Last Updated : 03 Jul, 2019 12:14 PM

 

Published : 03 Jul 2019 12:14 PM
Last Updated : 03 Jul 2019 12:14 PM

திறந்திடு சீஸேம் 40: நாஸக் வைரம்

உலகின் தலைசிறந்த, மதிப்புமிக்க, அரிய வைரங்களில் இதுவும் ஒன்று. இதுவரை கண்டெடுக்கப்பட்டதிலேயே மிக அழகான நீல நிற வைரம் இதுதான். இதன் தற்போதைய எடை 43.38 காரட், அதாவது 8.676 கிராம். இதன் உத்தேச மதிப்பு 3.23 மில்லியன் அமெரிக்க டாலர்கள். நாஸக் வைரத்துக்கு, சுமார் 500 வருட வரலாறு இருக்கிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் தென் ஆப்பிரிக்காவிலும் வைரம் கிடைக்கிறது என்ற உண்மையை உலகம் அறிந்துகொண்டது. அதற்கு முன்புவரை இந்தியாவின் கோல்கொண்டாதான் உலகின் முதன்மையான வைரச் சுரங்கம்.

கோஹினூர், தி ஹோப், ஷா, கிரேட் முகல், நிஜாம் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற வைரங்கள் ஒவ்வொன்றையும் கோல்கொண்டாதான் தந்துகொண்டி ருந்தது. அப்படிப் பதினைந்தாம் நூற்றாண்டில் கோல்கொண்டாவின் கொல்லூர் சுரங்கம் அல்லது அமரகிரி சுரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்டதுதான் நாஸக் (Nassak) வைரம். கோல்கொண்டா சுல்தான்களின் கஜானாவில் நாஸக் வைரம் சேர்க்கப்பட்டது.

கி.பி. 1687. பேரரசர் ஔரங்கசீப் தலைமையில் முகலாயப் படைகள், கோல்கொண்டாவை முற்றுகையிட்டன. எட்டு மாதப் போராட்டத்துக்குப் பிறகு, கோல்கொண்டா சுல்தான் அபுல் ஹசன் வீழ்ந்தார். கோல்கொண்டாவின் செல்வங்கள் பலவும் முகலாயர்கள் வசம் சென்றன.

அதில் நாஸக் வைரமும் அடக்கம். ஔரங்கசீபின் காலத்துக்குப் பிறகு, முகலாயப் பேரரசு வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. ஒரு பக்கம் மராத்தியர்களின் கை ஓங்கியது. முகலாயர்கள் சேர்த்து வைத்திருந்த செல்வங்களில் கொஞ்சம், மராத்தியர்களின் கைகளுக்கு மாறியது. அப்படியாக நாஸக் வைரமும் மராத்திய ஆட்சியாளர்களிடம் வந்து சேர்ந்தது.

நாஸிக், மகாராஷ்டிராவில் அமைந்திருக்கும் நகரம். அங்கிருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் திரிம்பகேஸ்வரர் என்ற சிவன் கோயில் அமைந்துள்ளது. இந்தியாவின் பன்னிரண்டு ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. மராத்திய ஆட்சியாளர்கள் பலரும் விரும்பி வழிபட்ட கோயில் இது. கி.பி. 1720-ல்

மராத்தியப் பேரரசின் பேஷ்வா (தளபதி) பொறுப்பேற்றவர் முதலாம் பாஜி ராவ். கி.பி. 1725-ல் திரிம்பகேஸ்வரர் கோட்டையை முற்றுகையிட்ட அவர், ‘இதை வெல்ல நீ உதவினால் நான் ஏராளமான செல்வங்களை வழங்குகிறேன்’ என்று சிவனிடம் வேண்டிக்கொண்டார். வென்றார். திரிம்பகேஸ்வரருக்கு ஏராளமான நகைகளை வழங்கினார்.

நாஸக்-வைரம்

அதில் வைரம், மரகதம் போன்ற மதிப்புமிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட கிரீடமும் உண்டு. பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளின் முகங்களும் கொண்ட தங்கச் சிலைக்கு அந்தக் கிரீடம் சூட்டப்பட்டது. நாஸக் வைர மானது சிவனது நெற்றிக்கண் போல ஜொலித்த தால் ‘சிவனின் கண்’ என்ற சிறப்புப் பெயர் அதற்கு அமைந்தது. நாஸிக் பகுதியில் அமைந்த திரிம்பகேஸ்வரர் கோயிலில் இந்த வைரம் பல காலமாக இருந்ததால் ‘நாஸக் வைரம்’ என்னும் பெயர் அமைந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

கி.பி. 1796-ல் மராத்தியப் பேரரசின் கடைசி பேஷ்வாகப் பதவி ஏற்றவர் இரண்டாம் பாஜி ராவ். இவரது வீழ்ச்சிக்குப் பிறகுதான் நாஸக் வைரம் கிழக்கு இந்திய கம்பெனியின் வசம் சென்றது. எப்படி என்பதற்கு இரண்டு கோணங்கள் உண்டு. இரண்டாம் பாஜி ராவ், திரிம்பகேஸ்வரர் கிரீடத்திலிருந்த நாஸக் வைரத்தைத் தனது கிரீடத்தில் பதித்துக்கொண்டார். கி.பி. 1817-ல் கிழக்கு இந்திய கம்பெனி படைகளுக்கும், மராத்தியப் படைகளுக்கும் இடையே மூன்றாம் ஆங்கிலேய – மராத்தியப் போர் நடந்தது.

இரண்டாம் பாஜி ராவ் தோற்கடிக்கப்பட்டார். சுமார் ஆறு மாதங்கள் தலைமறைவாக இருந்த அவர், பின்பு பிரிட்டிஷாரிடம் சரணடைந்தார். அவரது செல்வங்கள் பிரிட்டிஷார் வசம் சென்றன. அதில் நாஸக் வைரமும் உண்டு என்பது ஒரு கோணம்.

இரண்டாம் பாஜி ராவ் காலத்திலும் திரிம்பகேஸ்வரர் கோயிலில்தான் நாஸக் வைரம் இருந்தது. அவரது வீழ்ச்சிக்குக்குப் பிறகு, பிரிட்டிஷார் கோயிலிலிருந்துதான் வைரத்தைக் கொள்ளையடித்தனர் என்பது இன்னொரு கோணம். மொத்தத்தில் கி.பி. 1818-ல் நாஸக் வைரம் பிரிட்டிஷார் கைகளுக்குச் சென்றது.

நாஸக்-வைரம்

கர்னல் பிரிக்ஸ் என்பவர், தான் அபகரித்த நாஸக் வைரத்தை, இந்தியாவின் அப்போதைய பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸிடம் ஒப்படைத்தார். நாஸக் வைரம் தனது தாய் மண்ணிலிருந்து கிளம்பியது.

பெருங்கடல்களைக் கடந்தது. லண்டனை அடைந்தது. போரினால் சேதமும் அழுக்கும் அடைந்திருந்த 89 காரட் நாஸக் வைரம், லண்டன் வியாபாரிகளைக் கவரவில்லை. ரண்டெல் & பிரிட்ஜ் என்ற பிரிட்டிஷ் நகைக்கடைக்காரர்கள், நாஸக் வைரத்தை சுமார் 3000 பவுண்ட் (தற்போதைய மதிப்புக்கு 2,15,000 பவுண்ட்) கொடுத்து வாங்கினார்கள். அடுத்த 13 வருடங்களுக்கு அவர்கள் வசமே நாஸக் வைரம் இருந்தது. தன் எடையைச் சுமார் 78 காரட்டுக்குக் குறைத்துக்கொண்டு வடிவத்தில் பொலிவு பெற்றது.

கி.பி. 1831-ல் இமானுவேல் சகோதரர்கள் வைரத்தைச் சொந்தமாக்கிக் கொண்டார்கள். ஆறு வருடங்கள் கழித்து அவர்கள், வெஸ்ட்மினிஸ்டரின் ராபர்ட் கிராஸ்வெனெரிடம் வைரத்தை விற்றார்கள்.

அந்த நகரத்தின் மார்க்வெஸ் (பிரபுவைவிட உயர்ந்தவர்) ஆக இருந்த ராபர்ட், தனது உடைவாளின் கைப்பிடியில் நாஸக் வைரத்தைப் பதித்துக்கொண்டு பீடுநடை போட்டார். கி.பி.1886-ல் நாஸக் வைரத்தின் மதிப்பு சுமார் 40,000 பவுண்டுகள் (இன்றைய மதிப்பில் 42,80,000 பவுண்ட்கள்) என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

கி.பி. 1927, மார்ச். ராபர்ட் குடும்பத்தினர் நாஸக் வைரத்தை, சில அமெரிக்க வியாபாரிகள் மூலமாக ஜார்ஜ் மௌபௌஸைன் என்ற பார்சிய நகை வியாபாரியிடம் விற்றனர். ஜார்ஜ், அப்போது அமெரிக்காவில் வசித்துவந்தார். அங்கே நியூயார்க்கில் நகை வணிகம் செய்துகொண்டிருந்தார். கி.பி. 1929-ல் நாஸக் வைரத்தைக் குறிவைத்து கொள்ளைக் கும்பல் ஒன்று களம் இறங்கியது.

நியூயார்க்கில் ஜார்ஜின் நகைக்கடையில் சாதாரண தபால் கவரில் வைக்கப்பட்டிருந்த நாஸக் வைரத்தை, கொள்ளையர்கள் தவறவிட்டனர். அடுத்த ஆண்டும் அதே கொள்ளைக் கும்பல் மீண்டும் நாஸக் வைரத்தைக் குறிவைத்துக் களமிறங்கியது. இந்த முறையும் அவர்கள் கண்ணில் வைரம் சிக்கவில்லை.

1933, சிகாகோவில் நடந்த உலக வர்த்தகக் கண்காட்சியில் நாஸக் வைரம் காட்சிக்கு வைக்கப்பட்டது. 1940-ல் நாஸக் வைரத்தை வாங்கிய அமெரிக்க நகை வியாபாரி, ஹாரி வின்ஸ்டன் அதை மேலும் பட்டைத் தீட்டினார். 43.38 காரட் எடைக்கு அது மாறியது. ஹாரியிடமிருந்து அடுத்த முப்பது ஆண்டுகளில் மேலும் சில அமெரிக்கர்களின் கைகளுக்கு நாஸக் வைரம் கை மாறியது.  1970-ல் உலகின் தலைசிறந்த 30 வைரங்களில் ஒன்று என்று அறிவிக்கப்பட்டது.

அதே ஆண்டின் ஏப்ரல் 16 அன்று, 5,00,000 டாலர்களுக்கு கிரீன்விச்சைச் சேர்ந்த எட்வர்ட் ஹேண்ட் என்பவரால் ஏலம் எடுக்கப்பட்டது. அன்றைய நிலவரப்படி, உலகில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இரண்டாவது வைரமாக நாஸக் சாதனை படைத்தது. இப்போது நாஸக் வைரம், லெபனானின் பெரும் பணக்காரர் ராபர்ட் மௌவாட் என்பவருக்குச் சொந்தமாக இருக்கிறது. லெபனானில் ராபார்ட்டுக்குச் சொந்தமான அருங்காட்சியகத்தில் தன்னந்தனியே ஒளிர்ந்துகொண்டிருக்கிறது.

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட நாஸக் வைரம், மீண்டும் நம் மண்ணுக்கு வரவே இல்லை. இது திரிம்பகேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான வைரம். இங்கிருந்து அபகரிக்கப்பட்ட வைரத்தை மீட்டுத் தர வேண்டும் என்று திரிம்பகேஸ்வரர் தேவஸ்தானத்தைச் சேர்ந்த சிலர், இப்போது சட்டரீதியாகப் போராடி வருகின்றனர்.

நீல வைரம் தாய் மண்ணுக்குத் திரும்புமா?

(பொக்கிஷங்களைத் தேடுவோம்)

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: mugil.siva@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x