Last Updated : 10 Dec, 2014 12:43 PM

 

Published : 10 Dec 2014 12:43 PM
Last Updated : 10 Dec 2014 12:43 PM

அனைவரையும் கவர்ந்த மனித சிலந்தி

கண் இமைக்கும் நேரத்துக்குள் ஒரு கட்டிடத்தின் மீது விறுவிறுவென சரளமாக ஏற முடியுமா? இரும்பைவிட உறுதியான வலையைக் கையில் இருந்து வெளியிட்டுக் கட்டிடங்களுக்கு இடையே தாவித் தாவி பறக்க முடியுமா? முடியும் என்று நிரூபித்ததால், உலகில் அதிகம் விரும்பப்படும் மூன்றாவது காமிக்ஸ் ஹீரோவாக இருக்கிறார் ஸ்பைடர்மேன்.

பள்ளிப் படிப்பின் முடிவில் இருக்கும் டீன்ஏஜ் இளைஞர்கள் குழப்பத்தில் இருப்பார்கள். அவர்களில் சிலர், சமூகத்தை எதிர்கொள்ளப் பயப்படும் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பதை மாற்ற உருவாக்கப்பட்ட முதல் காமிக்ஸ் ஹீரோ ஸ்பைடர்மேன்.

உருவான கதை

தாய், தந்தையை இழந்து அத்தையுடன் வசிக்கும் பீட்டர் பார்க்கர், அறிவியல் ஆய்வகத்துக்கு ஸ்கூல் டூர் போகும்போது ஒரு கதிரியக்கச் சிலந்தியால் கடிபட்டுப் புதிய சக்திகளைப் பெறுகிறான். அசாதாரண உடல்வலிமையும், கேட்கும் திறனும் கிடைத்த பிறகு கையில் இருந்து வலைகளைச் செலுத்தும் கருவியை உருவாக்கி, அந்த வலைகள் மூலம் தாவித் தாவிப் பறக்கிறான் பீட்டர்.

நண்பர்கள்

மே பீட்டர் பார்க்கரின் அத்தை மே, அவருக்கு எஞ்சியுள்ள ஒரே உறவு. இவரது வீட்டில்தான் பீட்டர் தங்கி இருக்கிறான். பீட்டர்தான் ஸ்பைடர்மேன் என்பது தெரியாமல், அவனுக்கு ஏன் இப்படிக் காயங்கள் ஏற்படுகின்றன? அவன் ஏன் விடியற்காலையில் அசந்து தூங்குகிறான் என அத்தை மேவுக்குக் குழப்பம் ஏற்படுவது உண்டு.

க்வென் ஸ்டேசி

பீட்டர் பார்க்கரின் பள்ளித் தோழி. இவரது தந்தைதான் நகரத்தின் காவல் தலைவர். ஹாரி ஆஸ்பர்ன்: பீட்டரின் பள்ளி தோழனான ஹாரி, விஞ்ஞானியான நார்மன் ஆஸ்பர்னின் மகன்.

மேரி ஜேன்

க்வென் ஸ்டேசியின் மறைவுக்குப் பிறகு, மேரிதான் பீட்டரின் உற்ற தோழி. நாடக நடிகையாவதை லட்சியமாகக் கொண்டவள்.

எதிரிகள்

க்ரீன் கோப்ளின்: விஞ்ஞானி நார்மன் ஆஸ்பர்னின் மாற்றுருவே (Alter Ego) இந்த க்ரீன் கோப்ளின். தன்னுடைய திறமையான விஞ்ஞான மூளையை அழிவுசக்திக்குப் பயன்படுத்தும் இவரை ஸ்பைடர்மேன் ஒரு கட்டத்தில் அழித்துவிடுகிறான்.

க்ரீன் கோப்ளின் 2

தந்தையின் மறைவுக்குப் பிறகு அவரது மர்மத்தைக் கண்டறியும் ஹாரி, தந்தையைக் கொன்றவனைப் பழிவாங்கத் தானும் ஒரு வில்லனாக உருவெடுக்கிறான். பீட்டர்தான் ஸ்பைடர்மேன் என்பது தெரிந்தவுடன் அவனைக் கொல்லத் துடிக்கும் ஹாரி, பின்னர் மனம் மாறிவிடுகிறான்.

டாக்டர் ஆக்டோபஸ்

மாபெரும் விஞ்ஞானியான டாக்டர் ஆக்டோபஸ், தன்னுடைய கண்டுபிடிப்பின் மூலம் இயந்திரக் கரங்களைப் பொருத்திக்கொண்டு மிகப் பெரும் வில்லனாக உருவெடுக்கிறார். இவருடைய இயந்திரக் கரங்கள் தானே சிந்திக்கும் திறன் பெற்றவை.

தமிழில் ஸ்பைடர்மேன்

ஆரம்பத்தில் குமுதம் இதழில் ஒரு பக்கக் கதையாக வெளியான ஸ்பைடர்மேன், பின்னர் கோத்தம் காமிக்ஸ் முயற்சியால் 'ஸ்பைடர்மேன் இந்தியா' என்று தனிக் கதை வரிசையாக வந்தது. அத்தொடருக்கான வரவேற்பு குறைய, மறுபடியும் மொழிமாற்றம் செய்யப்பட்ட கதைகளே வெளிவர ஆரம்பித்தன.

மாற்று ஊடகங்களில்

இளைஞர்கள் மத்தியில் ஸ்பைடர்மேன் அசாத்திய வெற்றி பெற்றதால் டிவி தொடர், கார்ட்டூன் தொடர், திரைப்பட வரிசை, நாடகங்கள் எனப் பல வகைகளில் ஸ்பைடர்மேன் கதைகள் வருகின்றன. ஸ்பைடர்மேன் பொம்மைகள், வீடியோ கேம், கம்ப்யூட்டர் கதைகள், ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன்கள் என்று உலகில் அதிகம் விரும்பப்படும் மூன்றாவது காமிக்ஸ் ஹீரோ ஸ்பைடர் மேன்தான் என்பதைப் பல வழிகளிலும் நிரூபிக்கிறார்.

ஸ்பைடர்மேன் இன்று:

ஐக்கிய நாடுகளின் சமாதானத் தூதுவராக ஸ்பைடர்மேன் அறிவிக்கப்பட்டவுடன், உலகச் சமாதானத்துக்காகச் சிறப்பு காமிக்ஸ் கதைகள் வெளியிடப்பட்டன.

2009-ம் ஆண்டு பச்சோந்தி என்ற வில்லன் அமெரிக்க அதிபர் ஒபாமாவைக் கடத்தி, தான் அமெரிக்க அதிபராக மாறி உலகைக் கைப்பற்ற நினைக்கிறான். அவனை ஸ்பைடர்மேனும் ஒபாமாவும் எதிர்கொண்ட காமிக்ஸ் லட்சக்கணக்கில் விற்றுச் சாதனை படைத்தது.

'With great power there must also come great responsibility' (சக்தி அதிகமாக இருந்தால் பொறுப்பும் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம்) என்ற ஸ்பைடர்மேனின் வாசகம் உலக அளவில் புகழ்பெற்றது.

பெயர்: ஸ்பைடர்மேன்.

மற்ற பெயர்கள்: பீட்டர் பெஞ்சமின் பார்க்கர், அமேசிங் ஸ்பைடர்மேன்

உருவாக்கியவர்: ஸ்டான் லீ (கதாசிரியர்), ஸ்டீவ் டிக்டோ (ஓவியர்)

முதலில் தோன்றிய தேதி: ஜூன் 5, 1962 (ஆகஸ்ட் 1962 தேதியிட்ட அமேசிங் ஃபேன்டஸி 15-வது இதழில்). முதன்முறையாக ஒரு டீன்ஏஜ் இளைஞனை சூப்பர் ஹீரோவாகச் சித்திரித்து ஜெயித்தது ஸ்பைடர்மேன்தான்.

தொழில்: சட்டத்தின் பாதுகாவலர்

விசேஷச் சக்தி: கையிலிருந்து எஃக்கைவிட உறுதியான வலை பாயும். அசாத்தியமான கேட்கும் திறன். சிலந்தியைப் போலக் கட்டிடங்களின் மீது சுலபமாக ஏறும் தன்மை. காயங்கள் வேகமாக ஆறும் தன்மை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x