Last Updated : 09 Aug, 2017 11:02 AM

 

Published : 09 Aug 2017 11:02 AM
Last Updated : 09 Aug 2017 11:02 AM

அம்மாவின் சேட்டைகள் 13: மூக்கால் பார்க்க முடியுமா?

ம்மாவைப் பற்றிப் பாட்டி சொல்வது வேடிக்கையாக இருக்கும். பாட்டி ஒரே ஒரு அம்மா கதை சொல்லுங்க என்று கேட்பேன். கேட்க மாட்டேனா என்று காத்திருந்ததுபோல் சொல்வார். சில சமயம் கதை கேட்க நேரங்காலமில்ல அப்டின்னு சொல்லித் தொரத்தி உட்டுடுவாங்க. சில நேரம் அவுங்களாவே சொல்ல ஆரம்பிப்பாங்க.

“உங்கம்மா மூக்கை அறுத்துக் காக்காய்க்குத்தான் போடணும். அப்படி ஒரு மூக்கு. எல்லாரும் கண்ணால பார்த்தா, அவ மட்டும் மூக்கால பார்ப்பா. பள்ளிக்கூடத்துலருந்து வந்து நின்னதும் நிக்காததுமா மோப்பம் புடிச்ச நாய்க்குட்டி மாதிரி மூக்கை உறிஞ்சிக்கிட்டே நிப்பா. சின்னப் புள்ளயிலருந்து காப்பி புடிக்கும். காப்பிய லோட்டா நெறைய வச்சிக் குடிச்சா தொப்பை பானை மாதிரி உருட்டிக்கிட்டு நிக்கும்.

ஒண்ணாவுது படிச்சபோது டவுனுக்குக் கடைத் தெருவுக்குக் கூட்டிக்கிட்டுப் போனேன். அம்மா கேக்குதா அப்டிங்குறா. நில்லு, நின்னு மோந்துபாரு, கேக்குதான்னு கேட்டா. எனக்குப் புரியலை. மோந்து பாத்தா கேக்குமா? அதெப்படின்னு கேட்டேன். காபி வாசனை கேக்குதுன்னு விளக்கம் குடுக்குறா. ஏழு தெருவு தாண்டி வர்ற வாசனையை மோப்பம் புடிக்கிறவடா உங்கம்மா?” என்பார் பாட்டி. ஆமாம், அம்மாவின் மூக்கு பத்தி சொல்ல ஏகப்பட்டது இருக்கத்தான் செய்யுது.

அடுப்புல காயோ குழம்போ கொதிக்கும்போது அந்த வாசனைய வச்சி அய்யோ உப்பு போட மறந்துட்டனேன்னு எழுந்து ஓடுவாங்க. நாலாவது வீட்டுல எண்ணெய் சட்டி காஞ்சா அம்மா மூக்குக்குத்தான் மொத வாடை வரும். வடையா முறுக்கான்னு தெரியலையேன்னு சொல்லுவாங்க. அந்த வாசனை அம்மாவை ஏதோ செய்யும், உடனே சாப்பிடணும்போல இருக்குன்னு சொல்லுவாங்க. அடுத்த கொஞ்ச நேரத்துல, எங்க வீட்டுல இப்படிப் பேசிக்குவோம்.

“பாப்பா ரெண்டு ப்ளான். நீயும் நானும் கிளம்பி ராசு வீட்டுக்குப் போறது, இல்லன்னா நம்ம பஜ்ஜி சுடுறது” அப்படின்னு எழுந்து கிளப்பி கூட்டிக்கிட்டே போயிடுவாங்க. அம்மா மொழியில சொல்லணும்னா ஜம்முன்னு ரெண்டு வடை சாப்ட்டுட்டு வர வேண்டியதுதான். இந்த மாதிரி நாக்குக்கும் மூக்குக்கும் தொடர்பு இருக்குற மாதிரிதான் நிறைய இருக்கும்.

வாசனைக்காகவே சில நேரம் காத்துக்கிட்டு இருப்பதும் உண்டு. மழை பெய்தாலே அம்மாவுக்கு அவுங்க ஊர் காட்டுல பூக்குற காயாம்பூ வாசனையும் ஊருக்குள்ள பூக்குற மகிழம்பூ, மரமல்லி வாசனையும் அடிக்க ஆரம்பிச்சிடும். இந்நேரம் காடே மணக்கும்னு முணுமுணுப்பாங்க.

அம்மாகிட்ட எதைக் குடுத்தாலும் மோந்து பார்ப்பாங்க. இல்லைன்னா அவுங்களே வாசனைய வச்சி ஏதாவது சொல்லுவாங்க. பலாப்பழ வாசனைய பதுக்கிவைக்கலாம்னு பார்த்தா முடியுமான்னு உதாரணம் எடுத்துச் சொல்லுவாங்க.

“இங்க பாரு, கழுவி ஊத்துற கழனித் தண்ணியிலருந்தும் வாசனை வரும். தலையில வைக்கிற மல்லிப்பூவுலருந்து வர்றதும் மணம்தான். மண்ணுக்கு, மனுசனுக்கு எல்லாத்துக்கும் மனம் இருக்கு. காத்து மாதிரி, இல்லை இல்லை காத்தோட காத்தா கலந்து அதுல கரைஞ்சி போயிடும்.

அது வா வான்னும் கூப்பிடும். அதுவே நம்மகிட்ட வந்து சேரும். என்னைச் சாப்பிடு அப்படின்னு சொல்லும். சுவை மணக்கும். மணம் முடிவுசெய்யும். முந்திரிக்கொட்டை, மாங்கொட்டை சுடும்போது வர்ற வாசம் அதைக் காட்டிக்கொடுக்கும். வேப்பிலை வாசனையில கசப்பு தெரியும். மண் வாசனையில ஈரம் தெரியும். பிரியாணி சமைக்கும்போதே சாப்பிடக் கூப்பிடும். மீன் வறுக்கும்போதே…

வாடை, சில நேரம் வயித்துக்குள்ள இருக்குறதைப் பெரட்டி வெளிய எடுத்துட்டு வந்து போடும். நான் மொத மொத வாந்தி எடுத்ததை மறக்கவே முடியாது. அந்த பெட்ரோல் வாடை எப்படி ஆரம்பிச்சது? உடம்புக்குள்ள எல்லா நரம்புக்குள்ளயும் போயி அந்த வாடை விதம் விதமா மாறி…குடலைக் கழட்டிக் கொண்டுவந்து வெளிய போட்டுச்சி. அப்டி தொரத்தியடிக்கும்” அம்மா சொல்ற எல்லா வாடையையும் இங்க எழுதுறது கொஞ்சம் கஷ்டம்தான்.

சாப்பாட்டுப் பொருளை மோந்து பார்க்குற மாதிரியே துணிய மோந்து பார்ப்பாங்க. தொவைச்சதா இல்லையான்னு வாடையைப் பார்த்தா தெரியப் போவுதுன்னு சொல்லுவாங்க.

அம்மா அஞ்சாம் வகுப்பு படிக்கும்பொழுது நாற்றம் என்றால் நறுமணம்னு புத்தகத்துல இருந்துச்சாம். அம்மாவுக்குக் கொழப்பமா இருந்ததாம். வாடைன்னா என்ன? நறுமணம்னா நல்ல மணம்னா கெட்ட வாசனைக்கு என்ன சொல்றதுன்னு அவ்ளோ கேள்வியாம். பதில்தான் புரிபடவே இல்லையாம்.

“பொழப்பு நாறிப் போச்சுன்னா, அதுலருந்து ஊசிப்போன வாடை வருமான்னு கேட்டிருக்கேண்டா மகனே. பொழப்புல ஒரு வாசனை இருந்து அதை மோந்து பார்க்காம உட்டுட்டம்னா? அதனாலதானாம். ஆனா கதைக்குக்கூட வாசனையிருக்குன்னு இப்ப தெரிஞ்சி போச்சு” ன்னு அம்மா பெருமையா சொல்வாங்க.

இதெல்லாம் இருக்கட்டும்னு ஒருநாள் நான் என்ன செஞ்சேன் தெரியுமா? ஒரு துணியை எடுத்தேன். ஒரு பலாப்பழம், கருவாடு, மகிழம்பூ, காசு…போட்டு சுத்தி இதுக்குள்ள என்ன இருக்குன்னு கண்டுபுடிங்கன்னு சொன்னேன். அம்மாவுக்குப் புடிச்ச வேலையாகிடுச்சி. பலாச்சுளைன்னு டக்குன்னு சொல்லிட்டாங்க.

அடுத்துக் கருவாடு, மகிழம்பூவைச் சொல்லவே முடியலை. அது அவுங்களுக்குப் பெரிய அவமானமா போயிடுச்சி. “மகிழம்பூ ஒரு பூவோட வாசனை, மத்த வாசனையெல்லாம் மீறி வரமுடியலை பாப்பா”ன்னு சொன்னாங்க. இது மட்டுமல்ல ஏதேதோ காரணம் சொன்னாங்க. எப்டின்னாலும் அம்மா லேசா கண்ணை மூடி மெதுவா மூச்சை உள்ளிழுத்தாங்கன்னா அவுங்க உடம்பு பூரா மணம் பரவுறதை என்னால பார்க்க முடியும்.

(சேட்டைகள் தொடரும்)
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x