Published : 12 Jul 2017 11:28 AM
Last Updated : 12 Jul 2017 11:28 AM
வயது வித்தியாசமின்றி கோலி விளையாடலாம். 6 முதல் 10 குழந்தைகள் வரை சேர்ந்து விளையாடலாம்.
எப்படி விளையாடுவது?
ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோலிக்குண்டை எடுத்துக்கொள்ளுங்கள். அனைவரும் ஒரு நேர்க்கோட்டில் வரிசையாக நின்று கொள்ளுங்கள். கோட்டிலிருந்து 10 அடி தொலைவில் சிறிய குழியொன்றைத் தோண்டிக்கொள்ளுங்கள்.
விளையாடுபவர்கள் அனைவரும் தங்கள் கையிலுள்ள கோலிக்குண்டை, குழியை நோக்கி வீச வேண்டும். அனைவரும் வீசி முடித்த பின்பு, எந்தக் கோலி குழியில் விழுந்ததோ அல்லது குழிக்கு அருகில் விழுந்ததோ அந்தக் கோலியை வீசியவர்தான் முதலாவதாக விளையாட்டைத் தொடங்க வேண்டும். கால்களை மடக்கியபடி கீழே உட்கார்ந்துகொள்ளுங்கள். இடது கை அல்லது வலது கை கட்டைவிரலைத் தரையில் ஊன்றிக்கொண்டு, ஆட்காட்டி விரலிலோ நடுவிரலிலோ கோலிக்குண்டை வைத்து, அதனை மற்றொரு கை விரல்களால் பிடித்து, குழியில் விழும்படி வீச வேண்டும்.
குழியில் கோலி விழுந்துவிட்டால், அவரே விளையாட்டைத் தொடரலாம். இல்லையென்றால், குழிக்கு அருகில் அடுத்து யார் கோலிக்குண்டை வீசுபவர் விளையாட்டைத் தொடர வேண்டும். குழியில் கோலியைப் போட்டவர், குழியின் மேற்புறத்தின் ஓரமாகக் கட்டை விரலை ஊன்றி, சுற்றியிருக்கும் கோலிகளைத் தனது கோலியால் குறி பார்த்து முன்னர் கூறியபடி அடிக்க வேண்டும்.
இப்படியாக, கோலியை விளையாட்டுத் தொடங்கிய நேர்க்கோடு வரை அடித்துச் சென்று விட்டால், அங்கிருந்து அந்தக் கோலிக்குண்டுக்கு உரியவர் தனது கோலியைக் குழி இருக்கும் இடம்வரை மூடிய கை விரல்களின் முட்டியாலேயே தள்ளிக்கொண்டு வர வேண்டும். இந்த விளையாட்டை இருவர் இருவராக அணி சேர்ந்து கொண்டும் விளையாடலாம்.
(இன்னும் விளையாடலாம் )
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT