Published : 21 Jan 2015 12:35 PM
Last Updated : 21 Jan 2015 12:35 PM
இந்த வெளவால்கள் இரவில் மட்டுமே பறக்கின்றன… பகலில் எங்கோ போய் விடுகின்றன? இந்தக் கேள்விக்கு விடை தெரியுமா? இந்தக் கதையைப் படியுங்கள், விடை கிடைக்கும்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு வௌவாலும் ஒரு எலியும் சிறந்த நண்பர்களாக இருந்தன. வௌவாலோட பெயர் எமி. எலியோட பெயர் சிமி. எமியும், சிமியும் எப்போதும் ஒன்றாகத்தான் சாப்பிடுவார்கள். ஆனால், இந்த எமிக்கு விளையாட்டுத்தனம் ரொம்ப அதிகம். எமி அடிக்கடி சூப் செய்யும். இது சிமிக்கு ரொம்பப் பிடிக்கும்.
“நீ எப்படி இவ்வளவு சுவையா சூப் செய்ற?” என்று எமி வௌவாலிடம் சிமி எலி ஒரு நாள் கேட்டது.
“ஓ… அதுவா, அது பரம ரகசியம்” என்றது எமி.
“ஏய்… எனக்கும் கொஞ்சம் அதைச் சொல்லேன்” என்றது சிமி.
“ம்… சொல்றேன்.. ஒவ்வொரு தடவையும் நான் சூப் செய்யுறதுக்கு முன்னாடி, ஒரு பாத்திரத்துல சுடு தண்ணீர் வைப்பேன். தண்ணீ சுடுறப்ப அந்தப் பாத்திரத்துல நான் குதிச்சுடுவேன். நல்லா கொதிச்சவுடனே நான் வெளியே வந்துடுவேன். என்னோட சதை ரொம்ப சுவையா இருக்கும். அதனால்தான் நான் வைக்கிற சூப்பும் சுவையாக இருக்கு” என்று சொன்னது எமி வௌவால்.
“ஏய்.. நீ பொய் சொல்றே. நான் இதை நம்ப மாட்டேன்” என்றது சிமி எலி.
“ நம்ப மாட்டியா, சரி, சூப்பை நான் எப்படித் தயாரிக்கிறேன்னு நீயே என் வீட்டுக்கு வந்து பாரு” என்று பதில் கூறியது எமி வெளவால்.
சில நாட்களுக்குப் பிறகுடுக் எமி வௌவால் வீட்டுக்கு சிமி எலி வந்தது. எமி வௌவால் ஒரு பானை நிறைய தண்ணீரைக் கொண்டு வந்து வைத்தது.
“இந்தப் பானையில் இருப்பது சூடு தண்ணீர். இப்போ இதில் நான் குதிக்கப் போகிறேன்” என்றது எமி.
உண்மையில் அந்தப் பானையில் இருந்தது பச்சை தண்ணீர்தான். ஆனால், அதை சிமி எலி கவனிக்கவில்லை. பானைக்குள் குதித்த எமி வௌவால் வெளியே வந்தது. பச்சைத் தண்ணீரில் குதிச்சு வந்ததை சிமி கவனிக்கவில்லை போல என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டது எமி.
வெளியே வந்தவுடன் சிமி எலி கண் முன்னாலேயே சூப்பைத் தயாரித்துக் கொடுத்தது எமி வௌவால். வழக்கம்போலவே, சூப் சுவையாக இருந்தது. இதே மாதிரி தானும் சுவையான சூப் தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தது சிமி எலி.
சிமி எலி வீட்டுக்கு வந்து தன் மனைவியிடம் இதைப் பற்றிச் சொன்னது,
“இன்று நான் ஒரு சுவையான சூப் தயாரிக்கப்போகிறேன்” என்றது சிமி எலி. அதற்காகத் தன் மனைவியிடம் தண்ணீரைக் கொதிக்க வைக்க சொன்னது சிமி எலி. மனைவியும் அப்படியே செய்தது. திடீரென்று கொதித்துக்கொண்டிருந்த தண்ணீர் பாத்திரத்தில் சிமி எலி குதித்தது. இதை அதன் மனைவியும் கவனிக்கவில்லை. நீண்ட நேரமாக சிமி எலி வெளியே வரவேயில்லை. தன் கணவனைக் காணாமல் தேடத் தொடங்கியது சிமி எலியின் மனைவி. பானைக்குள் எட்டிப் பார்த்தபோது மனைவி அதிர்ச்சியடைந்தது. அந்தப் பானைக்குள் சிமி எலி இறந்துகிடந்தது.
சிமி எலியின் மனைவி, உடனடியாக அரசரிடம் சென்று எமி வௌவாலைப் பற்றிப் புகார் சொன்னயது.
“ அப்படியா, அந்த எமி வௌவாலைக் கைது செய்யுங்கள்” என்று அரசர் உத்தரவிட்டார். சிமி எலி இறந்ததற்குத் தன்னுடைய விளையாட்டுப் புத்திதான் காரணம் என்று எமி வௌவால் வருந்தியது. ஆனால், வீரர்கள் தன்னைத் தேடுகிறார்கள் என்று தெரிந்தவுடன் அது பறந்து சென்று புதருக்குள் ஒளிந்துகொண்டது.
வீரர்கள் எமி வௌவாலைத் தேடிக்கொண்டே இருந்தார்கள். வீரர்களிடம் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்காக எமி வௌவால் தன் பழக்கத்தை மாற்றிக்கொண்டது. பகல் முழுதுவம் அது இருட்டான பகுதிகளுக்குள் ஒளிந்துகொண்டது. இரவில் மட்டும் வெளியே வந்தது. அதனால்தான் இப்போதும் வௌவால்களை நம்மால் இரவில் மட்டுமே பார்க்க முடிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT