Published : 11 Mar 2015 11:36 AM
Last Updated : 11 Mar 2015 11:36 AM
மதகஜ ராஜாவுக்கு மிகவும் சுவையான உணவைச் சாப்பிட வேண்டும் என்று எப்போதுமே ஆசை. ஒரு நாள் அவர் மந்திரி சபையைக் கூட்டினார்.
“உலகிலேயே சுவையான உணவு எது?” என்று கேட்டார் அரசர்.
ஒவ்வொரு மந்திரியும் ஒவ்வொரு காய்கறி, பழம், விலங்குகளின் பெயரைச் சொன்னார்கள்.
கடைசியில் மந்திரி திம்மப்பனிடம் கேட்டார் அரசர்.
“மன்னா, உலகிலேயே மிகவும் சுவையான உணவு கத்தரிக்காய்தான்” என்றார் அவர்.
“ அப்படியா, உடனே கத்தரிக்காயைச் சமையுங்கள்” என்று சமையல்காரருக்கு ஆணையிட்டார் அரசர். கத்தரிக்காய் உணவு தயாரானவுடன் மிகவும் ஆவலாகச் சாப்பிட உட்கார்ந்தார்.
சாப்பிட்டுவிட்டு “தூ...”வெனத் துப்பிவிட்டு எழுந்தார் அரசர்.
“என்ன திம்மப்பரே, கத்தரிக்காய் ருசி சகிக்கலையே. இதைப் போய் எப்படி மிகவும் சுவையானது என்று சொன்னீர்கள்” என்று கோபமாகக் கேட்டார் அரசர்.
“மன்னா, இதில் கோபப்பட ஏதுமில்லை. நம் அரண்மனை சமையல்காரர்களுக்குக் கத்தரிக்காயைச் சமைக்கத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்து ஒரு பாட்டி இருக்கிறார். அவர் கத்தரிக்காய் சமைத்துக் கொடுத்தால் உலகிலேயே கத்தரிக்காய்தான் மிகவும் சுவையானது என்று நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள்” என்றார் மந்திரி.
“அப்படியானால் அந்தப் பாட்டியை உடனே அழைத்து வாருங்கள்” என்றார் அரசர்.
“மன்னா, பாட்டி இங்கே வரமாட்டார். நாம்தான் அங்கே செல்ல வேண்டும். அந்தப் பாட்டி காட்டில் இருக்கிறார்” என்றார் திம்மப்பன்.
“ஓ...அப்படியா, சரி. நாளைக்கே வேட்டைக்குக் கிளம்புவோம். அப்படியே பாட்டியின் கையால் கத்தரிக்காயைச் சமைத்து சாப்பிட்டுவிடுவோம்” என்றார் அரசர்.
மறுநாள் மன்னர் தன் படையோடு காட்டுக்குக் கிளம்பினார். காட்டில் படையினர் திசை மாறிச் சென்றுவிட்டார்கள். அரசரும் திம்மப்பனும் ஒன்றாகக் காட்டில் அலைந்து திரிந்தார்கள். உண்ண உணவு இல்லாமல் வாடினார்கள். இரு நாட்கள் ஓடின. இருவரும் பசியால் களைப்புடன் நடந்துகொண்டிந்தபோது ஒரு குடிசையைக் கண்டார்கள்.
“மன்னா, இதுதான் அந்தக் கத்தரிக்காய் பாட்டியின் வீடு” என்றார் திம்மப்பன்.
“மிகவும் நல்லது போ. உணவு இல்லாமல் நாம் இருவரும் பசியுடன் இருக்கிறோம். வா, பாட்டியைச் சென்று பார்ப்போம்” என்று அரசர் கூறினார்.
வீட்டுக்குள் இருவரும் நுழைந்தார்கள். தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.
“ பாட்டி மிகவும் பசியாக இருக்கிறது. சாப்பிட உணவு செய்து கொடுக்க முடியுமா?” என பசியால் பரிதாபமாகக் கேட்டார் அரசர்.
“பாட்டி, உங்கள் கையால் கத்தரிக்காய் சாப்பிட வேண்டும் என்று அரசருக்கு மிகவும் ஆசை. சாப்பாட்டுடன் கத்தரிக்காய் கிடைக்கும் அல்லவா?” என்று கேட்டார் திம்மப்பன்.
“கத்தரிக்காய் இல்லாத சாப்பாடா” என்று பாட்டி எதிர்க் கேள்வி கேட்டுவிட்டுச் சமைலறைக்குள் சென்றார்.
சிறிது நேரத்தில் கத்தரிக்காய் சாம்பார், கத்தரிக்காய் பொரியல், கத்திரிக்காய்க் கூட்டு எனச் சாப்பாடு தயாராகிவிட்டது.
அரசர் சாப்பாட்டைச் சாப்பிட்டார். அப்படியே மலைத்துப் போனார்.
“திம்மப்பரே, உண்மையிலேயே கத்தரிக்காய் மிகவும் சுவையான உணவுதான்” என்று விழுந்து விழுந்து பாராட்டினார் அரசர். பாட்டிக்குப் பரிசுகளும் வழங்கினார். அப்போது திசை மாறிய படையினரும் அங்கே வந்து சேர்ந்தார்கள்.
நாடு திரும்பியதும் அரசவையைக் கூட்டினார் அரசர். திம்மப்பன் கூறியதுபோல கத்தரிக்காய்தான் உலகிலேயே சுவையான உணவு என அறிவித்தார். அப்போது இடைமறித்தார் திம்மப்பன்.
“மன்னா, பசியோடு எந்த உணவைச் சாப்பிட்டாலும் அது சுவையாகத்தான் இருக்கும். காட்டில் இரண்டு நாட்கள் பசியுடன் இருந்தோம். அப்போது பசியோடு கத்தரிக்காயைச் சாப்பிட்டதால்தான் அது மிகவும் சுவையாக இருந்தது.
கத்தரிக்காய் மட்டுமல்ல, அப்போது எதைச் சாப்பிட்டிருந்தாலும் அது சுவையானதாகத்தான் இருந்திருக்கும். உலகில் உள்ள எல்லா உணவு வகைகளுக்கும் ஒவ்வொரு சுவை இருக்கிறது. நாம் பசியுடன் சாப்பிடும் போதுதான் அது சுவைக்கிறது” என்று நீண்ட விளக்கம் கொடுத்தார்.
திம்மப்பனின் கூற்றை மன்னரும் உணர்ந்து ஏற்றுக்கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT