Last Updated : 26 Nov, 2014 12:45 PM

 

Published : 26 Nov 2014 12:45 PM
Last Updated : 26 Nov 2014 12:45 PM

ஹை! சூடு குறையாம இருக்கே...

அன்று பவுர்ணமி நாள். ரஞ்சனிக்கும் கவினுக்கும் நீண்ட நாளாக ஒரு ஆசை. பவுர்ணமி நாளில் முழு நிலவு வெளிச்சத்தில் கடற்கரை மணலில் அமர்ந்து நிலாச் சோறு சாப்பிட வேண்டும் என்று. இதற்காகப் பல நாட்களாக அம்மாவிடமும் அப்பாவிடமும், அந்த ஆசையை அவர்கள் சொல்லிக்கொண்டிருந்தனர்.

அவர்கள் இருவரின் ஆசை அன்று நிறைவேறியது. நிலா வெளிச்சத்தில் சாப்பிடுவதற்காக நிறைய பலகாரங்களோடு நிலா டீச்சர் குடும்பத்தினர் கடற்கரைக்குப் புறப்பட்டனர். கடற்கரை மணலில் அமர்ந்து பவுர்ணமி நிலா உதயமாகும் அழகைக் கண்டு ரசித்தனர். நிலவின் பொன்னிற ஒளியில் கவினும் ரஞ்சனியும் ஓடிப் பிடித்து விளையாடி மகிழ்ந்தனர்.

நீண்ட நேரம் விளையாடிக் களைத்த பின் சாப்பிட அமர்ந்தனர். முழு நிலவின் வெளிச்சமும், இதமான கடற்கரைக் காற்றும் சாப்பாட்டுக்குக் கூடுதல் ருசியைத் தந்தன. வயிறாற உண்டு முடித்த பின், பிளாஸ்க்கில் இருந்த காபியை அப்பா ஆளுக் கொரு டம்ளரில் ஊற்றிக் கொடுத்தார்.

அப்போதுதான் அடுப்பில் இருந்து இறக்கியது போல காபி சூடாகவும், சுவையாகவும் இருந்தது. சுவையான அந்த காபியை உறிஞ்சி உறிஞ்சிக் குடித்துக்கொண்டிருந்த கவினுக்குத் திடீரென ஒரு கேள்வி எழுந்தது.

“நாம வீட்டிலேர்ந்து புறப்பட்டு ரெண்டரை மணி நேரத்துக்கு மேல ஆகுது. அதுக்கு முன்னாடியே காபி போட்டு பிளாஸ்குல ஊத்தி வச்சிட்டீங்க. இன்னமும் இந்த காபி சூடாகவே இருக்கு. இது எப்படிம்மா?” என்று நிலா டீச்சரிடம் கேட்டான் கவின்.

“உங்க பாடப் புத்தகத்துலேயே இதுக்கெல்லாம் ஆன்சர் இருக்குதே” என்றார் நிலா டீச்சர்.

“பாடப் புத்தகத்துலயா….?” என்று இழுத்த ரஞ்சனி, “பாடப் புத்தகத்துல எல்லாம் இதுக்கு ஆன்சர் இல்லம்மா” என்றாள்.

“சரி. ஒரு இடத்துலேர்ந்து இன் னோர் இடத்துக்கு வெப்பம் எப்படி நகருது?” என்று கேட்டார் நிலா டீச்சர்.

“வெப்பக் கடத்தல் (Conduction), வெப்பச் சலனம் (Convection), வெப்பக் கதிர்வீச்சு (Radiation) போன்ற 3 முறைகள்ல வெப்பம் இடம்பெயரும்னு பாடப் புத்தகத்திலே சொல்லியிருக்கும்மா” என்றாள் ரஞ்சனி.

“பாடப் புத்தகத்துலே இதெல்லாம் இல்லன்னு சொன்னியே” என்றார் நிலா டீச்சர்.

“பிளாஸ்க்ல ஊத்தி வச்ச காபி எப்படிச் சூடாகவே இருக்குன்னு கேட்டதுக்கு, நேரடியா ஆன்சர் இல்லேன்னுதானே சொன்னேன்” என்றாள் ரஞ்சனி.

“ஓகே… ஓகே… இப்போ நான் சொல்றேன்” என்று நிலா டீச்சர் விளக்கத் தொடங்கினார்.

“ஒரு துகளுக்குத் தரப்படும் வெப்பம் பக்கத்துல இருக்கிற அடுத்த துகளுக்கு மாற்றப்படுறதுதான் வெப்பக் கடத்தல். உதாரணத்துக்குக் கொதிச்சுக்கிட்டு இருக்கிற சாம்பார் சட்டியில் ஒரு கரண்டிய போட்டு வச்சோம்னா கொஞ்ச நேரத்துல, நேரடியா வெப்பம் படாத கரண்டியின் கைப்பிடியும் சுடும். வெப்பக் கடத்தல்தான் இதுக்கு காரணம்.

