Published : 30 Aug 2017 09:34 AM
Last Updated : 30 Aug 2017 09:34 AM
‘பழங்கால விளையாட்டுகளில் ஒன்று ‘தாயம் உருட்டுதல்’. வீட்டுக்குள்ளே விளையாடும் விளையாட்டு இது.
2 முதல் 4 பேர்வரை விளையாடலாம். தனித்தனியாகவும், 2 பேர் சேர்ந்து இரு குழுவாகவும் விளையாடலாம்.
எப்படி விளையாடுவது?
விளையாடும் ஒவ்வொருவரும் தலா 6 காய்களை (கற்கள், புளியங்கொட்டைகள்) வைத்துக்கொள்ளுங்கள். ஓர் அடி அளவுள்ள சதுரத்தைத் தரையில் வரையுங்கள். அதில் 7-க்கு 7 என 49 சம அளவுள்ள கட்டங்களாக்கிக்கொள்ளுங்கள்.
முதலில் விளையாடுபவர் இரண்டு தாயக்கட்டைகளையும் சேர்த்து தரையில் உருட்டுங்கள். இப்படியாக, ஒவ்வொருவரும் வரிசையாகத் தாயக்கட்டைகளை உருட்டுங்கள். யாருக்கு முதலில் ‘தாயம்’ (ஒன்று) விழுகிறதோ, அவர் தன் கையிலுள்ள காயை, அவர் பக்கமுள்ள நடுக் கட்டத்தில் வைக்க வேண்டும்.
கட்டத்தில் காய்களை வைத்த பிறகு, உருட்டும் தாயக்கட்டைகளில் விழும் எண்களுக்கு ஏற்ப காய்களை நகர்த்திக்கொண்டே செல்லுங்கள். தாயம், ஐந்து விழுந்தால் காய்களைக் கட்டத்துக்குள் இறக்க வேண்டும். தாயம், ஐந்து, ஆறு, பன்னிரண்டு ஆகிய எண்கள் விழும்போது, மறுபடியும் எடுத்து உருட்டுங்கள். ஒருவருக்கு விழுந்த எண்களுக்கு ஏற்ப காய்களை நகர்த்தும்போது, வழியில் குறுக்கிடும் மற்ற ஆட்டக்காரர்களின் காய்களை வெட்டி, கட்டத்திலிருந்து வெளியேற்றலாம். குறுக்குக் கோடு போட்ட கட்டங்களிலுள்ள காய்களை வெட்ட முடியாது. மொத்தக் கட்டங்களையும் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு, கடைசிக் கட்டத்துக்கு வரும் காயை, ‘பழம்’ என்று சொல்லி எடுத்துக்கொள்ளலாம். இப்படி யாருடைய 6 காய்களும் முதலில் ‘பழமா’கிறதோ, அவரே இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றவர்!
(இன்னும் விளையாடலாம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT