Last Updated : 25 Mar, 2015 12:32 PM

 

Published : 25 Mar 2015 12:32 PM
Last Updated : 25 Mar 2015 12:32 PM

உயிரிகள் உலகம்: கடலை ஆளும் பறவை

நீண்ட கடற் பயணங்களில் அல்பட்ராஸ் பறவைகளைக் கண்டவுடன் மாலுமிகள் மகிழ்ச்சியடைவார்கள். அல்பட்ராஸ் பறவைகள் இருந்தால், அருகில் தீவு இருக்கிறது என்று அர்த்தம். அதனால் மகிழ்ச்சியின் அடையாளமாக அல்பட்ராஸ் பார்க்கப்பட்டது. அல்பட்ராஸ்களும் மனிதர்களைக் கண்டு பயப்படாமல் கப்பலுடன் போட்டிப் போட்டுக்கொண்டு சந்தோஷமாகப் பறந்து செல்லக்கூடியவை.

18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ் என்ற ஆங்கிலக் கவிஞர், அல்பட்ராஸ் பற்றி நீண்ட கவிதையை எழுதியிருக்கிறார். ‘த ரைம் ஆஃப் த ஏன்சியன்ட் மரினர்’ என்ற தலைப்பில் எழுதிய அந்தக் கவிதை, உலகம் முழுவதும் மிகப் பிரபலமானது. உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்ற உயர்ந்த தத்துவத்தை எடுத்துச் சொல்லக்கூடியது.

உலகிலேயே மிக நீளமான இறக்கைகள் உள்ள பறவை, அல்பட்ராஸ்தான். இறக்கைகளின் நீளம் 11 அடி. இறக்கைகளை அசைக்காமலேயே, நீண்ட தூரத்துக்கு இந்தப் பறவையால் பறக்க முடியும். அதற்கு இந்த நீளமான இறக்கைகள் உதவுகின்றன. அது மட்டுமல்ல, ஓய்வெடுக்காமல் பல மணி நேரம் அல்பட்ராஸால் பறக்கவும் முடியும்.

கடற் பறவைகளில் மிகப் பெரியது இதுதான். தென்முனைப் பெருங்கடல், அண்டார்டிக் பெருங்கடல், வட பசிபிக் பெருங்கடலில் இவை காணப்படுகின்றன. அல்பட்ராஸில் 21 இனங்கள் இருக்கின்றன. இவற்றில் 19 இனங்கள் அழிவின் பிடியில் உள்ளன.

தலையும் மார்பும் வெள்ளையாகவும் முதுகு கறுப்பாகவும் இருக்கும். சில இனங்கள் பழுப்பு, சிவப்பு, மஞ்சள் நிறங்களிலும் உள்ளன. வாத்தின் பாதங்களைப் போலவே சவ்வுகள் மூலம் விரல்கள் இணைந்திருக்கும். நிலத்தில் வேகமாக நடக்கவும் நீரில் நீந்தவும் இவற்றால் முடியும். மிக நீண்ட, வலிமையான, கொக்கிப் போல வளைந்த அலகு மூலம் இரையை லாவகமாகப் பிடித்துவிடும். இரை நழுவி விடாமல் இருக்க அலகின் இரண்டு புறங்களிலும் கூர்மையான பிளேடு போன்ற அமைப்பு உள்ளது.

மிகப் பிரமாதமான பார்வைத் திறன் பெற்றுள்ளதால், உயரத்தில் பறக்கும்போதே இரையை அல்பட்ராஸால் கண்டுபிடித்துவிட முடியும். இரை தென்பட்டவுடன் வேகமாக வந்து, லபக் என்று பிடித்துவிடும். ஒருவேளை இரை தண்ணீருக்குள் சென்றுவிட்டாலும் தண்ணீரில் மூழ்கி இரையைக் கொத்திவிடும். மீன்கள், கணவாய், இறால், கப்பல்களில் இருந்து கொட்டப்படும் உணவுப் பொருட்களை இவை விரும்பிச் சாப்பிடுகின்றன. கடல் நீரைக் குடிக்கின்றன.

பெரும்பாலான நேரம் கடல் மேல் பறந்துகொண்டே இருக்கின்றன. வெகு அரிதாகத்தான் கடலுக்கு அருகில் உள்ள தீவுகளுக்குச் சென்று ஓய்வெடுக்கின்றன. இனப்பெருக்கம் செய்யும் காலங்களில் கூட்டமாகச் சென்று தீவுகளில் ஒதுங்கி விடுகின்றன. அங்கே ஆணும் பெண்ணும் குடும்பம் நடத்துகின்றன. நிலத்தின் மீது கட்டப்பட்ட உயரமான மண்ணால் ஆன கூட்டில், பெண் அல்பட்ராஸ் ஒரே ஒரு முட்டைதான் இடும்.

அந்த முட்டை அரை கிலோ எடை இருக்கும். அதை ஆணும் பெண்ணும் மாறிமாறி அடை காக்கின்றன. மூன்று மாதங்களில் முட்டையில் இருந்து குஞ்சு வெளியே வந்துவிடும். குஞ்சு தனியாகப் பறப்பதற்குச் சுமார் 10 மாதங்கள்வரை ஆகும். அதுவரை அம்மாவும் அப்பாவும் உணவூட்டி, குஞ்சைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்கின்றன.

ஆணும் பெண்ணும் ஒருமுறை ஜோடி சேர்ந்தால், தங்கள் வாழ்க்கை முடியும் வரை அதே இணையுடனே குடும்பம் நடத்துகின்றன. பிறகுசு புதிதாக இணை சேர்வதில்லை. ஆணோ, பெண்ணோ இறந்து போனால், வெகு அரிதாக ஜோடிகள் பிரிவதும் உண்டு. தனியாகச் செல்லும் பறவைகள் வேறு இணைகளுடன் சேர்ந்துகொள்கின்றன.

பெரும்பாலான நேரத்தை வானிலேயே கழிப்பதால் அல்பட்ராஸ்களுக்கு அதிக எதிரிகள் கிடையாது. நிலத்தில் மனிதர்களும் கடலில் புலிச் சுறாவும்தான் எதிரிகள். குஞ்சுகள் பறக்க முயலும்போது, எளிதாகப் புலிச் சுறாக்கள் வேட்டையாடி விடுகின்றன.

காற்று வீசும் திசைக்கு ஏற்றவாறு பறப்பதில் அல்பட்ராஸ்கள் கில்லாடிகள். நீண்ட குறுகலான இறக்கை பறப்பதற்குப் பெரிதும் உதவுகிறது. சில நேரங்களில் அலைகளுக்கு ஏற்றவாறு மிகத் தாழ்வாகவும் பறந்து செல்கின்றன. இப்படிப் பறக்கும்போது அதிக சக்தி வீணாவதில்லை. உணவுக்காகச் சில சமயங்களில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரைகூடப் பறந்து செல்வது உண்டு. முப்பது நாட்களில் பூமியைச் சுற்றிவிடக் கூடிய ஆற்றல் அல்பட்ராஸ்களுக்கு உண்டு!

வளர்ந்த அல்பட்ராஸ் 10 கிலோ எடையுடன் இருக்கும். 40 முதல் 50 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.

இறகு, இறைச்சிக்காக வேட்டையாடு வதாலும் மீன் பிடிக்கும்போது வலைகளில் சிக்கிக்கொள்வதாலும் அல்பட்ராஸ்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது.

அல்பட்ராஸைக் கொன்றதால் என்ன ஆனது என்ற கோல்ரிட்ஜ் கவிதையை வேட்டைக்காரர்கள் படித்திருந்தால், ஒருவேளை அல்பட்ராஸ்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது இல்லையா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x