Last Updated : 10 Jul, 2019 11:12 AM

 

Published : 10 Jul 2019 11:12 AM
Last Updated : 10 Jul 2019 11:12 AM

திறந்திடு சீஸேம் 41: திப்பு சுல்தானின் வாள்

புலி என்றால் திப்பு சுல்தானுக்கு மிகவும் பிடிக்கும். புலியின் வீரம், சாதுர்யமாகப் பதுங்கி, சாமர்த்தியமாகத் தாக்கும் அதன் ஆக்ரோஷம், வேட்டையாடும் திறன் என்று ஒவ்வொரு விஷயத்தையும் திப்பு சுல்தான் நுணுக்கமாக அறிந்து வைத்திருந்தார். தனது ஸ்ரீரங்கப்பட்டணத்தின் கோட்டையில் ஆறு புலிகளை வளர்த்தும் வந்தார்.

திப்புவின் அரியணையில் புலியின் சிலை ஒன்று கர்ஜித்துக்கொண்டி ருந்தது. அவர் பயன்படுத்திய வாள்களின் கைப்பிடிப் பகுதியில் உறுமும் புலியின் தலை செதுக்கப் பட்டிருந்தன. துப்பாக்கியிலும் புலியின் உருவம் இணைக்கப்பட்டிருந்தது. அவரது அரண்மனையின் பல பகுதி களில் புலிகளின் ஓவியங்கள், சிலைகள், சிற்பங்கள் வைக்கப்பட்டிருந்தன. திப்பு சுல்தானின் செல்லப்பெயரே ‘மைசூரின் புலி’ என்பதுதான். எப்படி அந்தப் பெயர் வந்தது?

ஒருமுறை திப்பு சுல்தானும், அவரது நண்பரான பிரெஞ்சுக்காரர் ஒருவரும் வேட்டைக்குச் சென்றனர். எதிர்பாராத நேரத்தில் பிரெஞ்சுக்காரர் மீது புலி பாய்ந்தது. திப்பு சுல்தானின் துப்பாக்கி அப்போது இயங்கவில்லை.

அடுத்ததாகப் புலி, திப்புவை நோக்கி ஆக்ரோஷத்துடன் பாய்ந்தது. புலியின் முகமும் திப்புவின் முகமும் அருகருகே இருந்த கணத்தில், தன் இடையில் வைத்திருந்த குறுவாளை உருவி, புலியின் கழுத்தில் இறக்கினார். அன்றிலிருந்து ‘மைசூரின் புலி’ என்ற பட்டப்பெயர் திப்புவோடு ஒட்டிக்கொண்டது.

திப்புவின் புலிப்பாசத்தைப் பழைய பொம்மை ஒன்றின் மூலமாகவும் அறியலாம். கிழக்கு இந்திய கம்பெனி வீரர் ஒருவர் தரையில் வீழ்ந்து கிடக்க, புலி ஒன்று அவர் மீது நின்றபடி இருப்பதாக மரத்தால் வடிவமைக்கப்பட்ட தானியங்கி பொம்மை அது. கி.பி.

1795-ல் திப்பு சுல்தானின் விருப்பப்படி இது உருவாக்கப்பட்டிருக்கிறது. மைசூரின் ராஜ்யத்துக்கும், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி படைகளுக்கும் இடையே நான்கு போர்கள் நடந்தன. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் நடந்த இந்தப் போர்கள், ‘ஆங்கிலேயே - மைசூர் போர்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இரண்டாவது ஆங்கிலேய – மைசூர் போரில் திப்புவுக்குப் பெரும் சவாலாக விளங்கியவர் ஆங்கிலேயத் தளபதி ஹெக்டர் மன்றோ.

1792 டிசம்பரில், ஹெக்டரின் மகனான ஹூக் மன்றோவைப் புலி ஒன்று தாக்கிக் கொன்றது. தன்னைப் புலியாக உருவகப்படுத்தியும், ஹூக் மன்றோவை ஒட்டுமொத்த கிழக்கிந்திய கம்பெனியின் படைகளாக உருவகப்படுத்தியும் திப்பு சுல்தான் அந்த பொம்மையை உருவாக்கியதாக வரலாற்றாளர்கள் சொல்கின்றனர்.

புலி பொம்மையின் உடலோடு கைகளால் சுற்றப்படும் இயக்கி ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அதைச் சுற்றினால் பொம்மையின் பாகங்கள் இயங்குகின்றன. சுற்றும்போது, வீரனின் இடது உள்ளங்கை, அவன் வாயில் அடித்துக்கொள்வது போல மேலும் கீழும் அசைகிறது.

