Last Updated : 19 Jul, 2017 10:10 AM

 

Published : 19 Jul 2017 10:10 AM
Last Updated : 19 Jul 2017 10:10 AM

தினுசு தினுசா விளையாட்டு: கிட்டிப்புள் ஆட்டம்

10, 12 பேர் சேர்ந்து கிட்டிப்புள் விளையாடலாம்.

எப்படி விளையாடுவது?

இந்த விளையாட்டில் கலந்துகொள்பவர்கள் ‘உத்திப் பிரித்தல்’ மூலமாக இரண்டு அணிகளாகப் பிரிந்துகொள்ள வேண்டும். பிறகு, ’பூவா தலையா’ போட்டு, முதலில் விளையாடும் அணியைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். ஒன்றரை அடி நீளமுள்ள ஒரு குச்சியை ‘கிட்டி’யாகவும், மூன்று அங்குலம் (8 செ.மீ.) நீளமுள்ள ஒரு சிறு குச்சியை ‘புள்’ளாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். கிட்டியின் ஏதாவது ஒரு முனையையும், புள்ளின் இரு முனைகளையும் கூர்த்தீட்டிக் கொள்ளுங்கள்.

விளையாட ஆரம்பிக்கலாமா?

முதல் அணி, சிறு குழியின் மேலாகக் கிட்டியை வைத்துவிட்டு, ஓரமாக நின்றுகொள்ள வேண்டும். இருபதடி தொலைவில் மற்றோர் அணியின் கையிலுள்ள புள்ளால், கிட்டியை நோக்கி குறி பார்த்து வீச வேண்டும். புள் கிட்டியை அடித்துவிட்டால், முதல் அணியிலுள்ள முதல் போட்டியாளர் ’அவுட்’ ஆவார். பிறகு, முதல் அணியின் இரண்டாவது போட்டியாளர் ஆட்டத்துக்கு வர வேண்டும். மீண்டும் இரண்டாவது அணியினர் கிட்டியை நோக்கி, புள்ளை வீச வேண்டும். இந்த முறை அடிக்காவிட்டால், இரண்டாவது போட்டியாளர் ஆட்டத்தைத் தொடர்வார்.

புள்ளை சிறிய குழியின் மேற்புறத்தில் வைத்து, நடுவில் கிட்டியை வைத்து அப்படியே வேகமாக வீச வேண்டும். இதனைப் பிடிப்பதற்கென்றே இரண்டாவது அணியைச் சேர்ந்தவர்கள் எதிரில் நிற்பார்கள். புள்ளைப் பிடிக்காத பட்சத்தில், அந்தச் சிறுகுழியை நோக்கி புள்ளை அவர்கள் வீசுவார்கள். புள் குழியின் அருகே விழாதவாறு கிட்டியைக்கொண்டு தடுக்க வேண்டும்.

குழியிலிருந்து கிட்டியால் தொடும் தூரத்துக்கு புள் விழுந்துவிட்டால், இரண்டாவது போட்டியாளரும் ‘அவுட்’ ஆவார். ’அவுட்’ ஆகவில்லையென்றால், கிட்டியைக் கொண்டு புள்ளின் நுனிப்பகுதியில் வேகமாகத் தட்டி மேலெழச் செய்ய வேண்டும். அவ்வாறு மேலெழும் புள்ளை கிட்டியால் வேகமாக அடிக்க வேண்டும். இதையும் பிடிப்பதற்கு இரண்டாவது அணியினர் கலைந்து நிற்பார்கள்.

புள்ளை யாரும் பிடிக்காத நிலையில், எவ்வளவு தொலைவில் புள் விழுந்ததோ, அங்கிருந்து புள்ளை கையில் எடுத்துக்கொண்டு, குழி இருக்கும் இடம்வரை இரண்டாவது அணியைச் சேர்ந்த யாரேனும் ஒருவர் நொண்டியடித்தபடி வர வேண்டும்.

(இன்னும் விளையாடலாம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x