தண்ணிய கொதிக்க வைக்கிறப்போ, முதல்ல பாத்திரத்தோட அடியில இருக்கிற நீர் மூலக்கூறுகள் வெப்பமடையுது. அப்படி வெப்பமடைஞ்ச மூலக்கூறுகள் மேலே வரும்போது, மேலேயிருக்கிற குளிர்ச்சியான நீர் மூலக்கூறுகளுக்கும் கடத்தப்படுது. கொஞ்ச நேரத்துல பாத்திரத்துல இருக்கிற எல்லா தண்ணியும் சுடுது. வெப்பமடைஞ்ச ஒரு பொருள் இன்னொரு இடத்துக்கு நகர்ந்து அந்த இடத்துல உள்ள பொருளையும் சூடுபடுத்துறதைத்தான் வெப்பச் சலனம்னு சொல்றோம்.

வெளிச்சம், நுண் அலைகள் போன்றவை மூலமா வெப்பம் இடம் மாறுவதை வெப்பக் கதிர்வீச்சுன்னு சொல்றோம். சூரியனிலிருந்து பூமிக்கு வெப்பம் கிடைக்க, இந்த வெப்பக் கதிர்வீச்சு முறைதான் காரணம்.

இந்த மூன்று முறைகளில் வெப்பம் இடம்பெயர்வதும் பிளாஸ்க்கில் தடுக்கப்படுது. அதனாலதான் பிளாஸ்க் கில் ஊத்தி வைச்ச காபி சூடாகவே இருக்கு” என்றார் நிலா டீச்சர்.

“பிளாஸ்க்கில் எப்படி வெப்பம் இடம்பெயர்வது தடுக்கப்படுதுன்னு விளக்கமா சொல்லுங்கம்மா?” என்றான் கவின்.

விரிவாக விளக்கம் அளிக்க ஆரம்பித்தார் நிலா டீச்சர்.

“வெப்பக் கடத்தல், வெப்பச் சலனம் இந்த ரெண்டும் நடக்கணும்னா ஏதாவது ஒரு ஊடகம் (Medium) வேணும். பிளாஸ்கின் உள்ளே ரெண்டு கண்ணாடி குடுவைகள் இருக்கும். உடைஞ்சு போன பிளாஸ்குகள்ல ரெண்டு குடுவைகள் இருக்கிறத நாம பார்த்திருப்போம். அந்த ரெண்டு கண்ணாடி குடுவைகளுக்கும் இடையே உள்ள காற்றை முழுவதும் வெளியேத்திட்டு, அந்த இடம் முழுவதும் வெற்றிடமா வச்சு பிளாஸ்க்கை தயாரிக்கிறாங்க.

ரெண்டு கண்ணாடி குடுவைகளுக்கும் இடையே வெற்றிடம் மட்டும் இருப்பதால வெப்பக் கடத்தல் நடக்கவோ, வெப்பச் சலனம் நடக்கவோ ஊடகம் எதுவும் கிடைக்காது. அதனால இந்த ரெண்டு வழிகளில் வெப்பம் இடம் மாற வாய்ப்பே இல்லை.

இன்னும் ஒரே வாய்ப்பு வெப்பக் கதிர்வீச்சு மட்டும்தான். இந்த வெப்பக் கதிர்வீச்சை தடுக்குறதுக்காக ரெண்டு கண்ணாடி குடுவைகளின் உள்ளேயும், வெளியேயும் வெள்ளி முலாம் பூசியிருப்பாங்க. இந்த வெள்ளி முலாம் பூச்சு வெளிச்சத்தை எதிரொளிக்கும். இதனால உள்ளேயிருந்து வெளியேயோ அல்லது வெளியேயிருந்து உள்ளேயே வெப்பக் கதிர்வீச்சால் வெப்பம் இடம்மாறும் வாய்ப்பும் தடுக்கப்படுது.

இதனாலதான் பிளாஸ்க்கில சூடா ஒரு திரவத்தை ஊத்தி வைச்சா சூடாகவே இருக்குது. அதேபோல குளிர்ச்சியான பொருளை வைச்சா குளிர்ச்சியாவே இருக்கும்” என்று சொல்லி முடித்தார் நிலா டீச்சர்.

பவுர்ணமி நிலா வெளிச்சத்தில் வயிறு நிறைய உண்டதோடு, அறிவுப் பசிக்கும் தீனி கொடுக்கும் வகையில் விஞ்ஞான விளக்கங்களுடன் உற்சாகத்தோடு கவினும் ரஞ்சனியும் கடற்கரையில் இருந்து வீட்டுக்குப் புறப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x