வீரனின் தொண்டைப் பகுதியில் ஒரு குழாய் வழியே காற்று வெளியேறுகிறது. இதனால் வீரன் ஓலமிடுவதுபோல ஓசை வருகிறது. புலியின் தலைப் பகுதிக்குள்ளும் காற்றை வெளியேற்றும் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், புலி உறுமும் சத்தமும் வெளிப்படுகிறது.

புலி உடலின் ஒரு பகுதியில் தந்தத்தால் ஆன, 18 கட்டைகள் கொண்ட இசை விசைப்பலகை மறைவாகப் பொருத்தப்பட்டுள்ளது. அந்த விசைப் பலகையை இயக்கினால், இனிமையான இசையை உருவாக்குகிறது.

மர பொம்மையும், அதன் வண்ணப்பூச்சும் இந்திய ஓவியப் பாணியைப் பிரதிபலிக்கின்றன. இதில் இருக்கும் பித்தளைப் பாகங்கள் இந்தியக் கைவினைக் கலைஞர்களின் பங்களிப்பை உறுதி செய்கின்றன. இதில் வீழ்ந்து கிடக்கும் ஆங்கிலேய வீரரின் உயரம் ஐந்தரை அடிக்கும் மேல். 71.2 செமீ உயரமும், 172 செமீ நீளமும் கொண்ட ஆளுயர புலி பொம்மை இது.

கி.பி. 1799-ல், நான்காவது ஆங்கிலேயே – மைசூர்ப் போரில் திப்பு சுல்தான் வீழ்த்தப்பட்டார். ஸ்ரீரங்கப்பட்டணம் கோட்டை, கம்பெனியினர் வசமானது. அவரது செல்வம் ஆங்கிலேயரால் அபகரிக்கப்பட்டது. அதில் புலி பொம்மையும் ஒன்று.  இப்போதுவரை லண்டனின் விக்டோரியா – ஆல்பர்ட் அருங்காட்சியத்தில் இந்தப் புலி பொம்மை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. விசையைச் சுற்றினால், புலியின் உறுமலாகத் திப்புவின் குரல் 220 ஆண்டுகளுக்குப் பிறகும் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறது!

திப்பு சுல்தான் பயன்படுத்திய வாள் ஒன்று, டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் காணக்கிடைக்கிறது. வளைவான, கூர்மையான வாள். தங்க முலாம் பூசப்பட்ட வாளின் கைப்பிடி. மரத்தால் செய்யப்பட்டு, அடர் சிவப்புத் துணியால் மூடப்பட்ட வாளின் உறை. குர்-ஆனின் வரிகளுடன் செதுக்கப்பட்ட திப்பு சுல்தானின் பெயர் என்று கலை அம்சத்துடன் இந்த வாள் காணப்படுகிறது.

கி.பி. 1789-ல் திப்பு சுல்தான், திருவிதாங்கூரின் நெடும்கோட்டைப் பகுதியில் நடந்த மூன்றாவது ஆங்கிலேய - மைசூர் போரில் பின்னடைவைச் சந்தித்தார். அப்போது களத்தில் அவரது வாள் ஒன்று கைப்பற்றப்பட்டு, பின்னர் பிரிட்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

ஒரு சில வருடங்களுக்கு முன்பு, இங்கிலாந்தின் பெர்க்ஷையரைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்கள் வீட்டில் உபயோகப்படுத்தப் படாமல் இருந்த அறையைச் சுத்தம் செய்தபோது, பொக்கிஷமாகச் சில பொருட்கள் சிக்கின.

திப்பு சுல்தானின் தந்தை ‘ஹைதர்’ என்று பொறிக்கப்பட்ட வாள் உட்பட சில வாள்கள், துப்பாக்கி. பாக்குப் பெட்டி, தங்க மோதிரம், கேடயம் போன்றவை கிடைத்தன. அந்தத் தம்பதி, ஆண்டனி கிரிப் என்ற ஏல நிறுவனத்தில், இந்தப் பொருட்களை ஒப்படைத்தது.

அவர்கள், ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தானின் காலத்தைச் சேர்ந்தவை என்று உறுதி செய்தனர். திப்பு சுல்தானின் பொருட்கள் இந்தியாவுக்கே திரும்பிச் செல்ல வேண்டும் என்று விரும்புவதாக அந்தத் தம்பதி கூறியது.

இந்திய அரசும், India Pride Project என்ற அமைப்பும் இந்தப் பொருட்களை இந்தியாவிடம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டன. ஆனால், 2019 மார்ச் மாதம் திப்பு சுல்தானின் பொக்கிஷங்கள் ஏலம் விடப்பட்டன.

திப்புவின் எந்த ஒரு பொக்கிஷமும் இந்தியாவுக்குத் திரும்பி வரவில்லை.

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: mugil.siva@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x