Published : 31 Dec 2014 01:00 PM
Last Updated : 31 Dec 2014 01:00 PM
அலாவுதீனின் மந்திர விளக்கோ அல்லது மந்திரவாதியின் மாய மோதிரமோ பிடிக்காத சிறுவர், சிறுமிகள் உண்டா? அவை இரண்டும் கேட்டதையெல்லாம் கொடுக்குமே! இதே மாதிரி சாகசங்கள் செய்பவர்களையும் சிறுவர்களுக்கு ரொம்பப் பிடிக்கும். அதுவும், சாகசங்கள் செய்யும் ஒரு சூப்பர்ஹீரோ தங்களை மாதிரியே ஒரு சிறுவனாக இருந்துவிட்டால், கேட்கவா வேண்டும்? தாங்களே அந்த சாகசங்களைச் செய்வதாக நினைத்து திளைத்துப் போவார்கள், இல்லையா?
அப்படிப்பட்ட ஒரு சிறுவனை மையமாக வைத்து ஆரம்பிக்கப்பட்ட தொடர்தான் உலகம் முழுவதும் சக்கைபோடுபோட்டது. உங்களுக்கு மிகவும் பிடித்தத் தொடர்தான் அது. இன்றைக்கு பல நாடுகளிலும் பத்து கோடிக்கும் மேலான பொம்மைகள் விற்பனை ஆகியுள்ள ‘பென் 10’ என்ற கார்ட்டூன் தொடர்தான் அது.
உருவான கதை:
இரண்டு அயல்கிரக உயிரினங்களுக்கு இடையே நடக்கும் போரில் ஒன்றின் சக்திப் பெட்டகம் (ஆம்னிட்ரிக்ஸ்) பூமியில் விழுந்து விடுகிறது. கைக்கடிகாரம் போல காட்சியளிப்பதுதான் இந்த சக்திப் பெட்டகம். அணிந்திருப்பவர் நினைத்த உருவம் மாறும் சக்தியை அளிக்கக்கூடியது அது.
கதாநாயகன் பென் தன்னுடைய தாத்தா மாக்ஸ், பெரியப்பா மகள் க்வென் உடன் ஒரு சுற்றுலா போகிறான். அப்போது அந்த சக்திப் பெட்டகத்தின் டி.என்.ஏ. பொருந்திப் போவதால் பென்னின் மணிக்கட்டில் ஒட்டிக்கொள்கிறது. உடலின் ஒரு அங்கமாகிவிட்ட இந்த வாட்ச் வந்த பிறகு, பென் ஒரு சூப்பர்ஹீரோவாக மாறிவிடுகிறான். தற்போதைய கதைப்படி பென்னுக்கு 16 வயது.
அந்த ஆம்னிட்ரிக்ஸை கைப்பற்ற நினைக்கும் மற்றொரு அயல்கிரக உயிரினமான வில்காக்ஸுக்கும் பென்னுக்கும் இடையே நடக்கும் போராட்டங்கள் இந்தத் தொடரை விறுவிறுப்பாக்குகின்றன.
ஆம்னிட்ரிக்ஸ்:
இந்த அயல்கிரக சக்திப் பெட்டகத்தின் முழு பெயர் ஆம்னி மேட்ரிக்ஸ். அதாவது ‘அனைத்தும் உருவான இடம்’. சைலீன் என்ற அயல்கிரக பெண் இப்பெட்டகத்தை மாக்ஸுக்கு அனுப்பினார். ஆனால், பென்னின் டி.என்.ஏ. கூடுதலாகப் பொருந்திப் போனதால், இது பென் கைவசம் வந்தது.
தாத்தா மாக்ஸ் டென்னிசன்:
இவர்தான் பென், க்வென்னின் பராமரிப்பாளர். மாக்ஸ் ஒரு முன்னாள் ராணுவ மற்றும் விண்வெளி வீரர். இவர் ப்ளம்பர் என்னும் பூமி பாதுகாப்பு படையின் தலைவர்களுள் ஒருவர். 60 வயதானாலும் உறுதியான உடல்வலிமை கொண்ட மாக்ஸ் தாத்தா, ஆரம்ப நாட்களில் பென்னை வழிநடத்தி அவனது சூப்பர் பவரை முறைப்படி பயன்படுத்தப் பயிற்சியளித்தவர்.
