Published : 18 Feb 2015 12:55 PM
Last Updated : 18 Feb 2015 12:55 PM
விமானம் ஒடு தளத்தில் இருந்து வானில் மேலே எழுவதைப் பார்த்திருக்கிறீர்களா? அது எப்படித் தரையில் இருந்து மேலே செல்கிறது? இதைத் தெரிந்துகொள்ள ஒரு சோதனை செய்து பார்ப்போமா?
தேவையான பொருள்கள்
ஏ4 அளவுள்ள தாள்கள் அல்லது நோட்டுப் புத்தகத்தின் தாள்கள், மேஜை
சோதனை
1. ஒரு ஏ4 அளவு தாளை ஒரு அங்குல அகலத்தில் கிழித்துக் கொள்ளுங்கள்.
2. கிழித்த தாளின் ஒரு முனையை இரண்டு விரல்களுக்கு இடையே பிடித்து வாய்க்கு நேரே வைத்து கிடைமட்டமாகக் காற்றை ஊதுங்கள்.
இப்போது நடப்பதைப் பாருங்கள். கீழே தொங்கிக் கொண்டிருந்த தாள்பட்டை மேல் நோக்கி எழுகிறது அல்லவா?
காரணம் என்ன?
எங்கு ஒரு வாயு அல்லது திரவத்தின் திசைவேகம் அதிகமாக இருக்கிறதோ, அங்கு அழுத்தம் குறையும். இதுதான் பெர்னோலி தத்துவம்.
நடப்பது என்ன?
தாளுக்கு மேலே கிடைமட்டமாகக் காற்றை வேகமாக ஊதும்போது, பெர்னோலி விதிப்படி தாளின் மேல் பகுதியில் காற்றழுத்தம் குறைகிறது. ஆனால் தாளுக்குக் கீழேயுள்ள வளிமண்டல அழுத்தம் அதிகமாகிறது. இதனால் காற்று தாளை மேல் நோக்கித் தள்ளுகிறது. இதனால்தான் தாள்பட்டை மேலேழும்புகிறது.
பயன்பாடு
தாள் பட்டையை விமானத்தின் இறக்கையாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். பெர்னோலி தத்துவத்தின் அடிப்படையில்தான் விமானங்கள் ஓடுதளத்தில் இருந்து விண்ணில் மேலே எழுகின்றன. விமான இறக்கைகளின் மேற்புறத்தில் காற்று வேகமாக அடிக்கும்போது மேற்புறத்தில் அழுத்தம் குறைகிறது.
அடிப்பகுதியில் அழுத்தம் அதிகமாகிறது. இந்த அழுத்த வேறுபாட்டால் தாள் பட்டை எப்படி மேல் நோக்கி தூக்கப்படுகிறதோ அதேபோல் விமானம் மேல் நோக்கி விண்ணில் தூக்கப்படுகிறது.
விமானம் தரையிறங்கும்போது இறக்கையின் கீழ்ப்புறத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் அங்கு அழுத்தம் குறைகிறது. ஆனால், மேல் பகுதியில் அழுத்தம் அதிகமாகும்.
எனவே விமானம் தரையிறங்கும்போது விமான இறக்கையின் குறுக்குப் பரப்பு வடிவம் எந்தக் கோணத்தில் காற்று அடிக்கிறது என்பதைப் பொறுத்து விமானத்தை விண்ணில் ஏற்றவும் தரை இறக்கவும் செய்யலாம், புரிகிறதா?
பட உதவி: அ.சுப்பையா பாண்டியன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT