வியாழக்கிழமைகளில் பள்ளியில் மட்டுமில்லாமல் வீடுகளிலும் 5 மணி நேரத்துக்கு எந்த மின் சாதனத்தையும் பயன்படுத்தாமல் இருங்கள் என்று பெற்றோருக்கு வாராவாரம் குறுந்தகவல் அனுப்புகிறார்கள்.

மனித உறவுகளின் மாண்பை மாணவர்களும் பெற்றோரும் உள்ளார்ந்து உணர வேண்டும் என்பதற்காக பவுர்ணமிதோறும் குடும்பத்துடன் அமர்ந்து ‘நிலா சோறு’ (மூன் லைட் டின்னர்) விருந்து வைக்கச் சொல்லி பெற்றோருக்குக் குறுந்தகவல் அனுப்புகிறது இந்தப் பள்ளி. இந்த விருந்தில் தாத்தாக்களையும் பாட்டிகளையும் கட்டாயம் உட்கார வைத்து முன்னோர்களின் பெருமைகளைப் பிள்ளைகளுக்குப் சொல்லித் தர இந்தப் பள்ளி வற்புறுத்துகிறது.

நடன குருநாதன்

எல்லாமே நல்ல விஷயமா இருக்கில்லையா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x