Published : 09 Aug 2017 11:00 AM
Last Updated : 09 Aug 2017 11:00 AM
பறக்க இயலாத பறவைகளில் ஒன்று பென்குயின். தென் துருவப் பகுதிகளில் பென்குயின்கள் அதிகமாக வசிக்கின்றன. வட துருவத்தில் பென்குயின்கள் இல்லை.
அண்டார்டிகாவில் வாழும் பேரரச பென்குயின்கள் உயரமானவை. அழகானவை. 4 அடி உயரமும் 45 கிலோ எடையும் கொண்டவை. பறக்க முடியாவிட்டாலும் பென்குயின்களால் வேகமாக நீந்த முடியும். ஒருமுறை தண்ணீருக்குள் சென்றால், 20 நிமிடங்களுக்குப் பிறகு வெளியே வருகின்றன. பென்குயின்களின் இறக்கைகள் துடுப்புபோல் நீந்துவதற்கு உதவுகின்றன. பாதி நேரம் கடலிலும் பாதி நேரம் நிலத்திலும் பென்குயின்கள் வாழ்கின்றன.
பென்குயின்களால் நன்றாக நடக்கவும் முடியும். சக்தியைச் சேமிப்பதற்காகவும் வேகமாக நகர்வதற்காகவும் பனிக்கட்டி மீது வயிற்றை வைத்து வழுக்கிச் செல்கின்றன.
கடுங்கு குளிர் நிலவும் அண்டார்டிகாவில் குளிரைத் தாங்கும் விதத்தில் பென்குயின்களின் உடல் அடர்த்தியான முடிகளால் மூடப்பட்டுள்ளன. உடலில் இருந்து எண்ணெய் சுரப்பதால், குளிரோ தண்ணீரோ உடலை எளிதில் தாக்காது. குளிரிலிருந்து தப்பிக்க பென்குயின்கள் கூட்டமாகவும் வசிக்கின்றன.
பேரரசப் பெண் பென்குயின் ஒரு தடவைக்கு ஒரு முட்டைதான் இடும். முட்டை இட்ட பிறகு உணவு தேடி, கடலுக்குச் சென்றுவிடும். ஆண் பென்குயின்தான் அடை காக்கும். 9 வாரங்களுக்குப் பிறகே முட்டையிலிருந்து குஞ்சு வெளிவரும். அதுவரை அப்பா பென்குயின் உணவு சாப்பிடாது. உடலின் எடையில் பாதியை இழந்துவிடும். குஞ்சு பொரிந்தவுடன் அம்மா பென்குயின் திரும்பி வரும். அப்பா பென்குயின் உணவு தேடிக் கடலுக்குச் சென்றுவிடும்.
பேரரச பென்குயின்களின் முன் பகுதி வெள்ளையாகவும் பின் பகுதி கறுப்பாகவும் இருக்கும். கழுத்து, தலைப் பகுதிகளிலும் அலகின் அடிப்பகுதியிலும் மஞ்சள் நிறமாக இருக்கும்.
பென்குயின்கள் சிறிய மீன்கள், சிறிய கணவாய்கள், இறால் வகையைச் சேர்ந்த கிரில்களை உணவாக எடுத்துக்கொள்கின்றன. பேரரச பென்குயின்கள் 20 வருடங்கள் வாழக்கூடியவை.
பேரரச பென்குயின்கள் அண்டார்டிகாவில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தால் வேகமாக அழிந்துவருகின்றன.
பென்குயின்களில் பல வகைகள் இருக்கின்றன. ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, பெரு, நியூசிலாந்து, கலப்பகோஸ் தீவுகளிலும் வாழ்கின்றன.
Stock photo ID: 578679982
Stock photo ID: 863780
Stock vector ID: 490745872
Stock photo ID: 616547291
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT