Published : 31 Dec 2014 01:06 PM
Last Updated : 31 Dec 2014 01:06 PM

ஊசி குத்த காற்று வேண்டும்!

உங்களுக்கு உடம்பு சரியில்லையென்றால் டாக்டரைப் பார்க்கப் போவீர்கள் அல்லவா? அப்போது டாக்டர் என்ன செய்வார்? மருந்து, மாத்திரகளை எழுதிக் கொடுப்பார். சில சமயம் ஊசியும் போடுவார் இல்லையா? ஊசியைப் பயன்படுத்துவதற்காக ‘ஸ்ரிஞ்ச்’ பயன்படுத்துவார்கள். அது எப்படி வேலை செய்கிறது? ஒரு சிறிய சோதனை செய்து பார்த்தால் விடை கிடைத்துவிடும்.

தேவையான பொருட்கள்:

இரண்டு லிட்டர் கண்னாடி பாட்டில், பலூன்கள், பிடிப்பான், சிறிய ரப்பர் குழாய்.

சோதனை:

இரண்டு லிட்டர் பருமனுடைய மணிஜாடி வடிவத்தில் உள்ள ஒரு கண்ணாடி பாட்டிலை எடுத்துகொள்ளுங்கள். இந்தக் கண்ணாடி பாட்டினுக்குள் ஊதிய பலூனைப் போட முடியுமா? போட்டுப் பார்க்கலாமா?

1. வாய்ப் பகுதி சிறிது அகலமாகவும், வெளியே சிறிய குழாயும் உள்ள இரண்டு லிட்டர் கண்ணாடி மணிஜாடியை எடுத்துக் கொள்ளுங்கள்.

2. பலூனை பாட்டிலின் வாய் உள்ளே தள்ளிவிட்டு, நாம் வாய் வைத்து ஊதும் கண்ணாடியின் வாயில் பலூனை சுற்றிலும் விரித்து பொருத்துங்கள்.

3. பலூன் பொருத்தப்பட்ட மணிஜாடியின் வாயில் உங்கள் வாயை வைத்து பலூனை ஊதவும். இப்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள்? பலூன் உப்புவதைப் பார்க்கலாம்.

4. பலூன் உப்பியவுடன், பலூனை ஊதிக் கொண்டே வெளிக்குழாயுடன் இணைக்கபட்டுள ரப்பர் குழாய் வழியாக காற்று வெளியேறாத வண்ணம் பிடிப்பான் அல்லது கிளிப் மாட்டி விடவும்.

5. இப்போது ஊதுவதை நிறுத்திய பின்னும் வாய் திறந்த நிலையில் பலூன் பெரிதாக உப்பி இருப்பதை நீங்கள் பார்க்கலாம். வாய் திறந்த நிலையில் பலூன் உப்பி இருப்பதை எங்கேயாவது பார்த்திருக்கிறீர்களா? இப்படி சோதனை செய்தால் பார்க்கலாம். இதற்கான காரணம் என்ன?

நடப்பது என்ன?

பலூனை ஊதும்போது பாட்டிலுக்குள் காற்று வெளியேற்றப்படுகிறது. அதேசமயம் வெளிக்காற்று பாட்டிலுக்குள் செல்லாதவாறு ரப்பர் குழாயில் மாட்டியுள்ள கிளிப் அல்லது பிடிப்பான் தடுத்துவிடுகிறது. பாட்டிலுக்குள் இருக்கும் காற்றழுத்ததைவிட வெளிக்காற்றின் அழுத்தம் அதிகமாக இருப்பதால் வாய் திறந்து இருந்தாலும் பலூனிலிருந்து காற்று வெளியேறாமல் உப்பிய நிலையிலேயே இருக்கிறது.

பின்னர் பலூனை பாட்டிலின் வாயிலிருந்து பிரித்து காற்று வெளியேறாதவாறு ஒரு கையில் பிடித்துக்கொள்ளுங்கள். மறு கையால் பலூனின் வாயருகே ஒரு முடிச்சுப் போட்டு பலூனை உள்ளே தள்ளிவிடுங்கள். இப்போது பிடிப்பான் அல்லது கிளிப்பையும் எடுத்துவிடுங்கள். ஊதப்பட்ட பலூன் பாட்டிலுக்குள் அழகாக இருக்கும்.

சரி, இப்போது பாட்டிலுக்குள் உள்ள பலூனை வெளியே எடுக்க முடியுமா? கண்ணாடிப் பாட்டிலை உடைத்து பலூனை எடுக்க ஒரு வழி இருக்கிறது. இல்லையென்றால், நீண்ட ஊசியால் பாட்டிலில் இருக்கும் பலூனைக் குத்தி, பலூன் உடைந்தவுடன் பலூனை வெளியே எடுக்க இன்னொரு வழியும் இருக்கிறது. ஆனால், பாட்டிலையும் உடைக்காமல் பலூனையும் உடைக்காமல் பலூனை வெளியே எடுக்க வேண்டும்.

அதற்கு ஒரு வழி இருக்கிறது. கண்ணாடி பாட்டிலைத் தலைகீழாகத் திருப்பி பலூனின் முடிச்சை சிறிது வெளியே இழுத்து கையிலேயே பிடித்துகொண்டு பாட்டிலின் வெளிப்பக்கம் உள்ள சிறிய குழாய் வழியாகக் காற்றை ஊதினால் பலூன் சிறிது சிறிதாக வெளியே வந்துவிடும்.

பயன்பாடு:

மருத்துவர் பயன்படுத்தும் ஊசிக்குள் ஒரு உந்து தண்டு(குட்டி பிஸ்டன்) இருக்கும். ஊசியை மருந்து புட்டிக்குள் விட்டு உந்துத்தண்டை பின்னோக்கி இழுத்தால் ஊசியின் மையப்பகுதிக்குள் மருந்து ஏறிவிடும். இது எப்படி தெரியுமா?

உந்து தண்டை பின்னால் இழுக்கும்போது நடுப்பகுதியில் காற்றழுத்தம் மிகவும் குறைந்து உள்ளே ஒரு வெற்றிடம் ஏற்படும். அந்த வெற்றிடத்தை நிரப்ப வெளிக்காற்று மருந்தின் மீது ஒரு விசையை செலுத்துவதால் மருந்து மையப்பகுதிக்குள் வந்துவிடுகிறது.

ஊசியை கையிலோ அல்லது இடுப்பிலோ செருகி உந்து தண்டை முன்னோக்கி அழுத்தினால் மருந்து உடலுக்குள் சென்றுவிடும். இந்த எளிய சோதனையின் மூலம் காற்றுக்கு அழுத்தம் உண்டு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பட உதவி: அ.சுப்பையா பாண்டியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x