க்வென் டென்னிசன்:
பென்னின் சித்தப்பா மகளான க்வென் ஒரு புத்திகூர்மையுள்ள 10 வயது பெண். இவளுக்கு பிறவியிலேயே சில மந்திர சக்திகள் இருந்தது, பின்னாளில்தான் தெரியவந்தது. அயல்கிரக சக்திகளுடன் பென் போரிடும்போது க்வென் பலமுறை உதவி செய்திருக்கிறாள்.
வில்காக்ஸ்:
அயல்கிரக சக்திகளிலேயே மிகவும் பலசாலியான இந்த உயிரினம், ஆம்னிட்ரிக்சை கைப்பற்றி அதன்மூலம் பலமான ராணுவத்தை உருவாக்கி அனைத்துலகையும் ஆள நினைக்கிறது. அதற்காக பென் 10 உடன் அடிக்கடி மோதுகிறது.
டாக்டர் அனிமோ:
கால்நடை மருத்துவ துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்த இவருக்கு ஒரு விருது கிடைக்காமல் போகும்போது மனம்மாறி, வில்லனாகி விடுகிறார். உயிரினங்களைக் கட்டுப்படுத்தவும், இறந்த விலங்குகளை உயிர்ப்பிக்கவும் சக்தி பெற்ற இவர், பூமியை தன் கைவசம் கொண்டுவர நினைப்பவர்.
உருவாக்கியவர்கள்: Man of Action என்ற குழு (டங்கன் ரௌலே, ஜோ கேசி, ஜோ கெல்லி & ஸ்டீவன் சிகால்)
முதலில் தோன்றிய தேதி: டிசம்பர் 27, 2005 கார்ட்டூன் நெட்வொர்க் டிவி சேனலில்
பெயர்: பென் 10
முழுபெயர்: பெஞ்சமின் கிர்பி டென்னிசன் (இதன் சுருக்கமே பென் 10)
வயது: 10 வயது பள்ளி மாணவன்
வசிப்பிடம்: பெல்வுட், அமெரிக்கா.
சக்தி: OmniTrix என்ற வாட்ச் போன்ற சக்திப் பெட்டகம் மூலம் இவனால் எந்த உருத்தையும் பெற முடியும். ஐடெடிக் என்று சொல்லப்படும் அசாத்திய நினைவுத்திறனும் கொண்டவன் பென்.
டாக்டர் அனிமோ:
கால்நடை மருத்துவ துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்த இவருக்கு ஒரு விருது கிடைக்காமல் போகும்போது மனம்மாறி, வில்லனாகி விடுகிறார். உயிரினங்களைக் கட்டுப்படுத்தவும், இறந்த விலங்குகளை உயிர்ப்பிக்கவும் சக்தி பெற்ற இவர், பூமியை தன் கைவசம் கொண்டுவர நினைப்பவர்.
எப்படி சமாளிக்கிறான்?
ஆம்னிட்ரிக்ஸை அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டும். அப்படி செய்தாலும்கூட, அதன் சக்தி சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். பென் 10 போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும்போது, பல வேளைகளில் அது அவனை கைவிட்டிருக்கிறது. அப்போதெல்லாம் பென் 10-க்கு அவனுடைய புத்திசாலித்தனமும், நண்பர்களும் கைகொடுப்பார்கள்.
ஆபத்தில் யார் இருந்தாலும் அவர்களுக்கு உதவுவது பென்னின் இயல்பு. அதற்காக பல அயல்கிரக எதிரிகளுடன் மோதுகிறான். அந்த சந்தர்ப்பங்களில் ஆம்னிட்ரிக்சை ஆன் செய்து எதிரிகளின் உடல் அமைப்பு, சக்தி போன்றவற்றை கணித்து அதற்கேற்ப உருவத்தை பெற்று சண்டை போடுவான்.
மாற்று ஊடகங்களில் பென் 10:
பென் 10-ன் அசாத்திய வெற்றிக்கு பிறகு உலககெங்கும் உள்ள பல நாடுகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. கார்ட்டூன் நெட்வொர்க் சேனலில் கடந்த 7 வருடங்களாக பென் 10 மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழில் வெளியாகிவருகிறது.
இதுவரையில் ஐந்து திரைப்படங்களும், பத்து வீடியோ கேம்களும் வெளியாகியுள்ளன. இதைத் தவிர நூற்றுக்கணக்கான பென் 10 காமிக்ஸ் புத்தகங்கள், விளையாட்டு புத்தகங்கள், பொம்மைகள் வெளியாகி உள்ளன. பொம்மைகளில் பென் 10 கார், பென் 10 சைக்கிள், பென் 10 வாட்ச் என பல பொருட்கள் இந்தியாவில் எக்கச்சக்கமாக விற்றுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT