Last Updated : 03 Jul, 2019 11:47 AM

 

Published : 03 Jul 2019 11:47 AM
Last Updated : 03 Jul 2019 11:47 AM

டாய் ஸ்டோரி 4: அன்புக்குப் புது அர்த்தம் சொல்லும் பொம்மைகள்

பொம்மைகளின் உலகம் உயிர்ப்புடன் இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் உருவான திரைப்படம்தான் ‘டாய் ஸ்டோரி’. வால்ட் டிஸ்னியின் பிக்ஸார் அனிமேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் 1995-ம்

ஆண்டில் இது வெளியானது. உட்டி. பஸ், ஆன்டி என்று இந்தப் படத்தின் பிரபல கதாபாத்திரங்களைப் பார்த்தே ஒரு தலைமுறை குழந்தைகள் வளர்ந்திருக்கிறார்கள். ‘டாய் ஸ்டோரி’யின் தொடர்ச்சியாக ‘டாய் ஸ்டோரி 2’  1999-ம் ஆண்டிலும், ‘டாய் ஸ்டோரி 3’ 2010-ம் ஆண்டிலும் வெளியாகின.

ஆன்டிக்கும் அவன் நேசிக்கும், அவனை நேசிக்கும் பொம்மைகளுக்குமான பாசப்பிணைப்பையே மூன்று பாகங்களும் பேசியிருந்தன. 9 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் ஆன்டியின் பொம்மைகளுக்கு உயிர் கொடுத்து ‘டாய் ஸ்டோரி 4’ வெளிவந்திருக்கிறது.

வளர்ந்த ஆன்டி, தன் பொம்மைகளைப் பாதுகாப்பாகப் பார்த்துகொள்ளும்படி போன்னி என்ற சிறுமியிடம் ஒப்படைப்பதோடு நிறைவடைந்திருந்தது ‘டாய் ஸ்டோரி 3’. ஆன்டியின் உலகமாக இருந்த பொம்மைகள் சிறுமி போன்னியின் உலகத்துக்குள் நம்பிக்கையுடன் நுழைந்தார்கள். அவர்களின் நம்பிக்கையைப் பின்தொடர்ந்து செல்கிறது ‘டாய் ஸ்டோரி 4’. ஜோஷ் கூலே இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

புறக்கணிக்கப்படும் உட்டி

ஆன்டியைப் போலவே போன்னிக்கும் பிரியத்துக்குரிய பொம்மையாக இருந்த உட்டி, திடீரென்று அவளால் புறக்கணிக்கப்படுகிறான். இந்தப் புறக்கணிப்பை ஏற்றுகொள்ள முடியாமல் தவிக்கிறான். அவனது நண்பர்களான பஸ், ஜெஸ்ஸி ஆகியோர் ஆறுதல் சொல்கிறார்கள்.

போன்னி முதல் நாள் பள்ளிக்குச் செல்லத் தயக்கத்துடன் தயாராகிறாள். அவளுக்கு உதவுவதற்காக, அவளுடன் பள்ளிக்குச் செல்கிறான் உட்டி. முதல் நாள் வகுப்பில், ஃபோர்க்கி என்ற புது பொம்மையை ஒரு பிளாஸ்டிக் முள்கரண்டியிலிருந்து உருவாக்குகிறாள் போன்னி. உடனடியாக, அவளது உலகமாகிப் போகிறது ஃபோர்க்கி.

போன்னியின் புது உலகம்

தான் ஒரு பொம்மை என்பதை ஏற்க மறுக்கிறது ஃபோர்க்கி. தான் ஒரு குப்பைதான் என்று சொல்லி அடிக்கடிக் குப்பைத் தொட்டியைத் தேடிச் செல்கிறது. போன்னியின் புது உலகமாக மாறியிருக்கும் ஃபோர்க்கியைப் பாதுகாப்பதைத் தன் கடமையாக நினைக்கிறான் உட்டி. இதற்கிடையில், போன்னி, தன் குடும்பத்துடனுடம் பொம்மைகளுடனும் சுற்றுலா செல்கிறாள்.

வழியில், ஃபோர்க்கி தப்பிச் செல்கிறது. ஃபோர்க்கியைப் பின்தொடர்ந்து உட்டியும் செல்கிறான். அதன் கால்களில் போன்னியின் பெயர் எழுதப்பட்டிருப்பதால், அது குப்பையல்ல, அது போன்னியின் பொம்மை என்பதைப் புரியவைக்கிறான்.

ஒரு பொம்மையின் கால்களில் எந்தக் குழந்தையின் பெயர் எழுதப்பட்டிருக்கிறதோ, அந்தக் குழந்தையை மகிழ்ச்சிப் படுத்துவதுதான் அந்தப் பொம்மையின் கடமை என்ற கருத்தை மற்ற மூன்று பாகங்களைப்போலவே  வலியுறுத்துகிறான் உட்டி. ஒரு வழியாகத் தான் போன்னியின் பொம்மை என்பதை ஏற்றுகொள்கிறது ஃபோர்க்கி.

கடமையை நிறைவேற்றும் உட்டி

ஃபோர்க்கிக்குப் புரிய வைப்பதற்குள், சாலையில் நின்றிருந்த அவர்களின் வண்டி ‘ஆர்வி’, பூங்காவுக்குச் சென்றுவிடுகிறது. ஃபோர்க்கியை அழைத்துகொண்டு, போன்னி இருக்கும் இடத்தை நோக்கி நடக்கிறான் உட்டி.

வழியில், ஒரு பழைய கடையில் தன் தொலைந்துபோன தோழி ‘போ பீப்’ இருப்பதை உணர்கிறான். கடைக்குள் நுழையும் உட்டி, ‘கேபி கேபி’ என்ற பழுதடைந்த பொம்மையிடம் மாட்டிக்கொள்கிறான். ஒரு கட்டத்தில் அவன் தப்பித்தாலும் ஃபோர்க்கியை அது பிடித்து வைத்துக்கொள்கிறது.

‘போ பீப்’, அவளது நண்பர்களுடன் சேர்ந்து ஃபோர்க்கியைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்குகிறான் உட்டி. ஃபோர்க்கியைக் காப்பாற்றி போன்னியிடம் ஒப்படைத்துத் தன் கடமையை உட்டி நிறைவேற்றினானா? போன்னியின் அன்பு மீண்டும் உட்டிக்குக் கிடைத்ததா? அல்லது புறக்கணிப்பை ஏற்றுகொள்ளும் மனப்பக்குவத்துடன்  உட்டி போன்னியையும் தன் பழைய  நண்பர்களையும் பிரிந்து செல்கிறானா என்பதுதான் ‘டாய் ஸ்டோரி 4’.

குழந்தைகள் அற்ற பொம்மைகள்

பொம்மைகள் அற்ற குழந்தைகள், குழந்தைகள் அற்ற பொம்மைகள் இரண்டுமே வேதனையான விஷயம். இதில், குழந்தைகளால் புறக்கணிக்கப்படும் பொம்மைகள் என்ன ஆகின்றன என்ற கதையை இதுவரை வெளியான டாய் ஸ்டோரியின் மூன்று பாகங்களும் உணர்வுபூர்வமாகப் பதிவுசெய்திருந்தன.

குழந்தைகளால் ‘தொலைக்கப்படும்’ அல்லது ‘புறக்கணிக்கப்படும்’ பொம்மைகளும் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழமுடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறது ‘டாய் ஸ்டோரி 4’. அன்புக்காக ஏங்கிக்கொண்டிருப்பதைவிட, மற்றவர்களுக்கு அன்பு கிடைக்க

உதவி செய்வது அர்த்தம் உள்ளது என்பதை அழுத்தமாக வலியுறுத்தியிருக்கிறது இந்தத் திரைப்படம்.

குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், பெரியவர்களுக்கும்  அன்பின் அர்த்தத்தைப் புதிய கோணத்தில் புரியவைக்கிறது.

# கணினியில் உருவாக்கப்பட்ட முதல் முழுநீள அனிமேஷன் திரைப்படம் டாய் ஸ்டோரி (1995).

# ‘பஸ் லைட்இயர்’ கதபாத்திரத்துக்குப் பிரபல அமெரிக்க விண்வெளி வீரர் பஸ் ஆல்ட்ரின் நினைவாகப் பெயர் வைக்கப்பட்டது.

# பொம்மைகளுக்கு உயிர் இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் 1988-ம் ஆண்டு வெளியானது ‘டின் டாய்’. பிக்ஸார் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிமேஷன் குறும்படமாக வெளியிடப்பட்ட இந்தப் படம்தான் ‘டாய் ஸ்டோரி’ உருவாக அடித்தளமாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

# உட்டிக்குப் பிரபல அமெரிக்க நடிகர் டாம் ஹேங்க்ஸும்  பஸ் லைட்இயருக்கு நடிகர் டிம் ஆலனும் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

# 24 ஆண்டு கால ‘டாய் ஸ்டோரி’யின்  பயணத்தில்,

‘டாய் ஸ்டோரி 4’தான் இறுதி பாகம் என்று தெரிவித்திருக்கிறது பிக்ஸார் நிறுவனம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x