Last Updated : 30 Aug, 2017 09:37 AM

 

Published : 30 Aug 2017 09:37 AM
Last Updated : 30 Aug 2017 09:37 AM

மீனம்மா… மீனம்மா…

# மீன்கள் முதுகெலும்புடைய நீர்வாழ் உயிரினம். மீன்கள் சுமார் 50 கோடி ஆண்டுகளாக பூமியில் வசித்துவருகின்றன. மீன்கள் செவுள்கள், நுரையீரல் மூலம் தண்ணீரிலுள்ள ஆக்சிஜனை எடுத்துக்கொள்கின்றன. இதுவரை சுமார் 30 ஆயிரம் மீன்கள் கண்டறியப்பட்டுள்ளன. இன்னும் கண்டறியப்படாத மீன்கள் ஏராளமாக இருக்கின்றன.

# மீன்கள் குளிர் ரத்தப் பிராணிகள். வாழும் சூழலுக்கு ஏற்ப உடலின் வெப்பம் இருக்கும். அதனால்தான் வெப்பக் கடலிலும் ஆர்டிக் கடலிலும் கூட மீன்களால் வாழ முடிகிறது. உப்புக் கடல்கள், நல்ல நீர் நிலைகளான ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகளில் மீன்கள் வாழ்கின்றன.

# தலை, உடல், வால் என்று மூன்று பகுதிகளைக் கொண்டவை மீன்கள். உடல் முழுவதும் செதில்களால் மூடப்பட்டிருக்கும். இவை நீந்துவதற்கும் வால் திரும்புவதற்கும் உதவியாக இருக்கின்றன.

# மிகச் சிறிய மீன்களில் இருந்து மிகப் பெரிய மீன்கள் வரை காணப்படுகின்றன. மிகச் சிறிய மீன் சிறிய கோபி. மீன் 13 மில்லி மீட்டர் நீளம்தான் இருக்கும். இது பிலிப்பைன்ஸ் நாட்டில் காணப்படுகிறது. கடல்களில் வசிக்கும் திமிங்கிலச் சுறா மீன்களில் மிகப் பெரியது. சுமார் 60 அடி நீளம் இருக்கும்.

# சில மீன்கள் சிவப்பு, மஞ்சள், நீலம் போன்ற கண்கவர் வண்ணங்களில் காணப்படுகின்றன. சில மீன்களின் உடலில் கோடுகளும் புள்ளிகளும் இருக்கின்றன.

# மீன்களுக்கு பார்வைத் திறன், உணர் திறன், சுவை திறன் போன்றவை சிறப்பாக இருக்கின்றன. மீன்களால் வலியை உணர்ந்துகொள்ளவும் முடியும்.

# மீன்கள், மீன் முட்டைகள், மெல்லுடலிகள், கடல் தாவரங்கள், பாசிகள், பூச்சிகள், நீர்ப் பறவைகள், தவளைகள், கடல் ஆமைகள் போன்றவை மீன்களின் உணவுகள்.

# சில மீன்கள் கடலின் மேல் பகுதியிலும் சில மீன்கள் கடலின் ஆழத்திலும் வசிக்கின்றன. மேல் பகுதியில் வசிக்கும் மீன்களால் ஆழத்தில் வசிக்க இயலாது. ஆழத்தில் வசிக்கும் மீன்களால் மேல் பகுதியில் வசிக்க முடியாது.

# மீன்கள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பவை. பெரும்பாலான மீன்கள் முட்டைகளை வெளியே இடுகின்றன. சுறா மீன்கள் முட்டைகளை உடலுக்குள்ளே வைத்து, 2 அடி நீளம் வரை வளர்ந்த பிறகு மீன்களாக வெளியே அனுப்புகின்றன.

# மீன் பிடித்தல் முக்கியமான தொழிலாக இருக்கிறது. பொழுதுபோக்குக்காகவும் மீன் பிடித்தல் நடைபெறுகிறது. மனிதர்களின் உணவுகளில் மீன்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

# தண்ணீருக்கு மேலே நீண்ட தூரம் தாவிச் செல்லும் பறக்கும் மீன், தரையில் நடந்து செல்லும் நடக்கும் மீன், தண்ணீரைப் பீய்ச்சியடித்து வேட்டையாடும் வில்வித்தை மீன், ஒளி உமிழும் மீன், மின்சாரம் உற்பத்தி செய்யும் மீன், பிற மீன்களைச் சுத்தம் செய்யும் மீன் என்று வித்தியாசமான குணங்கள் கொண்ட மீன்களும் இருக்கின்றன.

# சுமார் 1000 வகை மீன்கள் அழிந்து வரக்கூடிய ஆபத்தான் நிலையில் இருக்கின்றன. மீன்களைப் பற்றிய படிப்புக்கு இக்தீயாலஜி (ichthyology) என்று பெயர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x