Published : 02 Aug 2017 12:55 PM
Last Updated : 02 Aug 2017 12:55 PM
கோ
டைக்கால விளையாட்டுகளில் ஒன்று ‘பம்பரம் விடுதல்.’ 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள்தான் விளையாட வேண்டும். பம்பரத்தில் ஆணி இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். 8 பேர் வரை விளையாடலாம்.
எப்படி விளையாடுவது?
ஒவ்வொருவரும் பம்பரத்தையும் கயிற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள். தரையில் சிறிய வட்டம் ஒன்றை வரைந்துகொள்ளுங்கள். பம்பரத்தின் மீது கயிற்றைச் சுற்றிக்கொள்ளுங்கள்.
‘ஒன்று, இரண்டு, மூன்று’ என்றதும், அனைவரும் பம்பரத்தை வேகமாகத் தரையில் வீசுங்கள். பம்பரம் இப்போது அழகாகச் சுற்றத் தொடங்கும். உடனே கயிற்றால் சுற்றும் பம்பரத்தை மேலே எடுத்து, வலது உள்ளங்கையில் விடுங்கள். இதைக் கடைசியாக யார் செய்தாரோ, அவரே முதல் போட்டியாளர்.
விளையாட ஆரம்பிக்கலாமா?
முதல் போட்டியாளர் தனது பம்பரத்தை வட்டத்தின் நடுவில் வைக்க வேண்டும். மற்றவர்கள், வட்டத்திலுள்ள பம்பரத்தைக் குறி பார்த்து தங்களது பம்பரத்தை வீச வேண்டும். பம்பரம் வட்டத்துக்குள் சுற்றும்போது முதல் போட்டியாளர் வட்டத்துக்குள்ளேயே அமுக்கிவிட்டால், அவரின் பம்பரத்தையும் வட்டத்துக்குள்ளேயே வையுங்கள். சுற்றாத மற்ற பம்பரங்களையும் வட்டத்துக்குள் வையுங்கள். இந்தப் பம்பரங்களை வெளியிலிருந்து பம்பரம் சுற்றுபவர்கள் குறி பார்த்து அடித்து, வட்டத்தை விட்டு வெளியேற்றுங்கள். யாருடைய பம்பரம் கடைசியாக வட்டத்தில் இருக்கிறதோ, அந்தப் பம்பரத்தை வட்டத்திலிருந்து வெளியேற்றி, 20 அடி தள்ளியுள்ள அதே போன்ற மற்றொரு வட்டத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.
அனைவரும் பம்பரத்தைச் சுற்றவைத்துக் கொண்டே, அந்தப் பம்பரத்தைத் தள்ளித் தள்ளி மறு வட்டத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டும். இடையில் யாருடைய பம்பரமாவது சுற்றாமல் போனால், அவருடைய பம்பரத்தை மாற்றாக வைக்க வேண்டும். இரண்டாவது வட்டத்திலிருந்து யாருடைய பம்பரம் வெளியேறுகிறதோ அவரே விளையாட்டில் தோற்றவர்.
தோற்றவர் பம்பரத்தில் அனைவரும் அவர்களது பம்பர ஆணியால் ‘குத்து’ வைப்பார்கள். இதற்கு ‘ஆக்கர்’ என்று பெயர். விளையாட்டில் யாருடைய பம்பரம் ‘ஆக்கர்’ அதிகமின்றித் தப்பிக்கிறதோ, அவரே வெற்றியாளர்.
(இன்னும் விளையாடலாம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT