Last Updated : 07 Jan, 2015 10:12 AM

 

Published : 07 Jan 2015 10:12 AM
Last Updated : 07 Jan 2015 10:12 AM

என் பேரு புத்தர் தலை!

ஹலோ குட்டிப் பசங்களா... என்னை யாருன்னு உங்களுக்குத் தெரியுதா? என்னோட சகோதரன் பலாப்பழம் மாதிரி நானும் பார்க்க கொஞ்சம் கரடுமுரடா இருப்பேன். ஆனா, உள்ளுக்குள விதைகளோட ஒட்டிக்கிட்டு இருக்குற என்னை எடுத்துச் சாப்பிட்டா ரொம்பத் தித்திப்பேன். நான் யாருன்னு கண்டுபிடிச்சிடீங்களா?

கரெக்டா சொன்னீங்க. சீத்தாப்பழம்தான் நானு. மத்தப் பழங்கள உங்களுக்கு தெரிஞ்ச அளவுக்கு என்னைப் பத்தி உங்களுக்குத் தெரியுமான்னு தெரியல. அதான் என்னைப் பத்தி உங்கக்கிட்ட சொல்லலாம்னு வந்திருக்கேன்.

நான் எங்கே பொறந்தேன் தெரியுமா? கரீபியத் தீவு, மத்திய அமெரிக்கதான் நான் பொறந்த ஊரு. வெப்பம் அதிகமா இருக்குற ஊர்கள்ல நான் வேகமா வளருவேன். அதான், ஆசியா, ஆப்பிரிகாவுக்குள்ள சுலபமா நுழைஞ்சுட்டேன். இப்போ உலகத்துல பெரும்பாலான பகுதிகள்ல நான் வளர்றேன்.

‘அனோனா’ன்னு சொல்ற தாவர இனத்தைச் சேர்ந்த ஆளு நானு. என்னோட தாவர பேரு ‘அனோனா ஸ்கியூமோஸா’. நான் பெருசா வளர்ற மரமெல்லாம் கிடையாது. சின்ன மரமாதான் வளருவேன்.

தமிழ்நாட்டுல என்னை எப்படிக் கூப்பிடுறீங்க? ‘சீத்தாப்பழம்’னு இல்லையா? தைவான், சீனாவுல என்னைப் ‘புத்தர் தலை’ன்னு செல்லமா கூப்பிடுவாங்க. நானு பார்க்குறதுக்கு புத்தர் தலை மாதிரியே இருக்குறதால இப்படிக் கூப்பிடுறதா சொல்றாங்க. இலங்கையில ‘அனோடா’ன்னு கூப்பிடுவாங்க. ஊருக்கு ஊரு ஒவ்வொரு மாதிரி என்னைக் கூப்பிடுறாங்க. ஆனா, இங்கிலீஷ்ல பொதுவா ‘கஸ்டர்ட் ஆப்பிள்’ன்னு என்னைக் கூப்பிடுறாங்க.

நான் மரத்துல காய்ச்சி, அப்படியே பழுக்குற ஆளு கிடையாது. என்னைப் பறிச்சு வைச்சிருந்தக்கூட, நானு பழுத்துருக்கேனா இல்லையான்னு உங்களுக்குச் சந்தேகம் வந்திருக்கு இல்லையா? என்னை எப்போ மரத்துல இருந்து பறிக்கணும் தெரியுமா? என்னோட உடம்பைச் சுத்தியிருக்குற கரடுமுரடான தோல் மெதுவா விரிசல் விடும். அப்போ என்னைப் பறிச்சி வைக்கிறது நல்லது.

எப்போ என்னைச் சாப்பிடணும்னு கேட்குறீங்க தானே? என்னை எடுத்து மெல்லமா அமுக்கிப் பாருங்க. அப்போ நானு வெளியே பிதுக்கிக்கிட்டு வர மாதிரி இருந்தேனா, என்னை நீங்க சாப்பிடுற நிலைக்கு வந்துட்டேன்னு அர்த்தம். அப்போ எடுத்து சாப்பிட்டா ரொம்ப இனிப்பாவும், சுவையாவும் இருப்பேன்.

நான் ரொம்ப தித்திப்பா இருக்க என்ன காரணம் தெரியுமா? குளுக்கோசும் சுக்ரோசும்தான். இவை இரண்டும் என்னோட உடம்புல சம அளவுல இருக்கு. என்கிட்ட இரும்புச் சத்து, கால்சியம் சத்து, நார்ச்சத்து, பாஸ்பரஸ் சத்து, மாவுச் சத்து ரொம்ப அதிகமா இருக்கு. கொழுப்பு ரொம்ப ரொம்ப கம்மியாதான் என்கிட்ட இருக்கு.

என்னைத் தொடர்ந்து சாப்பிட்டா உங்களோட ரத்த உற்பத்திக்கு உதவியா இருப்பேன். உங்கள மாதிரி குட்டிப் பசங்க என்னைச் சாப்பிட்டா எலும்பும் பல்லும் பலமாகும். தலைக்கும் மூளைக்கும் போற ரத்த ஓட்டத்தைச் சீரா வைச்சுக்கவும் நான் உதவியா இருக்கேன். அதனால உங்களோட கவனிக்கும் திறனும் நினைவாற்றலும் அபாரமா இருக்கும்.

என்னை ரோட்டுல சாதாரணமா போட்டு விப்பாங்க. அதனால, என்னை கேலியா பார்த்துட்டு, வாங்கிச் சாப்பிடாம போயிடாதீங்க. என்ன சரியா? அப்போ நான் வரட்டுமா...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x